தயம்மும்

'ஒருவர் உமர்(ரலி) அவர்களிடம் வந்து 'நான் குளிப்புக் கடமையானவனாக ஆம்விட்டேன். தண்ணீர் கிடைக்கவில்லை. என்ன செய்யவேண்டும்?' என்று கேட்டபோது, அங்கிருந்த அம்மார் இப்னு யாஸிர்(ரலி) உமர்(ரலி) அவர்களிடம், 'நானும் நீங்களும் ஒரு பயணத்தில் சென்றோம். (அப்போது தண்ணீர் கிடைக்காததால்) நீங்கள் தொழவில்லை; நானோ மண்ணில் புரண்டுவிட்டுத் தொழுதேன். இந்நிகழ்ச்சியை நபி(ஸல்) அவர்களிடம் நான் சொன்னபோது நபி(ஸல்) அவர்கள் தங்களின் இரண்டு கைகளையும் தரையில் அடித்து, அவற்றில் ஊதிவிட்டு அவ்விரு கைகளால் தங்களின் முகத்தையும் இரண்டு முன்கைகளையும் தடவிக் காண்பித்து 'இவ்வாறு செய்திருந்தால் அது உனக்குப் போதுமானதாக இருந்தது' எனக் கூறிய சம்பவம் உங்களுக்கு நினைவில்லையா?' என்று கேட்டார்கள்" என அப்துர்ரஹ்மான் அப்ஸா(ரலி) கூறினார்.


தயம்மும்

'நானும் நபி(ஸல்) அவர்களின் மனைவியான மைமூனாவின் அடிமை அப்துல்லாஹ் இப்னு யஸாரும் அபூ ஜுஹைம் இப்னு அல்ஹாரிது இப்னு அஸ்ஸிம்மத்தில் அன்ஸாரி(ரலி) அவர்களிடம் சென்றோம். 'எங்களிடம் நபி(ஸல்) அவர்கள் 'பீர்ஜமல்' என்ற இடத்திலிருந்து வந்து கொண்டிருந்தார்கள். அப்போது ஒருவர் அவர்களை சந்தித்து ஸலாம் கூறியதற்கு, நபி(ஸல்) அவர்கள் பதில் சொல்லாமல் ஒரு சுவர் பக்கம் சென்று (அதில் கையை அடித்து) தங்களின் முகத்தையும் இரண்டு கைகளையும் தடவிய பின்னர் அவரின் ஸலாத்திற்கு பதில் கூறினார்கள்' என்று அபூ ஜுஹைம்(ரலி) கூறினார்" என உமைர் என்பவர் அறிவித்தார்.


தயம்மும்

'ஆயிஷா (தங்களின் சகோதரி) அஸ்மாவிடமிருந்து ஒரு கழுத்தணியை இரவல் வாங்கியிருந்தார். அந்தக் கழுத்தணி காணாமல் போனது. இதை அறிந்த நபி(ஸல்) அவர்கள் ஒரு மனிதரை அனுப்பி அந்தக் கழுத்தணியைத் தேடி வருமாறு கூறினார்கள். தேடிப்போனவர் அதைக் கண்டெடுத்தார். தேடிப் போன அந்த இடத்தில் தொழுகையின் நேரம் வந்துவிட்டது. அவர்களிடம் தண்ணீர் இருக்கவில்லை. எனவே (உளூவின்றித்) தொழுதுவிட்டார். இதைப் பற்றி நபி(ஸல்) அவர்களிடம் முறையிட்டார். அப்போது அல்லாஹ் தயம்முடைய வசனத்தை அருளினான். அப்போது உஜைத் இப்னு ஹுளைர் என்பவர் ஆயிஷா(ரலி) அவர்களிடம் 'அல்லாஹ் உங்களுக்கு நற்கூலியைத் தருவானாக! அல்லாஹ்வின் மீது ஆணையாக நீங்கள் வெறுக்கக் கூடிய எந்த ஒரு விஷயம் உங்களுக்கு ஏற்பட்டாலும், அதை உங்களுக்கும் மற்ற முஸ்லிம்களுக்கும் நலமானதாக அல்லாஹ் ஆக்கி விடுகிறான்' என்று கூறினார்" என உர்வா அறிவித்தார்.


தயம்மும்

'எனக்கு முன்னர் யாருக்கும் கொடுக்கப்படாத ஐந்து விஷயங்கள் எனக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. எதிரிகளுக்கும் எனக்குமிடையில் ஒரு மாத காலம் பயணம் செய்யும் இடைவெளியிருந்தாலும் அவர்களின் உள்ளத்தில் பயம் ஏற்படுத்தப்படுவதன் மூலம் நான் உதவப்பட்டுள்ளேன். பூமி முழுவதும் சுத்தம் செய்யத் தக்கதாகவும் தொழுமிடமாகவும் எனக்கு ஆக்கப்பட்டுள்ளது. என்னுடைய சமுதாயத்தில் தொழுகையின் நேரத்தை அடைந்தவர் (இருக்கும் இடத்தில்) தொழுதுகொள்ளட்டும்! போரில் கிடைக்கிற பொருள்கள் எனக்கு ஹலாலாக்கப்பட்டுள்ளன. எனக்கு முன்பு ஹலாலாக்கப்பட்டதில்லை. (மறுமையில்) சிபாரிசு செய்யும் வாய்ப்புக் கொடுக்கப்பட்டுள்ளேன். ஒவ்வொரு நபியும் தங்களின் சமூகத்திற்கு மட்டுமே நபியாக அனுப்பட்டார்கள். ஆனால், மனித இனம் முழுமைக்கும் நபியாக அனுப்பப்பட்டுள்ளேன்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.


தயம்மும்

நாங்கள் ஒரு பயணத்தில் நபி(ஸல்) அவர்களுடன் சென்றோம். 'பைதாவு' அல்லது 'தாத்துல் ஜைஷ்' என்ற இடத்தை வந்தடைந்ததும் என்னுடைய கழுத்தணி அறுந்து (தொலைந்து)விட்டது. அதைத்தேடுவதற்காக நபி(ஸல்) அவர்களும் மற்றவர்களும் அந்த இடத்தில் தங்கினோம். நாங்கள் தங்கிய இடத்தில் தண்ணீர் இல்லை. அப்போது அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் சிலர் வந்து, '(உங்கள் மகளான) ஆயிஷா செய்ததை நீங்கள் பார்த்தீர்களா? நபி(ஸல்) அவர்களையும் மக்களையும் இங்கே தங்கச் செய்துவிட்டார். அவர்கள் தங்கிய இடத்திலும் தண்ணீர் இல்லை; அவர்களுடனும் தண்ணீர் எடுத்து வரவில்லை' என்று முறையிட்டனர். அபூ பக்ர்(ரலி) (என்னருகே) வந்தபோது நபி(ஸல்) அவர்கள் தங்களின் தலையை என்னுடைய மடி மீது வைத்துத் தூங்கிக் கொண்டிருந்தார்கள். 'நபி(ஸல்) அவர்களையும் மக்களையும் தங்க வைத்துவிட்டாயே? அவர்கள் தங்கிய இடத்திலும் தண்ணீர் இல்லை; அவர்களிடமும் தண்ணீர் இல்லை' என்று கூறினார்கள். அவர்கள் எதைச் சொல்ல அல்லாஹ் நாடினானோ அதையெல்லாம் சொல்லிவிட்டு, தங்களின் கையால் என்னுடைய இடுப்பில் குத்தினார்கள். நபி(ஸல்) அவர்களின் தலை என் மடியின் மீது இருந்ததால் நான் அசையாது இருந்தேன். நபி(ஸல்) அவர்கள் காலையில் விழித்தெழிந்தபோதும் தண்ணீர் கிடைக்கவில்லை. அப்போது அல்லாஹ் தயத்தின் வசனத்தை அருளினான். எல்லோரும் தயம்மும் செய்தார்கள்.
இது பற்றிப் பின்னர் உஜைத் இப்னு ஹுளைர்(ரலி) 'அபூ பக்ரின் குடும்பத்தார்களே! உங்களின் மூலமாக ஏற்பட்ட பரக்கத்துக்களில் இது முதலாவதாக இல்லை. (இதற்கு முன்பும் உங்களின் மூலம் எத்தனையோ பரக்கத்துக்கள் ஏற்பட்டுள்ளன)' எனக் கூறினார். அப்போது நான் இருந்த ஒட்டகத்தை எழுப்பியபோது அதனடியில் (காணாமல் போன) என் கழுத்தணி கிடந்ததைக் கண்டோம்"என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.


மாதவிடாய்

'எனக்கு மாதவிடாய் ஏற்படும்போது நான் தொழுவதில்லை. அந்நிலையில் நபி(ஸல்) அவர்களின் பள்ளிவாசலின் அருகில் படுத்திருந்தேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் சிறிய பாயில் தொழுது கொண்டிருந்தார்கள். ஸஜ்தாச் செய்யும்போது அவர்கள் அணிந்திருந்த ஆடையின் ஒரு பகுதி என் மீது படும்" என்று மைமூனா(ரலி) அறிவித்தார்.


மாதவிடாய்

'ஒரு பெண் பிரசவ நேரத்தில் இறந்தபோது அவருக்கு நபி(ஸல்) ஜனாஸாத் தொழுகை நடத்தினார்கள். தொழுகையின்போது ஜனாஸாவின் நடுப்பகுதிக்கு நேராக நின்றார்கள்" என ஸமுரா இப்னு ஜுன்துப்(ரலி) அறிவித்தார்.


மாதவிடாய்

'மாதவிடாய் ஏற்படும்போது தொழுகையைவிட்டுவிடு. மாதவிடாய்க் காலம் கழிந்ததும் இரத்ததைச் சுததம் செய்துவிட்டுத் தொழுது கொள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.


மாதவிடாய்

'ஹஜ்ஜில் ஒரு பெண்ணிற்கு மாதவிடாய் ஏற்பட்டால் அவள் சுத்தமான பின்னர் தவாஃபை நிறைவேற்றிவிட்டுத்தான் வீடு செல்ல வேண்டும்' என இப்னு உமர் ஆரம்பகாலத்தில் சொல்லியிருந்தார். ஆனால் பின்னர் 'அவள் வலம் வராமலே வீடு திரும்பலாம்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என இப்னு உமர்(ரலி) கூறினார்" என தாவூஸ் அறிவித்தார்.


மாதவிடாய்

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். ஹஜ்ஜில் ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் (தவாஃப் செய்யாமல்) வீடு திரும்புதல் அனுமதிக்கப்பட்டிருக்கிறது.


மாதவிடாய்

'ஹஜ்ஜின்போது நான் நபி(ஸல்) அவர்களிடம் ஸஃபியாவுக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது' எனக் கூறினேன். அதற்கு நபியவர்கள் 'அவள் நம்மைப் பயணத்தைவிட்டு நிறுத்தி விடுவாள் போலிருக்கிறதே! உங்களுடன் அவள் தவாஃப் செய்யவில்லையா?' என்று கேட்டார்கள். 'தவாஃப் செய்துவிட்டார்' என (அங்கிருந்தோர்) கூறினார்கள். 'அப்படியானால் புறப்படுங்கள்' என்று நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.


மாதவிடாய்

'உம்மு ஹபீபா என்ற பெண் ஏழு ஆண்டுகள் உதிரப் போக்குடையவராக இருந்தார். இது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்டபோது, குளிக்குமாறு அவர்களுக்குக் கட்டளையிட்டு, 'இது ஒரு நோய்' என்று கூறினார்கள். (இதனால்) ஒவ்வொரு தொழுகைக்கும் அப்பெண் குளிப்பவராக இருந்தார்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.


மாதவிடாய்

'மாதவிடாய் அல்லாத நாள்களில் வெளிப்படும் மஞ்சள் நிற இரத்தத்தையும் ஒருவகை மண்நிற இரத்தத்தையும் மாதவிடாயாக நாங்கள் கருதுவதில்லை" என உம்மு அதிய்யா(ரலி) அறிவித்தார்.


மாதவிடாய்

'பாத்திமா பின்த் அபீ ஹுபைஷ் என்ற பெண், நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! நான் (இரத்தப் போக்கிலிருந்து) சுத்தமாவதே இல்லை. எனவே நான் தொழுகையை விடலாமா?' என்று கேட்டதற்கு, 'கூடாது. அது ஒரு நரம்பு நோய்; மாதவிடாய் இரத்தமன்று. மாதவிடாய் ஏற்படும் நாள்களின் அளவுக்குத் தொழுகையைவிட்டுவிடு. பின்னர் தொழுது கொள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.


மாதவிடாய்

நாங்கள் இரண்டு பெருநாள்களிலும் தொழும் இடத்திற்குச் செல்வதைவிட்டும் எங்கள் குமரிப் பெண்களைத் தடுத்துக் கொண்டிருந்தோம். அப்போது ஒரு பெண் வந்து பனீ கலஃப் வம்சத்தினரின் இல்லத்தில் தங்கியிருந்தார். அவர் தங்களின் சகோதரி (உம்மு அதிய்யா) வழியாக வந்த செய்தியை அறிவித்தார். அவரின் சகோதரி (உம்மு அதிய்யா) நபி(ஸல்) அவர்களோடு தம் கணவர் பங்கெடுத்த பன்னிரண்டு போர்களில் ஆறு போர்களில் கணவரோடு இருந்தார்.
'நாங்கள் போர்க்களத்தில் காயமுற்றவர்களுக்குச் சிகிச்சையளிப்போம். நோயாளியைக் கவனிப்போம். நான் நபி(ஸல்) அவர்களிடம் எங்களில் ஒருத்திக்கு மேலங்கி இல்லாவிட்டால் (பெரு நாள் தொழுகைக்கு) செல்லாமல் இருப்பது குற்றமா?' என நான் கேட்டதற்கு, 'அவளுடைய தோழி தன்னுடைய உபரியான மேலங்கியை அவளுக்கு அணியக் கொடுக்கட்டும். அவள் நன்மையான காரியங்களிலும் முஸ்லிம்கதளின் பிரச்சாரத்திலும் கலந்து கொள்ளட்டும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என்றார்.
உம்மு அதிய்யா(ரலி) வந்தபோது 'நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு கூற நீங்கள் கேட்டீர்களா?' என நான் கேட்டதற்கு 'என்னுடைய தந்தை அர்ப்பணமாகட்டும்; ஆம்! கேட்டேன்' எனக் கூறினார். இவர் நபி(ஸல்) அவர்களின் பெயரைக் கூறும் போதெல்லாம் 'என்னுடைய தந்தை அர்ப்பணமாகட்டும்' என்பதையும் சேர்த்தே கூறுவார்.
'கன்னிப் பெண்களும் மாதவிடாய்ப் பெண்களும் (பெருநாளன்று) வெளியே சென்று நன்மையான காரியங்களிலும் முஸ்லிம்களின் பிரச்சாரத்திலும் பங்கு கொள்வார்கள். பெருநாள் தொழுகை நடக்கும் இடத்திற்குச் செல்லும் மாதவிடாய்ப் பெண்கள் தொழும் இடத்தைவிட்டு ஒதுங்கி இருப்பார்கள்' என்றும் உம்மு அதிய்யா(ரலி) கூறினார். இதைக் கேட்ட நான் மாதவிடாய்ப் பெண்களுமா? எனக் கேட்டதற்கு, 'மாதவிடாய்ப் பெண் அரஃபாவிலும் மற்ற (மினா முஸ்தலிஃபா போன்ற) இடங்களுக்கும் செல்வதில்லையா?' என்று உம்மு அதிய்யா(ரலி) கேட்டார்" என ஹஃப்ஸா அறிவித்தார்.


மாதவிடாய்

நான் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு போர்வையைப் போர்த்திப்படுத்துக் கொண்டிருந்தேன். அப்போது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டது. மாதவிடாய்க் காலத்தில் அணியும் துணியை எடுப்பதற்காக நபி(ஸல்) அவர்களுக்குத் தெரியாதவாறு அந்த இடத்தைவிட்டு நகர்ந்தேன். 'உனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டதா?' என்று நபி(ஸல்) அவர்கள் என்னை அழைத்தார்கள். நான் அவர்களோடு போர்வைக்குள் படுத்துக்கொண்டேன்" என உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார்.


மாதவிடாய்

நான் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு போர்வையைப் போர்த்திப் படுத்துக் கொண்டிருந்தபோது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டது. மாதவிடாய்க் காலத்தில் அணியும் துணியை எடுப்பதற்காக நபி(ஸல்) அவர்களுக்குத் தெரியாதவாறு அந்த இடத்தைவிட்டு நகர்ந்து அதை அணிந்தேன். 'உனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டதா?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். 'ஆம்' என்றேன். ஆயினும், அவர்கள் என்னை(த் தம்மருகில்) அழைத்தார்கள். நான் அவர்களோடு போர்வைக்குள் படுத்துக் கொண்டேன்" என்றும்,
"நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும்போது என்னை முத்தமிடுவார்கள். நானும் நபி(ஸல்) அவர்களும் ஒரே பாத்திரத்திலிருந்து கடமையான குளிப்பை நிறைவேற்றுவோம்" என்றும் உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார்.


மாதவிடாய்

'பெண்கள் மாதவிடாயிலிருந்து சுத்தமான பின்னர் தொழுதால் மட்டும் போதுமா?' என்று ஒரு பெண் ஆயிஷா(ரலி) அவர்களிடம் கேட்டதற்கு, 'நீ 'ஹரூர்' எனும் இடத்தைச் சார்ந்த பெண்ணா? நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் இருக்கும்போது எங்களுக்கு மாதவிடாய் ஏற்படும். அப்போது எங்களிடம் விடுபட்ட தொழுகையைத் தொழுமாறு ஏவ மாட்டார்கள்' என்று அல்லது அத்தொழுகையை நாங்கள் தொழ மாட்டோம்" என்று ஆயிஷா(ரலி) கூறினார்" என முஆதா அறிவித்தார்.


மாதவிடாய்

'பாத்திமா பின்த் அபீ ஹுபைஷ் என்ற பெண் உதிரப் போக்குடையவராக இருந்தார். நபி(ஸல்) அவர்களிடம் அப்பெண் (இது குறித்து) கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள் 'அது ஒரு நரம்பு நோய். அது மாதவிடாய் இரத்தமன்று. மாதவிடாய் ஏற்படும்போது தொழுகையைவிட்டுவிடு. மாதவிடாய்க் காலம் கழிந்ததும் குளித்துவிட்டுத் தொழுது கொள்' என்று கூறினார்கள்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.


மாதவிடாய்

நபி(ஸல்) அவர்களின் இறுதி ஹஜ்ஜின்போது நபி(ஸல்) அவர்களோடு சென்றோம். எங்களில் உம்ரா செய்வதற்காக இஹ்ராம் அணிந்தவர்களும் இருந்தனர். ஹஜ் செய்வதற்காக இஹ்ராம் அணிந்தவர்களும் இருந்தனர். நாங்கள் மக்காவை அடைந்ததும் 'உங்களில் குர்பானிப் பிராணியைத் தம்முடன் கொண்டு வராமல் உம்ராவிற்காக இஹ்ராம் அணிந்தவர்கள் (உம்ரா கடமைகளை நிறைவேற்றிவிட்டு) இஹ்ராமிலிருந்து விலம்க் கொள்ளலாம். உம்ராவிற்காக இஹ்ராம் அணிந்து தங்களுடன் குர்பானிப் பிராணியைக் கொண்டு வந்திருப்பவர்கள் தங்களின் குர்பானியைப் பத்தாவது நாளன்று அறுக்கும் வரை தங்களின் இஹ்ராமிலிருந்து விலக வேண்டாம். ஹஜ்ஜிற்காக மட்டும் இஹ்ராம் அணிந்திருப்பவர்கள் தங்களின் ஹஜ்ஜை நிறைவேற்றட்டும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அப்போது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. அது அரஃபா நாள் வரை நீடித்தது. நான் உம்ராவிற்காகத்தான் இஹ்ராம் அணிந்திருந்தேன். (இதை நபி(ஸல்) அவர்களிடம் தெரிவித்தேன்) என்னுடைய தலை முடியை அவிழ்த்துவிட்டு அதை வாரி விடுமாறும், நான் உம்ராவிற்காக இஹ்ராம் அணிந்ததைவிட்டுவிட்டுத் திரும்ப ஹஜ்ஜிற்காக இஹ்ராம் அணிந்து கொள்ளுமாறும் எனக்குக் கட்டளையிட்டார்கள். நான் அவ்வாறே செய்தேன். என்னுடைய ஹஜ்ஜை நிறைவேற்றிய பின்னர் என்னுடன் (என்னுடைய சகோதரர்) அப்துர்ரஹ்மானை அனுப்பி, தன்யீம் என்ற இடத்திலிருந்து எனக்குவிடுபட்ட உம்ராவிற்காக இஹ்ராம் அணிந்து வருமாறு நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
சில பெண்கள் மாதவிடாய் செல்லும் இடத்தில் வைத்துக் கட்டிய பஞ்சு மஞ்சள் நிறமாக இருக்கும்போது அதை ஆயிஷா(ரலி) அவர்களிடம் அனுப்பி மாதவிடாய் இரத்தம் நின்றுவிட்டதா இல்லையா என்பதைத் தெரிந்து கொள்வார்கள். அப்போது 'மாதவிடாய் செல்லும் இடத்தில் வைக்கப்படும் பஞ்சு வெள்ளை நிறமாகக் காணும் வரை நீங்கள் அவசரப்பட்டு மாதவிடாயிலிருந்து சுத்தமாம் விட்டீர்கள் என்று கருதவேண்டாம்' என்று அப்பெண்களுக்கு ஆயிஷா(ரலி) கூறினார். சில பெண்கள் நடு இரவில் விளக்குகளைக் கொண்டு வரச் செய்து மாதவிடாயிலிருந்து சுத்தமாம் விட்டோமா என்பதைப் பார்ப்பார்கள் என்ற செய்தி ஜைத் இப்னு ஸாபித்(ரலி) அவர்களின் மகளுக்குக் கிடைத்தபோது, 'நபி(ஸல்) காலத்துப் பெண்மணிகள் இப்படியெல்லாம் செய்ய மாட்டார்கள்' என்று இப்படி செய்யும் பெண்களைக் குறை கூறினார்கள்"


மாதவிடாய்

'அல்லாஹ் கர்ப்பப் பையில் ஒரு வானவரை நியமிக்கிறான். கர்ப்பப் பையில் விந்து செலுத்தப்பட்ட பின்னர் அதன் ஒவ்வொரு நிலையிலும் மாற்றம் ஏற்படும்போது அந்த வானவர், 'யா அல்லாஹ்! இப்போது விந்தாக இருக்கிறது. யா அல்லாஹ்! இப்போது 'அலக்' (கருப்பைச் சுவற்றின் தொங்கும்) எனும் நிலையில் இருக்கிறது. யா அல்லாஹ்! இப்போது சதைத் துண்டாக இருக்கிறது' என்று கூறிவருவார். அல்லாஹ் அதை உருவாக்க நாடினால் அது ஆணா? பெண்ணா? நல்லவனா? கெட்டவனா? என்பதையும் அவனுக்குச் கொடுக்கவிருக்கும் செல்வம் எவ்வளவு? அவனுடைய வாழ்நாள் எவ்வளவு? என்பதையும் கூறிவிடுகிறான். மனிதன் தன் தாயின் வயிற்றில் இருக்கும் போதே இவை எழுதப்பட்டு விடுகின்றன' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என அனஸ்(ரலி) அறிவித்தார்.


மாதவிடாய்

துல்ஹஜ் மாதப் பிறையைப் பயணத்தில் அடையும் நிலையில் புறப்பட்டோம். அப்போது 'உம்ராச் செய்ய விரும்புவோர் உம்ராவிற்காக இஹ்ராம் அணிந்து கொள்ளட்டும். நான் என்னுடன் அறுத்துக் கொடுப்பதற்குரிய பிராணியைக் கொண்டு வராதிருந்தால் உம்ராவிற்காக இஹ்ராம் அணிந்திருப்பேன்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது சிலர் உம்ராவிற்காக வேறு சிலர் ஹஜ்ஜிற்காகவும் இஹ்ராம் அணிந்தனர். உம்ராவிற்காக இஹ்ராம் அணிந்தவர்களுடன் இருந்தேன். நான் மாதவிடாயுடன் இருந்தபோது அரஃபா நாள் வந்தது. நபி(ஸல்) அவர்களிடம் இது பற்றி முறையிட்டேன். 'நீ உன்னுடைய உம்ராவைவிட்டு விடு; உன்னுடைய தலைமுடியை அவிழ்த்து அதை வாரி விடு; பின்னர் ஹஜ்ஜிற்காக இஹ்ராம் அணிந்து கொள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நானும் அவ்வாறே செய்தேன். ஹஸ்பாவில் தங்கிய இரவு என்னுடைய சகோதரர் அப்துர் ரஹ்மானை நபி(ஸல்) என்னுடன் அனுப்பினார்கள். தன்யீம் என்ற இடத்திற்குச் சென்று எனக்கு விடுபட்ட உம்ராவிற்காக அங்கிருந்து இஹ்ராம் அணிந்தேன்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
"இந்த முறையில் செய்த எதிலும் அறுத்துப் பலியிடுவதோ, நோன்பு நோற்பதோ மற்றும் தர்மம் கொடுப்பதோ இருக்கவில்லை" என்று ஹிஷாம் குறிப்பிடுகிறார்.


மாதவிடாய்

நான் நபி(ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜதுல் வதாவின்போது இஹ்ராம் அணிந்தேன். அறுத்துக் கொடுப்பதற்குரிய கால் நடையைக் கொண்டுவராத ஹஜ்ஜின் 'தமத்துவ்' என்ற வகையை நிறைவேற்றுபவர்களுடன் இருந்தேன். மாதவிடாய் ஏற்பட்டுவிட்டதை உணர்ந்தேன். அரஃபாவின் இரவு வரும் வரை நான் சுத்தமாகவில்லை. அப்போது நான் நபி(ஸல்) அவர்களிடம் இறைத்தூதர் அவர்களே! இன்று அரஃபாவின் இரவு. நான் 'உம்ரா'ச் செய்துவிட்டுத் திரும்ப இஹ்ராம் அணிந்து ஹஜ் செய்வதாக நினைத்திருந்தேன் என்றேன். 'உன்னுடைய தலைமுடியை அவிழ்த்து அதை வாரிவிட்டு உம்ரா செய்வதை நிறுத்தி விடு. (ஹஜ்ஜிற்கு இஹ்ராம் அணிந்து கொள்)' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அவ்வாறே நானும் செய்தேன். ஹஜ்ஜின் கிரியைகளை முடித்த பின்பு, ஹஸ்பாவில் தங்கிய இடத்திலிருந்து தன்யீம் என்ற இடத்திற்குச் சென்று, எனக்கு விடுபட்ட உம்ராவிற்கு அங்கிருந்து இஹ்ராம் அணிந்து வருவதற்காக என்னை கூட்டிச் செல்லுமாறு (என் சகோதரர்) அப்துர்ரஹ்மானிடம் நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.


மாதவிடாய்

நான் நபி(ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜதுல் வதாவின்போது இஹ்ராம் அணிந்தேன். அறுத்துக் கொடுப்பதற்குரிய கால் நடையைக் கொண்டுவராத ஹஜ்ஜின் 'தமத்துவ்' என்ற வகையை நிறைவேற்றுபவர்களுடன் இருந்தேன். மாதவிடாய் ஏற்பட்டுவிட்டதை உணர்ந்தேன். அரஃபாவின் இரவு வரும் வரை நான் சுத்தமாகவில்லை. அப்போது நான் நபி(ஸல்) அவர்களிடம் இறைத்தூதர் அவர்களே! இன்று அரஃபாவின் இரவு. நான் 'உம்ரா'ச் செய்துவிட்டுத் திரும்ப இஹ்ராம் அணிந்து ஹஜ் செய்வதாக நினைத்திருந்தேன் என்றேன். 'உன்னுடைய தலைமுடியை அவிழ்த்து அதை வாரிவிட்டு உம்ரா செய்வதை நிறுத்தி விடு. (ஹஜ்ஜிற்கு இஹ்ராம் அணிந்து கொள்)' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அவ்வாறே நானும் செய்தேன். ஹஜ்ஜின் கிரியைகளை முடித்த பின்பு, ஹஸ்பாவில் தங்கிய இடத்திலிருந்து தன்யீம் என்ற இடத்திற்குச் சென்று, எனக்கு விடுபட்ட உம்ராவிற்கு அங்கிருந்து இஹ்ராம் அணிந்து வருவதற்காக என்னை கூட்டிச் செல்லுமாறு (என் சகோதரர்) அப்துர்ரஹ்மானிடம் நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.


மாதவிடாய்

'அன்ஸாரிப் பெண்களில் ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து 'மாதவிடாயில் இருந்த நான் சுத்தமாவதற்காக எவ்வாறுக் குளிக்க வேண்டும்?' எனக் கேட்டார். 'கஸ்தூரி கலந்த பஞ்சை எடுத்து நீ சுத்தம் செய்' என மூன்று முறை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். பின்னர் அவர்கள் வெட்கப்பட்டுத் தங்களின் முகத்தைத் திருப்பினார்கள். அல்லது 'அதைக் கொண்டு நீ சுத்தம் செய்' என்று கூறினார்கள். அப்போது நான் அந்தப் பெண்ணைப் பிடித்து என் பக்கம் இழுத்து நபி(ஸல்) அவர்கள் என் பக்கம் இழுத்து நபி(ஸல்) அவர்கள் என்ன குறிப்பிடுகிறார்கள் என்பதை அவளுக்கு விளக்கினேன்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.


மாதவிடாய்

'இறந்தவர்களுக்காக மூன்று நாள்களுக்கு மேல் துக்கத்தை வெளிப்படுத்துவதற்கு தடுக்கப்பட்டுள்ளோம். ஆனால் கணவன் இறந்த பின்னர் அவனுடைய மனைவி நான்கு மாதம் பத்து நாள்கள் துக்கத்தை வெளிப்படுத்த வேண்டும். இந்த நாள்களில் நாங்கள் சுருமா இடவோ, மணப் பொருட்களைப் பூசவோ, சாயமிடப் பட்ட ஆடைகளை அணியவோ கூடாது. ஆனால் நெய்வதற்கு முன் நூலில் சாயமிடப்பட்டு தயாரிக்கப்பட்ட ஆடைகளை அணியலாம். எங்களில் ஒருத்தி மாதவிடாயிலிருந்து நீங்கக் குளிக்கும்போது மணப் பொருளைப் பயன்படுத்துவது அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜனாஸாவைப் பின்தொடர்ந்து செல்வதைவிட்டும் தடுக்கப்பட்டுள்ளோம்" என உம்மு அதிய்யா(ரலி) அறிவித்தார்.


மாதவிடாய்

'எங்களில் ஒருவருக்கு ஓர் ஆடை மட்டுமே இருக்கும். அதில்தான் அவரின் மாதவிடாய் ஏற்படும். ஏதாவது இரத்தம் அந்த ஆடையில் பட்டால் தங்களின் எச்சிலைத் தொட்டு அந்த இடத்தில் வைத்துத் தங்களின் நகத்தால் சுரண்டி விடுவார்கள்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.


மாதவிடாய்

'இறைநம்பிக்கையாளர்களின் தாயான ஒருவர் உதிரப் போக்குள்ள நிலையிலும் இஃதிகாப் இருந்தார்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.


மாதவிடாய்

'நபி(ஸல்) அவர்களின் மனைவியரில் ஒருவர் மஞ்சள் நிற உதிரப் போக்கு இரத்தத்தைக் காணும்போது தமக்கடியில் ஒரு தட்டை வைத்து நபி(ஸல்) அவர்களுடன் இஃதிகாப் இருந்தவாறு தொழுதார்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.


மாதவிடாய்

நபி(ஸல்) அவர்களின் மனைவியரில் ஒருவர் உதிரப் போக்கினால் இரத்தத்தைக் காண்பவராக இருந்த நிலையில் நபி(ஸல்) அவர்களுடன் இஃதிகாப் இருந்தார்கள். சில வேளை இரத்தத்தின் காரணமாக தமக்குக் கீழே ஒரு தட்டை வைத்துக் கொள்வார்கள்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
"மஞ்சள் நிற நீரைப் பார்த்ததாகவும் 'இது இன்னவளுக்கு ஏற்படுகிற ஒன்றைப் போன்றே' என்று ஆயிஷா(ரலி) கூறினார்" என்றும் இக்ரிமா கூறினார்.


மாதவிடாய்

எங்களில் ஒருவருக்கு மாதவிடாய் ஏற்படும்போது அவர் தன்னுடைய ஆடையில் இரத்தம் பட்ட இடத்தைச் சுத்தம் செய்வதற்காகஆடையிலிருந்து இரத்ததைச் சுரண்டிவிட்டு, அந்த இடத்தைக் கழுவியப் பின்னர் ஆடையின் இதர இடங்களிலும் தண்ணீர் தெளித்து அந்த ஆடையுடன் தொழுவார்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.


மாதவிடாய்

'ஒரு பெண் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! எங்களில் ஒரு பெண்ணின் துணியில் மாதவிடாய் இரத்தம் பட்டால் அவள் எவ்வாறு (சுத்தம்) செய்ய வேண்டும்?' என்று கேட்டதற்கு, 'உங்களில் ஒருத்தியின் ஆடையில் மாதவிடாய் இரத்தம் பட்டால் அதைச் சுரண்டிவிட்டுப் பின்னர் அந்த இடத்தில் தண்ணீர் தெளித்து விடட்டும். அதன் பின்னர் அந்த ஆடையுடன் தொழுது கொள்ளலாம்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) அறிவித்தார்.


மாதவிடாய்

'பாத்திமா பின்த் அபீ ஹுபைஷ் என்ற பெண் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! நான் (இரத்தப் போக்கிலிருந்து) சுத்தமாவதே இல்லை. எனவே நான் தொழுகையைவிட்டு விடலாமா?' என்று கேட்டதற்கு, 'அது ஒரு நரம்பு நோய். அது மாதவிடாயன்று. மாதவிடாய் ஏற்படும்போது தொழுகையைவிட்டு விடு. மாதவிடாய்க் காலம் கழிந்ததும் இரத்தத்தைச் சுத்தம் செய்துவிட்டுத் தொழுது கொள்' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.


;;