உளூச் செய்வது

'நபி(ஸல்) அவர்கள் (உளூவில்) தங்களுடைய தலைப்பாகையின் மீதும் இரண்டு காலுறைகளின் மீதும் மஸஹ் செய்ததை பார்த்தேன்" என அம்ர் இப்னு உமய்யா(ரலி) அறிவித்தார்.


உளூச் செய்வது

'நபி(ஸல்) அவர்கள் (இயற்கைத்) தேவையை நிறைவேற்றுவதற்காக வெளியே சென்றபோது ஒரு பாத்திரத்தில் தண்ணீருடன் அவர்களை பின்தொடர்ந்து சென்றேன். நபி(ஸல்) அவர்கள் தங்களின் தேவையை நிறைவேற்றிவிட்டு வந்தபோது அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றினேன். (அதில்) நபி(ஸல்) அவர்கள் உளூச் செய்துவிட்டு இரண்டு காலுறைகளின் மீது மஸஹ் செய்தார்கள்" என முகீரா இப்னு ஷுஅபா(ரலி) அறிவித்தார்.


உளூச் செய்வது

'நபி(ஸல்) அவர்கள் (ஒருமுறை உளூச் செய்தபோது) இரண்டு காலுறைகளின் மீது மஸஹ் செய்தார்கள்" என ஸஃது இப்னு அபீ வக்காஸ்(ரலி) கூறினார். அப்துல்லாஹ் இப்னு உமர் (தம் தந்தை) உமர்(ரலி) அவர்களிடம் இது பற்றிக் கேட்டபோது 'ஆம்! நபி(ஸல்) அவர்களைப் பற்றிய ஒரு செய்தியை ஸஃது உனக்கு அறிவித்தால் அது பற்றி வேறு யாரிடமும் கேட்காதே' என்று உமர்(ரலி) கூறினார்" என ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார்.


உளூச் செய்வது

'நபி(ஸல்) அவர்கள் நான்கு 'முத்து'விலிருந்து ஐந்து 'முத்து' வரை உள்ள தண்ணீரில் குளிப்பார்கள். ஒரு 'முத்து' அளவு தண்ணீரில் உளூச் செய்வார்கள்" அனஸ்(ரலி) அறிவித்தார்.


உளூச் செய்வது

'நபி(ஸல்) அவர்கள் தண்ணீர் பாத்திரத்தைக் கொண்டு வரக் கூறிபோது தண்ணீருடன் வாய் விசாலமான ஒரு பாத்திரம் கொண்டு வரப்பட்டது. அதில் நபி(ஸல்) அவர்கள் தங்களின் விரல்களை வைத்தபோது அவர்களின் விரல்களுக்கிடையிலிருந்து நீர் ஊற்று சுரப்பதை பார்த்தேன். அதிலிருந்து எழுபதிலிருந்து எண்பது பேர் வரை உளூச் செய்ததை நான் கணக்கிட்டேன்" அனஸ்(ரலி) அறிவித்தார்.


உளூச் செய்வது

'என்னுடைய தந்தையின் உடன் பிறந்தார். (அமர் இப்னு அபீ ஹஸன்) அடிக்கடி உளூச் செய்பவராக இருந்தார். இவர் அப்துல்லாஹ் இப்னு ஜைத் அவர்களிடம், 'நபி(ஸல்) அவர்கள் எவ்வாறு உளூச் செய்ய நீர் கண்டீர் என்பதை எனக்கு அறிவிப்பீராக' எனக் கேட்டார். அப்துல்லாஹ் இப்னு ஜைத்(ரலி) ஒரு தட்டையான பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வரச்சொல்லி, அதிலிருந்து தம் கையில் ஊற்றி மூன்று முறை கழுவினார். பின்னர் தம் கையை அந்தப் பத்திரத்தில் நுழைத்துத் தண்ணீர் எடுத்து மூன்று முறை ஒரே கை தண்ணீரால் வாய் கொப்புளித்து மூக்கிற்குத் தண்ணீர் செலுத்திச் சீந்தினார். பின்னர் தம் கையை(ப் பாத்திரத்தில்) நுழைத்துத் தண்ணீர் கோரி மூன்று முறை முகத்தைக் கழுவினார். பின்னர் தம் இரண்டு கைகளையும் மூட்டு வரை இரண்டிரண்டு முறை கழுவினார். பின்னர் தம் கையால் தண்ணீர் எடுத்துத் தம் தலையின் முன் பக்கமிருந்து பின் பக்கமும் பின் பக்கமிருந்து முன் பக்கம் பின் பக்கமிருந்து முன் பக்கமும் கொண்டு சென்று தலையைத் தடவினார். பின் தம் இரண்டு கால்களையும் கழுவிவிட்டு 'இப்படித்தான் நபி(ஸல்) உளூச் செய்ய பார்த்தேன்' என்று கூறினார்கள்" யஹ்யா அல் மாஸினி அறிவித்தார்.


உளூச் செய்வது

நபி(ஸல்) அவர்களுக்கு நோய் அதிகமாம் வேதனை கடுமையானபோது, என்னுடைய வீட்டில் தங்கி சிகிச்சை பெறுவதற்காகத் தங்கள் இதர மனைவிகளிடம் அவர்கள் அனுமதி கேட்டதற்கு அவர்களும் அனுமதி வழங்கினார்கள். (ஒரு நாள்) நபி(ஸல்) அவர்கள் அப்பாஸ்(ரலி) அவர்களுக்கும் வேறு ஒரு மனிதருக்குமிடையில் (தொங்கியவர்களாக) வெளியில் வந்தார்கள். (அவர்களின் கால்களைச் சரியாக ஊன்ற முடியாததால்) பூமியில் அவர்களின் இரண்டு கால்களும் கோடிட்டுக் கொண்டே சென்றன.
நபி(ஸல்) அவர்கள் தங்களின் வீட்டிற்குள் சென்று அவர்களின் வேதனை அதிகரித்தபோது 'வாய் திறக்கப்படாத ஏழு தோல்பை தண்ணீரை என் மீது ஊற்றுங்கள். நான் மக்களுக்கு உபதேசம் செய்ய வேண்டும்' என்று கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களின் மனைவியருள் ஒருவரான ஹப்ஸா(ரலி) அவர்களுக்குச் சொந்தமான ஒரு கல் தொட்டியில் நபி(ஸல்) அவர்களை அமர வைத்து, அவர்கள் 'போதும்' என்று சொல்லும் வரை அவர்களின் மீது தண்ணீரை ஊற்றினோம். பின்னர் மக்களுக்கு உபதேசம் செய்வதற்காக வெளியில் வந்தார்கள்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
"இது பற்றி அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் நான் கேட்டபோது, 'நபி(ஸல்) அவர்களைத் தாங்கிச் சென்ற இருவரில்) இரண்டாமவர் யார் என்பது உமக்குத் தெரியுமா? என்று இப்னு அப்பாஸ்(ரலி) கேட்டார். நான் 'தெரியாது' என்றேன். 'அவர் தாம் அலீ(ரலி)' எனக் கூறினார்" என (இந்த ஹதீஸ் அறிவிப்பாளர்களில் ஒருவரான) உபைதுல்லாஹ் கூறுகிறார்.


உளூச் செய்வது

'நபி(ஸல்) அவர்கள் (எங்களிடம்) வந்தபோது செம்பினாலான ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தோம். அதில் நபி(ஸல்) அவர்கள் உளூச் செய்தார்கள். தங்களின் முகத்தையும் மூன்று முறையும் கைகளை இரண்டு முறையும் கழுவினார்கள். மேலும் தங்களின் தலையைத் தடவினார்கள். (தங்கள் கைகளைத் தலையில் வைத்து) முன் பக்கத்திலிருந்து பின் பக்கம் கொண்டு வந்துவிட்டு, திரும்ப முன் பக்கம் கொண்டு சென்றார்கள். மேலும் தங்களின் இரண்டு கால்களையும் கழுவினார்கள்" என அப்துல்லாஹ் இப்னு ஜைத்(ரலி) கூறினார்.


உளூச் செய்வது

'நபி(ஸல்) அவர்கள் தண்ணீர் உள்ள ஒரு பாத்திரத்தைக் கொண்டு வரச் சொல்லி அதில் தங்களின் இரண்டு கைகளையும் முகத்தையும் கழுவிவிட்டு அதில் உமிழ்ந்தார்கள்" என அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.


உளூச் செய்வது

தொழுகையின் நேரம் வந்தபோது சமீபத்தில் வீடு உள்ளவர்கள் (உளூச் செய்வதற்காக) தங்களின் வீடுகளுக்குச் சென்றனர். மற்றவர்கள் தங்கிவிட்டனர். அப்போது, நபி(ஸல்) அவர்களிடம் தண்ணீர் நிரம்பிய ஒரு கல் தொட்டி கொண்டு வரப்பட்டது. நபி(ஸல்) அவர்கள் அதில் தங்களின் கையை விரித்துக் கழுவ முடியாத அளவிற்கு (அதன் வாய்) சிறியதாக இருந்தது. எஞ்சியிருந்த அனைவரும் அதில் உளூச் செய்தார்கள்" என அனஸ்(ரலி) அறிவித்தார்.
"அனஸ்(ரலி) அவர்களிடம் 'நீங்கள் எத்தனை பேர்கள் இருந்தீர்கள்' என்று நாம் கேட்டதற்கு 'எண்பதுக்கும் அதிகமானவர்கள் இருந்தோம்' எனக் கூறினார்" என ஹுமைத் அறிவித்தார்.


உளூச் செய்வது

நான் நோயுற்றிருந்தபோது நபி(ஸல்) அவர்கள் என்னை நலம் விசாரிக்க வந்தார்கள். நான் மயநிலையில் இருந்தேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் உளூச் செய்துவிட்டு அந்தத் தண்ணீரை என் மீது ஊற்றினார்கள். உடனே நான் மயக்கத்திலிருந்து (தெளிந்து) உணர்வு பெற்றேன். அப்போது நபி(ஸல்) அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! என்னுடைய சொத்துக்கு வாரிசு யார்? என்னுடன் உடன் பிறப்புகள் மட்டுமே எனக்கு வாரிசாகும் நிலையில் நான் உள்ளேனே?' என்று நான் கேட்டபோது பாகப்பிரிவினை பற்றிய (திருக்குர்ஆன் 04:176-வது) வசனம் அருளப்பட்டது" என ஜாபிர்(ரலி) அறிவித்தார்.


உளூச் செய்வது

'நபி(ஸல்) அவர்களின் காலத்தில் ஆண்களும் பெண்களும் சேர்ந்து (ஓரிடத்தில்) உளூச் செய்வார்கள்" என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.


உளூச் செய்வது

'அம்ர் இப்னு அபீ ஹஸன், அப்துல்லாஹ் இப்னு ஜைத்(ரலி) என்பவரிடம் நபி(ஸல்) அவர்களின் உளூவைப் பற்றிக் கேட்டபோது, ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வரச்சொல்லி, உளூச் செய்து காட்டினார். பாத்திரத்திலிருந்து தண்ணீரைத் தம் கையில் ஊற்றி முன் இரண்டு கைகளையும் மூன்று முறை கழுவினார். பின்னர் தம் கையைப் பாத்திரத்தில் நுழைத்து (தண்ணீர் எடுத்து) மூன்று முறை வாய் கொப்பளித்து மூக்கிற்குத் தண்ணீர் செலுத்திச் சீந்தினார். இவ்வாறு மூன்று முறை செய்தார். பின்னர் தம் கையைப் பாத்திரத்தில் நுழைத்து மூன்று முறை முகத்தைக் கழுவினார். பின்னர் தம் கையைப் பாத்திரத்தில் நுழைத்து இரண்டு முறை கழுவினார். பின்னர் தம் கையைப் பாத்திரத்தில் நுழைத்துத் தம் தலையைத் தடவினார். இரண்டு கைகளையும் தலையில் வைத்து முன் பக்கத்திலிருந்து பின் பக்கம் கொண்டு வந்து பின்னர் பின் பக்கமிருந்து முன் பக்கம் கொண்டு வந்தார். இவ்வாறு ஒரு முறை செய்தார். பின்னர் தம் இரண்டு கால்களையும் கரண்டை வரை கழுவினார்" என யஹ்யா அல் மாஸினி அறிவித்தார்.

உளூச் செய்வது

அப்துல்லாஹ் இப்னு ஜைத்(ரலி) பாத்திரத்திலிருந்து தண்ணீரைத் தம் இரண்டு முன் கைகளிலும் ஊற்றிக் கழுவினார். பின்பு ஒரே கையில் தண்ணீரை எடுத்து வாய் கொப்புளித்து மூக்கிற்கும் தண்ணீர் செலுத்தினார். இவ்வாறு மூன்று முறை செய்தார். பின்னர் தம் இரண்டு கைகளையும் மூட்டு வரை இரண்டு இரண்டு முறை கழுவினார். மேலும் தம் தலையைத் தடவினார். (இரண்டு கையால்) மேலும் தம் தலையைத் தடவினார். (இரண்டு கையால்) தலையின் முன் புறமும் பின்புறமும தடவினார். மேலும் தம் இரண்டு கால்களையும் கரண்டை வரை கழுவினார். பின்னர், இதுதான் நபி(ஸல்) அவர்களின் உளூ என்று கூறினார்" யஹ்யா அல் மாஸினி அறிவித்தார்.

உளூச் செய்வது

என்னுடைய சிறிய தாயார் என்னை நபி(ஸல்) அவர்களிடம் அழைத்துச் சென்று 'இறைத்தூதர் அவர்களே! என் சகோதரி மகன் இரண்டு பாதங்களிலும் வேதனையால் கஷ்டப்படுகிறான்' எனக் கூறியபோது, நபி(ஸல்) அவர்கள் என்னுடைய தலையைத் தடவி என்னுடைய அபிவிருத்திக்காகப் பிரார்த்தித்தார்கள். பின்னர் நபி(ஸல்) அவர்கள் உளூச் செய்தார்கள். அவர்கள் மீதி வைத்த தண்ணீரிலிருந்து நான் குடித்தேன். பின்னர் நபி(ஸல்) அவர்களின் முதுகிற்குப் பின்னால் எழுந்து நின்றேன். அப்போது அவர்களின் இரண்டு புஜங்களுக்கிடையில் நபித்துவத்தின் முத்திரையை பார்த்தேன். அது ஒரு புறா முட்டை போன்று இருந்தது" என ஸாயிப் இப்னு யஸீது(ரலி) அறிவித்தார்.


உளூச் செய்வது

தாம் குழந்தையாக இருந்தபோது தம் வீட்டிலுள்ள கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்து அதை நபி(ஸல்) அவர்கள் தங்களின் முகத்தில் உமிழ்ந்ததாக மஹ்மூத் இப்னு ரபீய்(ரலி) என்னிடம் கூறினார்கள்" என இப்னுஷிஹாப் அறிவித்தார்.
"நபி(ஸல்) அவர்கள் உளூச் செய்தால் அவர்கள் மீதி வைக்கிற தண்ணீரை எடுத்துக் கொள்வதில் ஒருவருக்கொருவர் போட்டியிட்டுக் கொள்வார்கள்" என்று உர்வா என்பவர் மிஸ்வர் என்பவர் வழியாகவும் மற்ற ஒருவர் வழியாகவும் அறிவித்தார். இவ்விருவரும் ஒருவர் மற்றவரை மெய்ப்பிக்கிறார்கள்.


உளூச் செய்வது

'நபி(ஸல்) அவர்கள், தண்ணீர் உள்ள ஒரு பாத்திரத்தைக் கொண்டு வரச் சொல்லி அதில் தங்கள் இரண்டு கைகளையும் தங்கள் முகத்தையும் கழுவினார்கள். அதில் தண்ணிரைத் துப்பினார்கள். பின்னர் என்னிடமும் பிலால் அவர்களிடமும் இதிலிருந்து நீங்கள் இருவரும் குடியுங்கள்; உங்களின் முகத்திலும் கழுத்திலும் ஊற்றிக் கொள்ளுங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என அபூ மூஸா அல் அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.


உளூச் செய்வது

'நபி(ஸல்) அவர்கள் ஒரு நாள் நடுப்பகலில் எங்களிடம் புறப்பட்டு வந்தார்கள். அவர்களுக்கு உளூச் செய்யத் தண்ணீர் கொண்டு வரப்பட்டு அதில் அவர்கள் உளூச் செய்தார்கள். அவர்கள் மீதி வைத்த தண்ணீரிலிருந்து மக்கள் எடுத்து அதை தங்களின் மீது தடவினார்கள். நபி(ஸல்) அவர்கள் லுஹரையும் அஸரையும் இரண்டு இரண்டு ரக்அத்துக்களாக தொழுதார்கள். அவர்களுக்கு முன்னால் ஒரு கைத்தடி இருந்தது" என அபூ ஜுஹைஃபா(ரலி) அறிவித்தார்.


உளூச் செய்வது

'அம்ர் இப்னு அபீ ஹஸன், அப்துல்லாஹ் இப்னு ஜைத்(ரலி) அவர்களிடம் நபி(ஸல்) அவர்களின் உளூவைப் பற்றிக் கேட்டபோது அப்துல்லாஹ் இப்னு ஜைத்(ரலி) ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வரச் சொல்லி, நபி(ஸல்) அவர்கள் செய்தது போன்று, உளூச் செய்து காட்டினார். பாத்திரத்திலிருந்து தண்ணீரைத் தம் கையில் ஊற்றி முன் இரண்டு கைகளையும் மூன்று முறை வாய் கொப்புளித்து மூக்கிற்குத் தண்ணீர் செலுத்திச் சீந்தினார். பின்னர் தம் கையைப் பாத்திரத்தில் நுழைத்து மூன்று முறை முகத்தைக் கழுவினார். பின்னர் தம் இரண்டு கைகளையும் மூட்டு வரை இரண்டு முறை கழுவினார். பின்னர் தம் கையை (பாத்திரத்தில்) நுழைதது தம் தலையைத் தடவினார். இரண்டு கையையும் தலையில் வைத்து முன் பக்கத்திலிருந்து பின் பக்கம் கொண்டு வந்து பின்னர் பின் பக்கமிருந்து முன் பக்கம் கொண்டு வந்தார். இவ்வாறு ஒரு முறை செய்தார். பின்னர் தம் இரண்டு கால்களையும் கரண்டை வரை கழுவினார்" யஹ்யா அல் மாஸினி அறிவித்தார்.


உளூச் செய்வது


'அப்துல்லாஹ் இப்னு ஜைத்(ரலி) அவர்களிடம் ஒருவர் வந்து, 'நபி(ஸல்) அவர்கள் எப்படி உளூச் செய்தார்கள்? என்பதை எனக்கு நீர் செய்து காட்ட முடியுமா? எனக் கேட்டதற்கு அப்துல்லாஹ் இப்னு ஜைத்(ரலி) 'ஆம்' என்று கூறித் தண்ணீர் கொண்டு வரக் கூறினார். அதைத் தம் இரண்டு முன் கைகளிலும் ஊற்றி இருமுறை கழுவினார். பின்னர் மூன்று வாய் கொப்புளித்து, மூக்கிற்குத் தண்ணீர் செலுத்திச் சீந்தினார். பின்னர் தம் முகத்தை மூன்று முறை கழுவினார். பின்னர் தம் இரண்டு கைகளையும் மூட்டுவரை இரண்டு இரண்டு முறை கழுவினார். பின்னர் தம் இரண்டு கைகளையும் தலையில் வைத்து முன்னே கொண்டு சென்று பின்பு கைகளைப் பின்னே கொண்டு வந்து தலையைத் தடவினார். அதாவது தம் இரண்டு கைகளையும் தலையின் முன்பகுதியில் வைத்து பிடரி வரை கொண்டு சென்று பிறகு அப்படியே எந்த இடத்திலிருந்து தடவ ஆரம்பித்தாரோ அந்த இடத்திற்கு திரும்பக் கொண்டு வந்தார். பின்னர் தம் இரண்டு கால்களையும் கழுவினார்" என யஹ்யா அல் மாஸினி அறிவித்தார்.

உளூச் செய்வது

ஒரு சூரிய கிரகணத்தன்று ஆயிஷா(ரலி) அவர்களிடம் நான் சென்றேன். ஆயிஷா(ரலி) தொழுது கொண்டிருந்தார்கள். மக்களும் தொழுதார்கள். நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம் வந்து, 'மக்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது?' என்று கேட்டேன். (தொழுகையில் நின்ற) ஆயிஷா(ரலி) வானை நோக்கித் தம் கையால் சுட்டிக் காட்டினார்கள். (தொழுகையில் பேசக் கூடாது என்பதை உணர்த்துவதற்காக) 'ஸுப்ஹானல்லாஹ்' என்றும் கூறினார்கள். அப்போது இது (ஏதாவது) அடையாளமா? என்று நான் கேட்டதற்கு ஆயிஷா(ரலி) 'ஆமாம் அப்படித்தான்' என்று தலையால் சைகை செய்தார்கள். உடனே நானும் (தொழுகையில்) நின்று கொண்டேன். (நீண்ட நேரம் நின்றதால்) நான் மயக்கமுற்றேன். (அதனால்) என் தலை மீது தண்ணீரை ஊற்றினேன். நபி(ஸல்) அவர்கள் தங்களின் உரையில் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, 'எனக்கு இது வரை காட்டப்படாத சுவர்க்கம் நரகம் உட்பட அத்தனைப் பொருட்களையும் இந்த இடத்திலேயே கண்டேன். மேலும் நிச்சயமாக நீங்கள் உங்கள் மண்ணறைகளில் மஸீஹுத் தஜ்ஜால் என்பவனின் குழப்பத்துக்கு நிகரான சோதனைக்கு உள்ளாக்கப்படுவீர்கள். (அப்போது மண்ணறையில் அடக்கம் செய்யப்பட்டவரிடம்) 'இந்த மனிதரைப் பற்றி உமக்கு என்ன தெரியும்?' என்று கேட்கப்படும். நம்பிக்கையாளர், எங்களிடம் நேர் வழியையும் தெளிவான சான்றுகளையும் கொண்டு வந்தார்கள். நாங்கள் ஏற்று நம்பிப் பின் பற்றினோம்' என்று கூறுவார். அப்போது 'நல்லவராய் நீர் உறங்குவீராக!' என்றும் 'நிச்சயமாகவே நீர் நபி(ஸல்) அவர்களைப் பற்றி இத்தகைய உறுதியான நம்பிக்கையுடையவராகவே இருந்தீர் என்றும் அறிவோம்' என (வானவர்களால்) கூறப்படும். நயவஞ்சகனோ 'எனக்கு எதுவும் தெரியாது. மக்கள் அவரைப் பற்றி ஏதோ சொல்லிக் கொண்டிருக்கக் கேட்டிருக்கிறேன். எனவே நானும் அது போன்று கூறினேன்' என்பான்' என எனக்கு அறிவிக்கப்பட்டது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என அஸ்மா(ரலி) அறிவித்தார்.
"அஸ்மா(ரலி) இந்த ஹதீஸை அறிவித்தபோது 'நிகரான' என்ற இடத்தில் 'அடுத்த படியான' என்று கூறினார்களா? 'நம்பிக்கையாளர்' என்ற இடத்தில் 'உறுதியிலிருப்பவர்' என்று கூறினார்களா? 'நயவஞ்சகன் என்ற இடத்தில் 'சந்தேகத்துடன் இருந்தவன்' என்று கூறினார்களா? என்பது எனக்கு நினைவில்லை என்று கூறினார்" என்று ஃபாத்திமா கூறினார்.



உளூச் செய்வது


'நபி(ஸல்) அவர்களின் மனைவியும் என்னுடைய சிறிய தாயாருமான மைமூனாவின் வீட்டில் நான் தலையணையின் பக்க வாட்டில் சாய்ந்து தூங்கினேன். நபி(ஸல்) அவர்களும் அவர்களின் மனைவியும் அதன் மற்ற பகுதியில் தூங்கினார்கள். இரவின் பாதிவரை - கொஞ்சம் முன் பின்னாக இருக்கலாம் - நபி(ஸல்) தூங்கினார்கள். பின்னர் விழித்து அமர்ந்து தங்களின் கையால் முகத்தைத் தடவித் தூக்கக் கலக்கத்தைப் போக்கினார்கள். பின்னர் ஆலு இம்ரான் என்ற அத்தியாயத்தின் இறுதியிலுள்ள பத்து வசனங்களை ஓதினார்கள். பின்னர் எழுந்து சென்று தொங்கவிடப்பட்டிருந்த பழைய தோல் பையிலிருந்து (தண்ணீர் எடுத்து) உளூச் செய்தார்கள். அவர்களின் உளூவை நல்ல முறையில் செய்தார்கள். பின்னர் தொழுவதற்காக எழுந்தார்கள். நானும் எழுந்து நபி(ஸல்) அவர்கள் செய்தது போன்று (உளூ) செய்துவிட்டு நபி(ஸல்) அவர்களின் அருகில் சென்று நின்றேன். அவர்கள் தங்களின் வலக்கரத்தை என் தலைமீது வைத்தார்கள். என்னுடைய வலக்காதைப் பிடித்து (அவர்களின் வலப்பக்கம்) நிறுத்தினார்கள். இரண்டு ரக்அத்துகள் தொழுதார்கள். மேலும் இரண்டு ரக்அத்துகள், மீண்டும் இரண்டு ரக்அத்துகள், இன்னும் இரண்டு ரக்அத்துகள் மறுபடியும் இரண்டு ரக்அத்துகள் மேலும் இரண்டு ரக்அத்துகள் தொழுதார்கள் பின்பு வித்ரு தொழுதார்கள். பின்னர் பாங்கு சொல்பவர் வரும் வரை சாய்ந்து படுத்தார்கள். பிறகு எழுந்து சுருக்கமாக இரண்டு ரக்அத்துகள் தொழுதுவிட்டு சுபுஹுத் தொழுகைக்காக (வீட்டைவிட்டு) வெளியே சென்றார்கள்" என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.


உளூச் செய்வது

'நான் ஒரு பயணத்தில் நபி(ஸல்) அவர்களோடு இருந்தேன். நபி(ஸல்) அவர்கள் (இயற்கைத்) தேவைக்காகச் சென்றார்கள். நான் நபி(ஸல்) அவர்களுக்கு தண்ணீர் ஊற்றினேன். அதில் நபி(ஸல்) அவர்கள் உளூச் செய்தார்கள். அப்போது தங்கள் முகத்தையும் இரண்டு கைகளையும் தழுவினார்கள். காலுறைகளின் மீது தடவினார்கள்" என முகீரா இப்னு ஷுஅபா(ரலி) அறிவித்தார்

உளூச் செய்வது

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.


உளூச் செய்வது

'நபி(ஸல்) அவர்கள் அன்சாரித் தோழாகளில் ஒருவரை அழைத்து வருமாறு ஆளனுப்பினார்கள். தலையிலிருந்து தண்ணீர் சொட்டும் நிலையில் அவர் வந்தார். இதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் 'உம்மை அவசரப்படுத்தி விட்டோம் போலும்?' என்றார்கள். அதற்கு அவர் 'ஆம்' என்றார். 'நீர் (மனைவியோடு உடலுறவு கொள்ளும்போது) அவசரப்பட்டு எடுத்தால், அல்லது இந்திரியம் வெளியாகாமலிருந்தால், அதற்காக நீர் உளூச் செய்ய வேண்டும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என அபூ சயீதுல்குத்ரி(ரலி) அறிவித்தார்.

உளூச் செய்வது

'ஒருவர் (தம் மனைவியுடன்) உடலுறவு கொண்டு இந்திரியம் வெளியாகவில்லையானால் அவரின் சட்டம் என்ன? என்று நான் உஸ்மான்(ரலி) அவர்களிடம் கேட்டதற்கு, 'அவர் தம் ஆண் குறியைக் கழுவிவிட்டு, தொழுகைக்கு செய்வது போன்று உளூச் செய்ய வேண்டும். இதை நான் நபி(ஸல்) அவர்களிடமிருந்து கேட்டேன்' என உஸ்மான்(ரலி) கூறினார். மேலும் இது பற்றி அலி, ஸுபைர், தல்ஹா, உபை இப்னு கஅப் (ரலி) ஆகியோரிடம் நான் கேட்டதற்கு, அவர்களும் இவ்வாறே கூறினார்கள்" ஸைத் இப்னு காலித்(ரலி) அறிவித்தார்.

உளூச் செய்வது

மதி எனும் காம நீர் வெளியாகும் ஆடவனாக இருந்தேன். (அததைப் பற்றி) கேட்க வெட்கப்பட்டு, மிக்தாத் என்பவரை நபி(ஸல்) அவர்களிடம் கேட்குமாறு பணித்தேன். அவர் அது பற்றி அவர்களிடம் கேட்டதற்கு, 'அதற்காக உளூச் செய்வதுதான் கடமை. (குளிக்க வேண்டிய கட்டாயமில்லை)' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என அலீ(ரலி) அறிவித்தார்.

உளூச் செய்வது

'காற்றுப் பிரியும் சப்தத்தைக் கேட்கும் வரை அல்லது நாற்றத்தை உணரும் வரை (தொழுபவர் தொழுகையைவிட்டு) திரும்பிச் செல்லக் கூடாது' இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என்று என அப்துல்லாஹ் இப்னு ஜைது(ரலி) அறிவித்தார்.

உளூச் செய்வது

'ஹதஸ்' ஏற்படாதவரை, தொழுகையை எதிர்பார்த்து பள்ளியில் இருக்கக் கூடியவர் தொழுகையில் இருப்பவராகவோ கருதப்படுவார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) சொன்னபோது, அரபி சரியாகப் புரியாத ஒருவர் 'அபூ ஹுரைராவே! 'ஹதஸ்' என்றால் என்ன?' என்று கேட்டதற்கு அவர் 'பின் துவாரத்திலிருந்து வெளியாகும் சப்தம்' என்று கூறினார்" என ஸயீத் அல் மக்புரி அறிவித்தார்.


உளூச் செய்வது

(நாயின் மூலம் வேட்டையாடுவதைப் பற்றி) நபி(ஸல்) அவர்களிடம் நான் கேட்டபோது, 'வேட்டைக்காகப் பயிற்சி அளிக்கப்பட்ட நாயை நீர் அனுப்பி, அது (பிராணியை) கொன்றால் அதை நீர் சாப்பிடு! வேட்டை நாய் வேட்டையாடப்பட்ட பிராணியிலிருந்து (எதையேனும்) சாப்பிட்டிருக்குமானால் அதை நீர் சாப்பிடாதே! ஏனெனில், அது தனக்காகவே அதைப் பிடித்திருக்கிறது' என்று கூறியபோது, 'என்னுடைய நாயை அனுப்புகிறேன்; ஆனால் (வேட்டையில்) அதோடு வேறொரு நாயையும் காண்கிறேன்?' என்று கேட்டேன். 'அப்படியானால் அதை நீர் சாப்பிடாதே! (ஏனெனில், நீர் உம்முடைய நாயைத்தான் இறைவனின் பெயர் சொல்லி அனுப்பினீரே தவிர வேறு நாய்க்கு நீர் இறைவனின் பெயர் சொல்லவில்லை' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என அதீய் இப்னு ஹாதிம்(ரலி) அறிவித்தார்.

உளூச் செய்வது

'நபி(ஸல்) அவர்களின் காலத்தில் நாய்கள் பள்ளிவாசலின் உள்ளே வந்தும் அதில் சிறுநீர் கழித்தும் சென்று கொண்டிருந்தன. அதற்காக அதில் எவரும் தண்ணீர் தெளிக்கவில்லை" என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.


உளூச் செய்வது

'ஒரு நாய் தாகத்தின் காரணமாக ஈர மண்ணை (நக்கி) சாப்பிடுவதை ஒருவர் பார்த்தார். உடனே அவர், தான் அணிந்திருந்த காலுறையை எடுத்து அதில் தண்ணீர் மொண்டு அந்நாய் தாகம் தீரும் வரை கொடுத்தார். எனவே அல்லாஹ் அம்மனிதருக்கு கருணை காட்டி அவரைச் சுவர்க்கத்தில் புகத்தினான்' இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என்று என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.


உளூச் செய்வது

'உங்களில் ஒருவரின் (தண்ணீர்) பாத்திரத்தில் நாய் குடித்தால் அவர் அப்பாத்திரத்தை ஏழு முறை கழுவட்டும்" இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என்று என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

உளூச் செய்வது

'நபி(ஸல்) அவர்கள் (ஹஜ்ஜில்) தங்கள் தலை முடியைக் களைந்தார்கள். அவர்களின் முடியிலிருந்து முதன் முதலாக அபூ தல்ஹா(ரலி) எடுத்தார்" அனஸ்(ரலி) அறிவித்தார்.

;;