மாதவிடாய்

நபி(ஸல்) அவர்களின் இறுதி ஹஜ்ஜின்போது நபி(ஸல்) அவர்களோடு சென்றோம். எங்களில் உம்ரா செய்வதற்காக இஹ்ராம் அணிந்தவர்களும் இருந்தனர். ஹஜ் செய்வதற்காக இஹ்ராம் அணிந்தவர்களும் இருந்தனர். நாங்கள் மக்காவை அடைந்ததும் 'உங்களில் குர்பானிப் பிராணியைத் தம்முடன் கொண்டு வராமல் உம்ராவிற்காக இஹ்ராம் அணிந்தவர்கள் (உம்ரா கடமைகளை நிறைவேற்றிவிட்டு) இஹ்ராமிலிருந்து விலம்க் கொள்ளலாம். உம்ராவிற்காக இஹ்ராம் அணிந்து தங்களுடன் குர்பானிப் பிராணியைக் கொண்டு வந்திருப்பவர்கள் தங்களின் குர்பானியைப் பத்தாவது நாளன்று அறுக்கும் வரை தங்களின் இஹ்ராமிலிருந்து விலக வேண்டாம். ஹஜ்ஜிற்காக மட்டும் இஹ்ராம் அணிந்திருப்பவர்கள் தங்களின் ஹஜ்ஜை நிறைவேற்றட்டும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அப்போது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. அது அரஃபா நாள் வரை நீடித்தது. நான் உம்ராவிற்காகத்தான் இஹ்ராம் அணிந்திருந்தேன். (இதை நபி(ஸல்) அவர்களிடம் தெரிவித்தேன்) என்னுடைய தலை முடியை அவிழ்த்துவிட்டு அதை வாரி விடுமாறும், நான் உம்ராவிற்காக இஹ்ராம் அணிந்ததைவிட்டுவிட்டுத் திரும்ப ஹஜ்ஜிற்காக இஹ்ராம் அணிந்து கொள்ளுமாறும் எனக்குக் கட்டளையிட்டார்கள். நான் அவ்வாறே செய்தேன். என்னுடைய ஹஜ்ஜை நிறைவேற்றிய பின்னர் என்னுடன் (என்னுடைய சகோதரர்) அப்துர்ரஹ்மானை அனுப்பி, தன்யீம் என்ற இடத்திலிருந்து எனக்குவிடுபட்ட உம்ராவிற்காக இஹ்ராம் அணிந்து வருமாறு நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
சில பெண்கள் மாதவிடாய் செல்லும் இடத்தில் வைத்துக் கட்டிய பஞ்சு மஞ்சள் நிறமாக இருக்கும்போது அதை ஆயிஷா(ரலி) அவர்களிடம் அனுப்பி மாதவிடாய் இரத்தம் நின்றுவிட்டதா இல்லையா என்பதைத் தெரிந்து கொள்வார்கள். அப்போது 'மாதவிடாய் செல்லும் இடத்தில் வைக்கப்படும் பஞ்சு வெள்ளை நிறமாகக் காணும் வரை நீங்கள் அவசரப்பட்டு மாதவிடாயிலிருந்து சுத்தமாம் விட்டீர்கள் என்று கருதவேண்டாம்' என்று அப்பெண்களுக்கு ஆயிஷா(ரலி) கூறினார். சில பெண்கள் நடு இரவில் விளக்குகளைக் கொண்டு வரச் செய்து மாதவிடாயிலிருந்து சுத்தமாம் விட்டோமா என்பதைப் பார்ப்பார்கள் என்ற செய்தி ஜைத் இப்னு ஸாபித்(ரலி) அவர்களின் மகளுக்குக் கிடைத்தபோது, 'நபி(ஸல்) காலத்துப் பெண்மணிகள் இப்படியெல்லாம் செய்ய மாட்டார்கள்' என்று இப்படி செய்யும் பெண்களைக் குறை கூறினார்கள்"