தொழுகை

'அல்லாஹ் தொழுகையைக் கடமையாக்கியபோது ஊரிலிருந்தாலும் பயணத்திலிருந்தாலும் இரண்டிரண்டு ரக்அத்துகளாகக் கடமையாக்கினான், பயணத்தில் தொழுகை இரண்டு ரகஅத்தாகவே ஆக்கப்பட்டுப் பயணம் அல்லாத போதுள்ள தொழுகை அதிகரிக்கப்பட்டது" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.


தொழுகை

நான் மக்காவில் இருந்தபோது என்னுடைய வீட்டு முகடு திறக்கப்பட்டது. (அது வழியாக) ஜிப்ரீல் (அலை) இறங்கி என்னுடைய நெஞ்சைப் பிளந்தார்கள். அதை ஸம்ஸம் தண்ணீரால் கழுவினார்கள். பின்னர் ஈமான் எனும் இறைநம்பிக்கை மற்றும் ஞானத்தினால் நிரப்பப்பட்ட ஒரு தங்கத் தட்டைக் கொண்டு வந்து என்னுடைய நெஞ்சில் கொட்டிவிட்டு, அதை மூடி கையைப் பிடித்து முதல் வானத்திற்கு என்னை ஏற்றிச் சென்றார்கள். முதல் வானத்தை அடைந்ததும் அந்த வானத்தின் காவலரிடம் 'திற' என்றார்கள். அவ்வானவர், 'யார் அவர்?' என்று வினவியதற்கு 'நானே ஜிப்ரீல்' என்று பதில் கூறினார். அதற்கு அவ்வானவர், 'உம்முடன் எவரேனும் இருக்கிறார்களா?' எனக் கேட்டார். ஜிப்ரீல் ஆம்! என்னுடன் முஹம்மத் இருக்கிறார்கள்' என்று கூறினார்கள். அதற்கு வானவர் 'அவர் அழைக்கப்பட்டிருக்கிறாரா?' எனக் கேட்டார். ஜிப்ரீல் 'ஆம்' என்றார்கள்.
வானவர், முதல் வானத்தைத் திறந்ததும் நாங்கள் அவ்வானத்தில் ஏறினோம். அப்போது அங்கு ஒருவர் அமர்ந்திருந்தார். அவரின் வலப்பக்கம் சில மனிதர்களும் இடது மக்களும் சில மனிதர்களும் காணப்பட்டார்கள். அவர் தங்களின் வலப்பக்கமுள்ள மனிதர்களைப் பார்த்தால் சிரிக்கிறார். தங்களின் இடப்பக்கமுள்ளவர்களைப் பார்த்தால் அழுகிறார்.
இந்நிலையிலுள்ள அவர் 'நல்ல நபியே! வருக! நல்ல மகனே வருக!' என்றார். அப்போது ஜிப்ரீல்(அலை) அவர்களிடம் இவர் யார்? என கேட்டேன். 'இவர் தாம் ஆதம். அவரின் வலப்பக்கமும் இடப்பக்கமும் உள்ளவர்கள் அவரின் சந்ததிகளிலுள்ள மனிதர்கள். வலப்பக்கமுள்ளவர்கள் சுவர்க்கவாசிகள்; இடப்பக்கமுள்ளவர்கள் நரகவாசிகள். (எனவேதான்) அவர் தங்களின் வலப்பக்கம் பார்த்துச் சிரிக்கிறார்; தங்களின் இடப்பக்கம் பார்த்து அழுகிறார்' என்று கூறினார்கள்.
பின்னர், ஜிப்ரீல்(அலை) என்னை இரண்டாவது வானத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அந்த வானத்தில் காவலரிடம் 'திற' எனக் கூறினார். முதல் வானத்தின் காவலர் கேட்ட கேள்விகளைப் போன்றே இவரும் கேட்டுவிட்டுத் திறந்தார். இந்த ஹதீஸை அறிவிக்கும் அனஸ்(ரலி), 'வானங்களில் ஆதம், இத்ரீஸ், மூஸா, ஈஸா, இப்ராஹீம்(அலை) ஆகிய நபிமார்களைக் கண்டதாக நபி(ஸல்) குறிப்பிட்டார்கள். முதல் வானத்தில் ஆதம்(அலை) அவர்களையும் ஆறாவது வானத்தில் இப்ராஹீம்(அலை) அவர்களையும் கண்டதாகக் குறிப்பிட்டார்கள். மற்ற நபிமார்களைக் கண்ட இடத்தைக் கூறவில்லை' என்று கூறினார்.
'ஜிப்ரீல்(அலை) என்னை அழைத்துக்கொண்டு இத்ரீஸ்(அலை) பக்கமாகச் சென்றபோது 'நல்ல நபியே! வருக! நல்ல சகோதரரே வருக!' என இத்ரீஸ்(அலை) கூறியபோது இம்மனிதர் யார்? என நான் கேட்டதற்கு, 'இவர் இத்ரீஸ்(அலை)' என ஜிப்ரீல்(அலை) பதில் கூறினார்கள்.
பின்னர் மூஸா(அலை) பக்கமாக நான் சென்றபோது 'நல்ல நபியே வருக! நல்ல சகோதரரே வருக!' எனக் கூறினார்கள். இவர் யார்? என நான் கேட்டதற்கு, 'இவர்தான் மூஸா(அலை)' என ஜிப்ரீல் கூறினார்கள்.
பின்னர் ஈஸா(அலை) பக்கமாகச் சென்றபோது 'நல்ல நபியே! வருக! நல்ல சகோதரரே வருக!' எனக் கூறினார்கள். இவர் யார்? என நான் கேட்டதற்கு, 'இவர் ஈஸா(அலை)' என ஜிப்ரீல்(அலை) கூறினார்கள்.
பின் இப்ராஹீம்(அலை) பக்கமாக நான் சென்றபோது 'நல்ல நபியே வருக! நல்ல மகனே வருக!" என்றார்கள். இவர் யார்? என ஜிப்ரீல்(அலை) அவர்களிடம் நான் கேட்டதற்கு, 'இவர் இப்ராஹீம்(அலை)' என்று கூறினார்கள்.
இப்னு அப்பாஸ்(ரலி) அபூ ஹப்பா அல் அன்ஸாரி(ரலி) ஆகியோர் அறிவிக்கும் மற்றோர் அறிவிப்பில், 'பின்னர் நான் மேலே கொண்டு செல்லப்பட்டேன். நான் ஏணியில் ஏறிச் சென்றபோது எழுது கோல்களால் எழுதும் சப்தத்தை செவியுற்றேன்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.த (தொடர்ந்து)
"அல்லாஹ் என்னுடைய உம்மத்தின் மீது ஐம்பது நேரத் தொழுகையைக் கடமையாக்கினான். (அதை ஏற்று) திரும்பி வந்து கொண்டிருந்தபோது, மூஸா(அலை) அவர்களின் பக்கமாகச் நான் சென்றபோது 'உங்கள் சமுதாயத்திற்கு அல்லாஹ் எதைக் கடமையாக்கினான்?' என அவர்கள் கேட்டார்கள். ஐம்பது நேரத் தொழுகையைக் கடமையாக்கினான் என்றேன். 'நீங்கள் உங்களுடைய இறைவனிடம் திரும்பச் செல்லுங்கள். உங்கள் சமூகம் அதற்கு சக்தி பெறாது' என மூஸா(அலை) கூறினார்கள். நான் திரும்பச் சென்றபோது அதில் கொஞ்சத்தை அல்லாஹ் குறைத்தான். (அதை ஏற்றுக் கொண்டு) நான் மூஸா(அலை) அவர்களிடம் வந்து கொஞ்சம் குறைத்துள்ளான் என்றேன். 'நீங்கள் உங்களுடைய இறைவனிடம் திரும்பச் செல்லுங்கள். உங்கள் சமூகம் அதற்கு(ம்) சக்தி பெறாது' என்றார்கள். நான் திரும்பிச் சென்றேன். அதில் (இன்னும்) கொஞ்சம் குறைத்தான். நான் மூஸா(அலை) அவர்களிடம் வந்தேன். (இன்னும் கொஞ்சம் குறைத்தான் என்றேன்). 'நீங்கள் உங்களுடைய இறைவனிடம் திரும்பச் செல்லுங்கள். உங்களின் சமூகம் அதற்கு சக்தி பெறாது' என்றார்கள். நாம் திரும்பச் சென்றபோது 'ஐந்து நேரத் தொழுகையைக் கடமையாக்குகிறேன். அது ஐம்பதிற்கு சமம்; என்னுடைய சொல்லில் எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை' என்று அல்லாஹ் கூறினான். நான் மூஸா(அலை) அவர்களிடம் வந்தபோது 'உங்களுடைய இறைவனிடம் சென்று இதையும் குறைக்குமாறு கூறுங்கள்' என்றார்கள். இனிமேல் என்னுடைய இறைவனிடம் (குறைத்துக் கேட்பதற்கு) வெட்கப்படுகிறேன் என்று கூறினேன். பின்னர் ஜிப்ரீல்(அலை) என்னை 'ஸித்ரதுல் முன்தஹா' என்னும் இடத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அதைப் பல வண்ணங்கள் சூழந்திருந்தன. அது என்ன என்பது எனக்குப் புலப்படவில்லை. பின்னர் சுவர்க்கத்தில் புகுத்தப்பட்டேன். அதில் முத்துக்களால் உள்ள கயிறுகளைப் பார்த்தேன். சுவர்க்கத்தின் மண் கஸ்தூரியாக இருந்தது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என அபூ தர்(ரலி) அறிவித்தார்.


தயம்மும்

'ஒருவர் ஜமாஅத்துடன் தொழாமல் தனியாக இருப்பத்தைக் கண்ட நபி(ஸல்) அவர்கள், 'நீர் ஏன் ஜமாஅத்துடன் தொழவில்லை?' என்று கேட்டார்கள். அதற்கு அவர், 'இறைத்தூதர் அவர்களே! எனக்குக் குளிப்புக் கடமையாகிவிட்டது. தண்ணீர் கிடைக்கவில்லை' என்று கூறியபோது 'மண்ணில் தயம்மும் செய்யும்! அது உமக்குப் போதுமானது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என இம்ரான் இப்னு ஹுஸைன் அல் குஸாயீ(ரலி) அறிவித்தார்.


தயம்மும்

நான் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) மற்றும் அபூ மூஸல் அஷ்அரி(ரலி) ஆகிய இருவருடன் அமர்ந்திருந்தேன். அபூ மூஸா(ரலி) அப்துல்லாஹ் இப்னுமஸ்வூத்(ரலி) அவர்களிடம் 'குளிப்புக் கடமையானவர் ஒரு மாத காலம் வரை தண்ணீரைப் பெறவில்லையானால் அவர் தயம்மும் செய்து தொழ வேண்டியதில்லையா? 'மாயிதா' என்ற அத்தியாயத்தில் வரும், 'நீங்கள் தண்ணீரைப் பெறவில்லையானால் சுத்தமான மண்ணில் தயம்மும் செய்யுங்கள்' என்ற வசனத்தை என்ன செய்வீர்கள்?' என்று கேட்டதற்கு, 'இந்த விஷயத்தில் பொது அனுமதி கொடுக்கப்பட்டால், தண்ணீர் கொஞ்சம் குளிராக இருக்கும் போதெல்லாம் (மக்கள்) தண்ணீரில் உளூச் செய்வதைவிட்டுவிட்டு மண்ணில் தயம்மும் செய்து விடுவார்கள்' என்று அப்துல்லா இப்னு மஸ்வூத்(ரலி) கூறினார். அப்போது 'இதற்காகத்தான் தயம்மும் செய்வதை நீங்கள் வெறுத்தீர்களா?' என்று நான் கேட்டதற்கு 'ஆம்!' என்று பதிலளித்தபோது, 'என்னை ஒரு வேலைக்காக நபி(ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தபோது எனக்குக் கிடைக்கவில்லை. எனவே பிராணிகள் மண்ணில் புரளுவது போன்று புரண்டேன். இச்செய்தியை நபி(ஸல்) அவர்களிடம் நான் சொன்னபோது நபி(ஸல்) அவர்கள் தங்களின் இரண்டு கைகளால் பூமியில் ஓர் அடி அடித்து, பின்னர் இரண்டு கைகளையும் தட்டிவிட்டு, தங்களின் வலக்கரத்தால் இடது புறங்கையைத் தடவினார்கள். அல்லது தங்களின் இடக்கரத்தால் வலப்புறங்கையைத் தடவினார்கள். பின்னர் இரண்டு கைகளால் தங்களின் முகத்தைத் தடவிவிட்டு 'இப்படிச் செய்வது உமக்குப் போதுமானதாக இருந்தது' என்று கூறினார்கள்' என்ற செய்தியை 'உமர்(ரலி) அவர்களிடம், அம்மார் சொன்னதை நீங்கள் கேள்விப்படவில்லையா?' என அபூ மூஸா(ரலி) கேட்டதற்கு, 'அம்மார் சொன்னதில் உமர்(ரலி) திருப்திப்படவில்லை' என்பது உமக்குத் தெரியாதா? என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) திரும்பக் கேட்டார்" என ஷகீக் அறிவித்தார்.
மற்றோர் அறிவிப்பில்: 'நான் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி), அபூ மூஸா(ரலி) ஆகிய இருவருடன் அமர்ந்திருந்தபோது, அபூ மூஸா(ரலி), அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களை நோக்கி 'என்னையும் உங்களையும் நபி(ஸல்) அவர்கள் (ஒரு வேலைக்காக) அனுப்பியபோது எனக்குக் குளிப்புக் கடமையாகி மண்ணில் நான் புரண்டதும், பின்னர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து நடந்த விஷயத்தைச் சொன்னபோது நபி(ஸல்) அவர்கள் தங்களின் முகத்தையும் இரண்டு முன் கைகளையும் ஒரு முறை தடவிவிட்டு 'இப்படி நீர் செய்திருந்தால் அது உமக்குப் போதுமானது' என்று கூறினார்கள்' என உமர்(ரலி) அவர்களிடம் அம்மார்(ரலி) கூறியதை நீர் கேள்விப்பட்டதில்லையா' என அபூ மூஸா(ரலி) கேட்டார்" என ஷகீக்' வாயிலாக 'யஃலா' அறிவித்தார்.


தயம்மும்

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அபூ மூஸ அல் அஷ்அரி(ரலி) ஆகியோருடன் நானும் இருந்தபோது அபூ மூஸா(ரலி) அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களிடம் 'அபூ அப்திர்ரஹ்மானே! குளிப்புக் கடமையானவருக்குத் தண்ணீர் கிடைக்காவிட்டால் அவர் என்ன செய்ய வேண்டும்?' என்று கேட்டதற்கு, 'தண்ணீர் கிடைக்கும் வரை அவர் தொழ வேண்டியதில்லை' என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) கூறியபோது, 'நபி(ஸல்) அவர்கள் அம்மார் இப்னு யாஸிர்(ரலி) அவர்களிடம், 'தண்ணீர் கிடைக்காவிட்hல் தயம்மும் செய்தால் போதுமானது' என்று சொன்ன செய்தியை நீர் என்ன செய்வீர்?' என அபூ மூஸா(ரலி) கேட்டதற்கு, '(அம்மார்(ரலி) உமர்(ரலி) அவர்களிடம் அச்செய்தியைக் கூறிய போது) அதை உமர்(ரலி) ஏற்றுக் கொள்ளவில்லை என்பது உமக்குத் தெரியாதா?' என்று அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) பதில் கூறினார். அப்போது, 'அம்மார்(ரலி) அறிவிப்பதைவிட்டு விடுங்கள். 'தண்ணீர் கிடைக்காவிட்டால் தயம்மும் செய்து கொள்ளுங்கள்' என்ற இந்த இறைவசனத்தை என்ன செய்வீர்கள்?' என்று அபூ மூஸா(ரலி) கேட்டதற்கு, 'இந்த விஷயத்தில் நாம் அவர்களுக்கு அனுமதி வழங்கிவிட்டால் யாருக்காவது தண்ணீர் கொஞ்சம் குளிராகத் தெரிந்தால் அதில் உளூச் செய்வதைவிட்டுவிட்டு தயம்மும் செய்வார்' என்று அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) தாம் சொல்லக்கூடிய இந்த வார்த்தையின் விபரீதத்தைப் புரியாமலே சொல்லிவிட்டார்.
இதற்காகத்தான் தயம்மும் செய்வதை அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) வெறுத்திருக்கக் கூடுமோ? என ஷகீம்டம் நான் கேட்டதற்கு அவர் 'ஆம்! என்றார்" என அஃமஷ் அறிவித்தார்.



தயம்மும்

(குளிப்புக் கடமையானவருக்குத்) தண்ணீர் கிடைக்காவிட்டாலும் அவர் தொழ வேண்டாமல்லவா?' என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களிடம் அபூ மூஸா(ரலி) கேட்டதற்கு, 'இந்த விஷயத்தில் நாம் சலுகையளித்தால் குளிர் ஏற்பட்டால் கூட மக்கள் தயம்மும் செய்து தொழ ஆரம்பித்து விடுவார்கள்' என்று அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி), அம்மார் இப்னு யாஸிர்(ரலி) உமர்(ரலி) அவர்களிடம் ('தண்ணீர் கிடைக்காவிட்டால் தயம்மும் செய்தால் போதுமானது' என்று) சொன்ன செய்தியை நீர் என்ன செய்வீர்?' என்று அவர் கேட்டார். அதற்கு, '(அம்மார்(ரலி) உமர்(ரலி) அவர்களிடம் அச்செய்தியைக் கூறியபோது) அதை உமர்(ரலி) ஏற்றுக் கொள்ளவில்லை' என்பது உமக்குத் தெரியாதா?' என்று அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) கேட்டார்.
'இதற்காகத்தான் தயம்மும் செய்வதை அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) வெறுத்திருக்கக் கூடுமோ?' என ஷகீக் அவர்களிடம் நான் கேட்டதற்கு, அவர் 'ஆம்! எனப் பதிலளித்தார்கள்" என அஃமஷ் அறிவித்தார்.


தயம்மும்

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு பயணம் சென்றோம். இரவின் கடைசி நேரம் வந்தபோது எங்களுக்கு தூக்கம் மேலிட்டது. பயணிக்கு அதைவிட இன்பமான தூக்கம் எதுவும் இருக்க முடியாது. அந்தத் தூக்கத்திலிருந்து எங்களை (அதிகாலை) சூரிய வெப்பம்தான் எழுப்பியது. முதல் முதலாகத் தூக்கத்திலிருந்து எழுந்தவர் இன்னவர், அடுத்த இன்னவர் அவரை அடுத்து இன்னவர் இந்த ஹதீஸ் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூ ரஜா எழுந்தவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டுக் கூறினார். அவருக்கு அடுத்த அறிவிப்பாளரான அவ்ஃப் அவர்களின் பெயர்களை மறந்துவிட்டார். நான்காவதாகத் தூக்கத்திலிருந்து எழுந்தவர் உமர் இப்னு கத்தாப்(ரலி) ஆவார்கள்."
நபி(ஸல்) அவர்கள் தூங்கினால் அவர்கள் தாமாகவே தூக்கத்திலிருந்து விழிக்கும் வரை வேறு யாராலும் எழுப்பப்பட மாட்டார்கள். காரணம் அவர்களின் தூக்கத்தில் என்ன செய்தி வருமென்பது எங்களுக்குத் தெரியாது. உமர்(ரலி) தூக்கத்தைவிட்டு எழுந்து மக்களுக்கு ஏற்பட்ட (ஸுப்ஹ் தொழுகை தவறிப்போன) இந்நிலையைப் பார்த்ததும் அல்லாஹு அக்பர்!' என்று சப்தமிட்டார். அவர் திடகாத்திரமான மனிதராக இருந்தார். அவர் சப்தமிட்டுத் தக்பீர் முழங்கிக் கொண்டே இருந்தார். அவர்களின் சப்தத்தைக் கேட்டு நபி(ஸல்) அவர்களும் தூக்கத்திலிருந்து எழுந்தார்கள். உடனே மக்கள் தங்களுக்கு ஏற்பட்ட இந்நிலையை நபி(ஸல்) அவர்களிடம் முறையிட்டார்கள். அப்போது 'அதனால் எந்தப் பாதிப்புமில்லை. நீங்கள் இங்கிருந்து புறப்படுங்கள்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறிவிட்டு, அந்த இடத்தைவிட்டும் புறப்பட்டார்கள். சிறிது தூரம் சென்றதும் அங்கே தங்கி உளூச் செய்யத் தண்ணீர் கொண்டு வரச் செய்து அதில் உளூச் செய்தார்கள். தொழுகைக்காக அழைப்புக் கொடுக்கப்பட்டது. மக்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். நபி(ஸல்) அவர்கள் தொழுகையை முடித்துவிட்டு திரும்பிப் பார்த்தபோது, அங்கு ஒருவர் கூட்டத்துடன் தொழாமல் தனியாக இருந்தார். 'ஜமாஅத்துடன் நீர் தொழாமலிருக்கக் காரணமென்ன?' என்று அவரிடம் கேட்டபோது, 'எனக்குக் குளிப்புக் கடமையாகிவிட்டது. தண்ணீர் இல்லை' என்று அவர் கூறினார். 'மண்ணில் தயம்மும் செய். அது உனக்குப் போதுமானது' என்று நபி(ஸல்) அவர்கள் அவரிடம் கூறினார்கள்.
பின்னர் நபி(ஸல்) அவர்கள் பயணத்தைத் தொடங்கினார்கள். அப்போது மக்கள் அவர்களிடம் சென்று 'தாகமாக இருக்கிறது; தண்ணீர் இல்லை' என முறையிட்டார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் தங்களின் வாகனத்திலிருந்து இறங்கி, ஒரு மனிதரையும் அவர் பெயரை அபூ ரஜா குறிப்பிட்டார்கள். அவ்ஃப் என்பவர் மறந்துவிட்டார். அலீ(ரலி) அவர்களையும் அழைத்து' நீங்கள் இருவரும் சென்று தண்ணீரைத் தேடுங்கள்' என்று கூறினார்கள். அவர்கள் இருவரும் தண்ணீரைத் தேடிச் சென்று கொண்டிருந்தபோது, வழியில் ஒரு பெண்ணைச் சந்தித்தார்கள். அவள் ஓர் ஒட்டகத்தின் மீது இரண்டு தோல் பைகளில் தண்ணீர் வைத்துக் கொண்டு அதற்கிடையில் அமர்ந்திருந்தாள்.
'தண்ணீர் எங்கே கிடைக்கிறது?' என்று அவ்விருவரும் அப்பெண்ணிடம் கேட்டனர். 'தண்ணீர் ஒரு நாள் பயண தூரத்தில் இருக்கிறது. எங்களுடைய ஆண்கள் தண்ணீருக்காகப் பின்தங்கிவிட்டனர்' என அப்பெண் கூறினாள். 'அப்படியானால் நீ புறப்படு' என்று அவ்விருவரும் அப்பெண்ணிடம் கூறினார்கள். 'எங்கே?' என்று அவள் கேட்டாள். 'அல்லாஹ்வின் தூதரிடம்' என்று கூறினார்கள். 'மதம் மாறியவர் என்று கூறப்படுகிறாரே அவரிடத்திலா?' என்று அப்பெண் கேட்டாள். 'நீ கூறுகிற அவரேதான்' என்று கூறிவிட்டு அவளை நபி(ஸல்) அவர்களிடம் அழைத்து வந்து நடந்ததைக் கூறினார்கள்.
'அந்தப் பெண்ணை அவளுடைய ஒட்டகத்திலிருந்து இறங்கச் செல்லுங்கள்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறிவிட்டு, ஒரு பாத்திரத்தைக் கொண்டு வரச் சொல்லி, அந்த இரண்டு தோல் பைகளிலிருந்த தண்ணீரைப் பாத்திரங்களில் நிரப்பினார்கள். பின்னர் அந்த இரண்டு தோல் பைகளின் அடிப்புற வாயைக் கட்டிவிட்டுத் தண்ணீர் செலுத்தும் மேற்புற வாயைக் கட்டாமல்விட்டுவிட்டார்கள். 'எல்லோரும் வந்து தண்ணீர் குடியுங்கள். சேகரித்து வையுங்கள்' என்று மக்களுக்கு அறிவிக்கப்பட்டது. விரும்பியவர்கள் குடித்தார்கள்; விரும்பியவர்கள் பாத்திரங்களில் எடுத்து வைத்தார்கள். குளிப்புக் கடமையான அவர்தாம் கடைசியாக வந்தவர். அவருக்கு ஒரு பாத்திரம் தண்ணீர் கொடுத்து, 'இதைக் கொண்டு போய் உம் மீது ஊற்றிக் கொள்ளும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அந்தப் பெண் தன்னுடைய தண்ணீர் எந்தெந்த வகையிலெல்லாம் பயன்படுத்தப்படுகிறது என்பதைக் கவனித்துக் கொண்டே நின்றாள். அல்லாஹ்வின் மீது ஆணையாக அவளுடைய உள்ளத்தில் நபி(ஸல்) மீது இருந்த வெறுப்பு நீங்கிவிட்டது. அந்த இரண்டு தோல் பைகளிலிருந்து முதலில் தண்ணீரை எடுக்கும்போது இருந்ததை விட அதிகமான தண்ணீர் பிறகு அத்தோல் பையில் இருப்பது போன்று எங்களுக்குத் தெரிந்தது. (தண்ணீர் குறையவில்லை.) 'அந்தப் பெண்ணுக்கு ஏதாவது சேகரித்துக் கொடுங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அவளுக்காகப் பேரீச்சம் பழம், மாவு போன்றவற்றைச் சேகரித்தார்கள். அவளுக்குப் போதுமான உணவு சேர்ந்தது. அதைத் துணியில் வைத்துக் (கட்டி) அவளை ஒட்டகத்தின் மீது அமரச் செய்து உணவுப் பொட்டலமுள்ள துணியை அவளுக்கு முன்னால் வைத்தார்கள். பின்னர், அந்தப் பெண்ணிடம் 'உன்னுடைய தண்ணீரிலிருந்து எதையும் நாங்கள் குறைக்கவில்லை; அல்லாஹ்தான் எங்களுக்குத் தண்ணீர் புகட்டினான்' என்பதைத் தெரிந்து கொள் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அந்தப் பெண் தன்னுடைய குடும்பத்தினரிடம் குறிப்பிட்ட நேரத்தை விடத் தாமதமாக வந்தபோது, 'பெண்ணே! நீ பிந்தி வரக்காரணமென்ன?' என்று கேட்டதற்கு 'ஓர் ஆச்சரியமான விஷயம் நிகழ்ந்தது. இரண்டு மனிதர்கள் என்னைச் சந்தித்து மதம் மாறியவர் என்று கூறப்படக் கூடிய அந்த மனிதரிடம் என்னை அழைத்துச் சென்றனர். அவர் இப்படியெல்லாம் செய்தார்' (என நடந்த நிகழ்ச்சிகளைக் கூறினாள்.)
அவள் தன் கையின் நடுவிரலையும், ஆட்காட்டி விரலையும் வானத்தின் பக்கம் உயர்த்தி, 'அல்லாஹ்வின் மீது ஆணையாக இந்த வானத்திற்கும் இந்த பூமிக்கும் இடையிலுள்ள சூனியக்காரர்களில் அவர் மிகச் சிறந்தவராக இருக்க வேண்டும். அல்லது அல்லாஹ்வின் மீது ஆணையாக அவர் இறைத்தூதராக இருக்க வேண்டும்' என்று கூறினாள்.
பின்னர் முஸ்லிம்கள் அந்தப் பெண்ணைச் சுற்றி வாழ்ந்தவர்களை எதிர்த்துப் போராடினார்கள். அப்போது அந்தப் பெண் எந்தக் குடும்பத்தைச் சார்ந்துள்ளாளோ அந்தக் குடும்பத்தை அவர்கள் ஒன்றும் செய்யவில்லை.
ஒரு முறை அந்தப் பெண் தங்களின் கூட்டத்தாரிடம், 'இந்த முஸ்லிம்கள் வேண்டுமென்றே (உங்களிடம் போரிடாமல்) உங்களைவிட்டு விடுகிறார்கள் என்றே கருதுகிறேன். எனவே நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள விரும்புகிறீர்களா?' என்று கேட்டபோது அவர்கள் எல்லோரும் அவளுடைய பேச்சுக்குக் கட்டுப்பட்டு இஸ்லாத்தில் இணைந்தார்கள்" என இம்ரான்(ரலி) அறிவித்தார்.



தயம்மும்

'நபி(ஸல்) அவர்கள் தங்களின் இரண்டு கைகளையும் தரையில் அடித்துத் தங்களின் முகத்தையும் இரண்டு முன் கைகளையும் தடவிக் காண்பித்தார்கள்" என அம்மார்(ரலி) அறிவித்தார்.



தயம்மும்

முந்திய ஹதீஸே இங்கு மீண்டும் இடம் பெற்றுள்ளது.


தயம்மும்

'நானோ மண்ணில் புரண்டேன். இந்நிகழ்ச்சியை நபி(ஸல்) அவர்களிடம் சொன்னபோது அவர்கள் முன்கைகளும் முகமும் போதுமானதாக இருந்தது' என அம்மார்(ரலி) உமர்(ரலி) அவர்களிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள கூறினார்கள்' என்று குறிப்பிட்டார்" அப்துர்ரஹ்மான் இப்னு அப்ஸா(ரலி) அறிவித்தார்.


தயம்மும்

நான் உமர்(ரலி) அவர்களிடமிருந்தேன். அப்போது அம்மார் இப்னு யாஸிர்(ரலி) உமர்(ரலி) அவர்களிடம் 'நாம் ஒரு பயணத்தில் சென்றபோது குளிப்புக் கடமையாகிவிட்டது' என்று கூறி (தயம்மும் செய்து காட்டினார்கள். அப்போது) இரண்டு கைகளிலும் ஊதிக் காட்டினார்கள்" என அப்துர்ரஹ்மான் இப்னு அப்ஸா(ரலி) அறிவித்தார்.


தயம்மும்

முந்திய ஹதீஸ் இங்கே இடம் பெறுகிறது. அத்துடன் 'ஷுஅபா' என்பவர் இரண்டு கைகளால் பூமியில் அடித்து அவற்றைத் தம் வாயின் பக்கம் நெருக்கி (ஊதிவிட்டு) பின்னர் தம் முகத்தையும் இரண்டு முன் கைகளையும் தடவினார்" என்று குறிப்பிட்டார் எனக் குறிப்பிடப்படுகிறது.



;;