தயம்மும்

நான் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) மற்றும் அபூ மூஸல் அஷ்அரி(ரலி) ஆகிய இருவருடன் அமர்ந்திருந்தேன். அபூ மூஸா(ரலி) அப்துல்லாஹ் இப்னுமஸ்வூத்(ரலி) அவர்களிடம் 'குளிப்புக் கடமையானவர் ஒரு மாத காலம் வரை தண்ணீரைப் பெறவில்லையானால் அவர் தயம்மும் செய்து தொழ வேண்டியதில்லையா? 'மாயிதா' என்ற அத்தியாயத்தில் வரும், 'நீங்கள் தண்ணீரைப் பெறவில்லையானால் சுத்தமான மண்ணில் தயம்மும் செய்யுங்கள்' என்ற வசனத்தை என்ன செய்வீர்கள்?' என்று கேட்டதற்கு, 'இந்த விஷயத்தில் பொது அனுமதி கொடுக்கப்பட்டால், தண்ணீர் கொஞ்சம் குளிராக இருக்கும் போதெல்லாம் (மக்கள்) தண்ணீரில் உளூச் செய்வதைவிட்டுவிட்டு மண்ணில் தயம்மும் செய்து விடுவார்கள்' என்று அப்துல்லா இப்னு மஸ்வூத்(ரலி) கூறினார். அப்போது 'இதற்காகத்தான் தயம்மும் செய்வதை நீங்கள் வெறுத்தீர்களா?' என்று நான் கேட்டதற்கு 'ஆம்!' என்று பதிலளித்தபோது, 'என்னை ஒரு வேலைக்காக நபி(ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தபோது எனக்குக் கிடைக்கவில்லை. எனவே பிராணிகள் மண்ணில் புரளுவது போன்று புரண்டேன். இச்செய்தியை நபி(ஸல்) அவர்களிடம் நான் சொன்னபோது நபி(ஸல்) அவர்கள் தங்களின் இரண்டு கைகளால் பூமியில் ஓர் அடி அடித்து, பின்னர் இரண்டு கைகளையும் தட்டிவிட்டு, தங்களின் வலக்கரத்தால் இடது புறங்கையைத் தடவினார்கள். அல்லது தங்களின் இடக்கரத்தால் வலப்புறங்கையைத் தடவினார்கள். பின்னர் இரண்டு கைகளால் தங்களின் முகத்தைத் தடவிவிட்டு 'இப்படிச் செய்வது உமக்குப் போதுமானதாக இருந்தது' என்று கூறினார்கள்' என்ற செய்தியை 'உமர்(ரலி) அவர்களிடம், அம்மார் சொன்னதை நீங்கள் கேள்விப்படவில்லையா?' என அபூ மூஸா(ரலி) கேட்டதற்கு, 'அம்மார் சொன்னதில் உமர்(ரலி) திருப்திப்படவில்லை' என்பது உமக்குத் தெரியாதா? என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) திரும்பக் கேட்டார்" என ஷகீக் அறிவித்தார்.
மற்றோர் அறிவிப்பில்: 'நான் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி), அபூ மூஸா(ரலி) ஆகிய இருவருடன் அமர்ந்திருந்தபோது, அபூ மூஸா(ரலி), அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களை நோக்கி 'என்னையும் உங்களையும் நபி(ஸல்) அவர்கள் (ஒரு வேலைக்காக) அனுப்பியபோது எனக்குக் குளிப்புக் கடமையாகி மண்ணில் நான் புரண்டதும், பின்னர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து நடந்த விஷயத்தைச் சொன்னபோது நபி(ஸல்) அவர்கள் தங்களின் முகத்தையும் இரண்டு முன் கைகளையும் ஒரு முறை தடவிவிட்டு 'இப்படி நீர் செய்திருந்தால் அது உமக்குப் போதுமானது' என்று கூறினார்கள்' என உமர்(ரலி) அவர்களிடம் அம்மார்(ரலி) கூறியதை நீர் கேள்விப்பட்டதில்லையா' என அபூ மூஸா(ரலி) கேட்டார்" என ஷகீக்' வாயிலாக 'யஃலா' அறிவித்தார்.