உளூச் செய்வது

'அனஸ்(ரலி) அவர்களிடமிருந்து அல்லது அனஸின் குடும்பத்தாரிடமிருந்து நாங்கள் பெற்ற, நபி(ஸல்) அவர்களின் முடி எங்களிடம் உள்ளது என அபீதா என்பவரிடம் கூறினேன். அப்போது அவர், 'நபி(ஸல்) அவர்களின் ஒரு முடி என்னிடம் இருப்பது உலகம் மற்றும் அதிலுள்ளவற்றையும் விட எனக்கு மிக விருப்பமானதாகும்' என்று கூறினார்" முஹம்மத் இப்னு ஸீரின் அறிவித்தார்.



உளூச் செய்வது

'அஸர் தொழுகையின் நேரம் நெருங்கியபோது நபி(ஸல்) அவர்களை பார்த்தேன். மக்கள் உளூச் செய்வதற்குத் தண்ணீரைத் தேடினார்கள். தண்ணீர்ம்டைக்கவில்லை. நபி(ஸல்) அவர்களிடம் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வரப்பட்டது. தண்ணீர் உள்ள பாத்திரத்தில் நபி(ஸல்) அவர்கள் தங்களின் கையை வைத்து அப்பாத்திரத்திலிருந்து உளூச் செய்யுமாறு மக்களுக்குக் கட்டளையிட்டார்கள். நபி(ஸல்) அவர்களின் விரல்களின் கீழேயிருந்தது அங்கிருந்த கடைசி நபர் உளூச் செய்து முடிக்கும் வரை தண்ணீர் சுரந்து கொண்டிருந்ததை பார்த்தேன்" என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.


உளூச் செய்வது

'நபி(ஸல்) அவர்கள் செருப்பு அணிவதிலும், தலை முடி சீவுவதிலும், சுத்தம் செய்வதிலும், தங்களின் எல்லா விஷயங்களையும் வலப்புறத்தைக் கொண்டு ஆரம்பிப்பதை விரும்பக் கூடியவர்களாக இருந்தார்கள்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.



உளூச் செய்வது

'நபி(ஸல்) அவர்களின் மகள் ஜைனப்(ரலி)யின் ஜனாஸாவை கழுவும் பெண்களிடம் நபி(ஸல்) அவர்கள், 'அவரின் வலப்புறத்திலிருந்து கழுவ ஆரம்பியுங்கள். மேலும் அவரின் உளூவின் உறுப்புகளையும் கழுவுங்கள்' என்று கூறினார்கள்" உம்மு அதிய்யா(ரலி) அறிவித்தார்.


உளூச் செய்வது

'உபைது இப்னு ஜுரைஜ் என்பவர் அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்களிடம், 'அப்துர்ரஹ்மானின் தந்தையே! உங்கள் தோழர்களில் எவரும் செய்யாத நான்கு விஷயங்களை நீங்கள் செய்வதை காண்கிறேன்' என்றார். 'இப்னு ஜுரைஜே! அவை யாவை?' என இப்னு உமர்(ரலி) கேட்டதற்கு, '(தவாஃபின்போது) கஅபதுல்லாஹ்வின் நான்கு மூலைகளில் யமன் தேசத்தை நோக்கியுள்ள (ஹஜருல் அஸ்வத், ருக்னுல் யமானி ஆகிய) இரண்டு மூலைகளைத் தவிர மற்ற மூலைகளை நீங்கள் தொடுவதில்லை என்பதை பார்த்தேன். முடியில்லாத தோல் செருப்பை நீங்கள் அணிவதைப் பார்க்கிறேன். நீங்கள் ஆடையில் மஞ்சள் நிறத்தால் சாயம் பூசுவதைப் பார்க்கிறேன். மேலும் நீங்கள் மக்காவில் இருந்தபோது (துல்ஹஜ் மாத) பிறையைக் கண்டதுமே மக்கள் இஹ்ராம் அணிந்த நிலையில் நீங்கள் (துல்ஹஜ் மாதம்) எட்டாவது நாள்தான் இஹ்ராம் அணிந்ததைப் பார்த்தேன்' என்று இப்னு ஜுரைஜ் கூறியதற்கு, 'கஅபதுல்லாஹ்வின் மூலைகளைப் பொருத்த வரை நபி(ஸல்) அவர்கள் யமன் நாட்டை நோக்கியுள்ள இரண்டு மூலைகளைத் தவிர எதையும் தொட நான் காணவில்லை. முடியில்லாத செருப்பைப் பொருத்த வரையில் நபி(ஸல்) அணிந்து முடியில்லாத செருப்பை அணிந்து உளூச் செய்வதை பார்த்தேன். எனவே அதை அணிவதை நான் பிரியப்படுகிறேன். மஞ்சள் நிறத்தைப் பொருத்த வரை நபி(ஸல்) அவர்கள் ஆடையில் மஞ்சள் சாயம் பூசுவதை பார்த்தேன். எனவே அதைக் கொண்டு சாயம் பூசுவதை விரும்புகிறேன். இஹ்ராம் அணிவதைப் பொருத்தவரை நபி(ஸல்) அவர்கள் தங்கள் வாகனம் அவர்களை ஏற்றிக் கொண்டு (எட்டாம் நாள்) புறப்படும் வரை அவர்கள் இஹ்ராம் அணிவதை நான் பார்த்ததில்லை' என்று அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) கூறினார்" என ஸயீத் அல் மக்புரி அறிவித்தார்.



உளூச் செய்வது

'மக்கள் உளூச் செய்யும் தொட்டியிலிருந்து உளூச் செய்து கொண்டிருந்தபோது அவ்வழியே சென்ற அபூ ஹுரைரா(ரலி) (எங்களைப் பார்த்து) 'உளூவை முழுமையாகச் செய்யுங்கள். நிச்சயமாக அபுல் காஸிம் (முஹம்மத்(ஸல்) அவர்கள் 'குதிகால்களை சரியாகக் கழுவாதவர்களுக்கு நரகம் தான்' என்று கூறினார்கள்' என்றார்கள்" என முஹம்மத் இப்னு ஸியாத் அறிவித்தார்.


உளூச் செய்வது

'உஸ்மான் இப்னு அஃப்பான்(ரலி) ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வரச் சொல்லித் தம் இரண்டு முன் கைகளில் மூன்று முறை ஊற்றிக் கழுவினார்கள். பின்னர் தம் வலக்கரத்தைப் பாத்திரத்தில் செலுத்தி, வாய்க் கொப்பளித்து, மூக்கிற்குத் தண்ணீர் செலுத்தித் சீந்தினார்கள். பின்னர் தம் முகத்தை மூன்று முறை கழுவினார்கள். பின்பு தலையை ஈரக் கையால் தடவினார்கள். பின்னர் தம் இரண்டு கால்களையும் கரண்டை வரை மூன்று முறை கழுவினார்கள். பிறகு 'நான் உளூச் செய்வதைப் போன்றே நபி(ஸல்) அவர்கள் உளூச் செய்வதை பார்த்திருக்கிறேன்' என்று கூறிவிட்டு, நபி(ஸல்) அவர்கள் என்னிடம், 'யாரேனும் என்னுடைய இந்த உளூவைப் போன்று செய்து, பின்னர் தீய எண்ணங்களுக்கு இடம் தராமல் இரண்டு ரக்அத்துகள் தொழுதால் அவர் முன்னர் செய்த (சிறு) பாவங்களை அல்லாஹ் மன்னிக்கிறான்" என்று கூறினார்கள் என்றார்கள்" என ஹும்ரான் அறிவித்தார்.



உளூச் செய்வது

'நபி(ஸல்) அவர்களுடன் நாங்கள் ஒரு பயணத்தில் இருந்தபோது நபி(ஸல்) அவர்கள் எங்களைவிட்டும் பின்தங்கிவிட்டாhக்ள். நாங்கள் அஸர் நேரத்தை அடைந்தபோது எங்களிடம் வந்து சேர்ந்தார்கள். அப்போது நாங்கள் உளூச் செய்து கொண்டிருந்தோம். (கால்களைக் கழுவாமல்) கால்களில் ஈரக்கையால் தடவிக் கொண்டிருந்தோம். அப்போது, 'இத்தகைய குதிங்கால்களை நரகம் தீண்டட்டும்' என்று இரண்டு அல்லது மூன்று முறை உரத்த குரலில் நபி(ஸல்) கூறினார்கள்" என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.


உளூச் செய்வது

'உங்களில் ஒருவர் உளூச் செய்தால் தம் மூக்கிற்குத் தண்ணீர்ச் செலுத்திப் பின்னர் அதை வெளியாக்கட்டும். மலஜலம் கழித்துவிட்டுக் கல்லால் சுத்தம் செய்பவர் ஒற்றைப் படையாகச் செய்யட்டும். உங்களில் ஒருவர் விழித்தெழுந்தாhல் அவர், தாம் உளூச் செய்யும் தண்ணீரில் தம் கையை நுழைப்பதற்கு முன்னர் கழுவிக் கொள்ளட்டும். ஏனென்றால், (தூங்கத்தில்) தம் கை எங்கே இருந்தது என்பதை உங்களில் எவரும் அறியமாட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.



உளூச் செய்வது

'உளூச் செய்பவர் மூக்கிற்குத் தண்ணீர் செலுத்தி வெளியாக்கட்டும்; மலஜலம் கழித்துவிட்டுக் கல்லால் சுத்தம் செய்பவர் ஒற்றைப் படையாகச் செய்யவும்' இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.


உளூச் செய்வது

உஸ்மான்(ரலி), உளூச் செய்யும்போது (மக்களிடம்) 'நான் ஒரு ஹதீஸை உங்களுக்குச் சொல்லட்டுமா? ஒரு வசனம் மட்டும் இல்லையானால் அதை நான் உங்களுக்குச் சொல்லியிருக்க மாட்டேன்' என்று கூறிவிட்டு, 'ஒரு மனிதன் அழகிய முறையில் உளூச் செய்து, தொழவும் செய்வானாயின் அவன் தொழுது முடிக்கும் வரை அவனுக்கும் தொழுகைக்கும் இடையிலுள்ள பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதை கேட்டிருக்கிறேன் என்றார்கள்" ஹும்ரான் அறிவித்தார்.
அது எந்த வசனம் என்று குறிப்பிடும்போது 'நாம் அருளிய தெளிவான அத்தாட்சிகளையும், நேர் வழியையும் அதனை நாம் வேதத்தில் மனிதர்களுக்கும் விளக்கிய பின்னரும் மறைப்பவர்களை அல்லாஹ் சபிபிக்கிறான்; மேலும் அவர்களைச் சபிப்பவர்களும் சபிக்கிறார்கள்' (திருக்குர்ஆன் 02:159) என்ற வசனமாகும்" என உர்வா கூறினார்.



உளூச் செய்வது

'உஸ்மான் இப்னு அஃப்பான்(ரலி) ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வரச் சொல்லித் தம் இரண்டு முன் கைகளில் மூன்று முறை ஊற்றிக் கழுவினார். பின்னர் தம் வலக்கரத்தைப் பாத்திரத்தில் செலுத்தி, வாய்க் கொப்புளித்து, மூக்கிற்குத் தண்ணீர் செலுத்தினார். பின்னர் தம் முகத்தை மூன்று முறை கழுவினார். தம் இரண்டு கைகளையும் மூட்டுவரை மூன்று முறை கழுவினார். பின்பு தலையை ஈரக் கையால் தடவினார். பின்னர் தம் இரண்டு கால்களையும் கரண்டை வரை மூன்று முறை கழுவினார். பின்னர் 'யாரேனும் என்னுடைய இந்த உளூவைப் போன்று செய்து, பின்னர் தீய எண்ணங்களுக்கு இடம் தராமல் இரண்டு ரக்அத்துகள் தொழுதால் அவர் முன்னர் செய்த (சிறு) பாவங்கள் மன்னிக்கப்படும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என உஸ்மான்(ரலி) கூறினார்" ஹும்ரான் அறிவித்தார்.



உளூச் செய்வது

'நபி(ஸல்) அவர்கள் உளூச் செய்தபோது அவர்கள் உறுப்புக்களை இரண்டிரண்டு முறை கழுவினார்கள்" என அப்துல்லாஹ் இப்னு ஜைத்(ரலி) அறிவித்தார்.



உளூச் செய்வது

'நபி(ஸல்) அவர்கள் உளூச் செய்யும்போது அவர்களின் உறுப்புக்களை ஒவ்வொரு முறை கழுவினார்கள்" என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.


உளூச் செய்வது

'நபி(ஸல்) அவர்கள் கழிப்பிடத்திற்குச் சென்றபோது, மூன்று கற்களைக் கொண்டு வருமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். நான் இரண்டு கற்களைப் பெற்றுக் கொண்டேன். மூன்றாவது கல்லைத் தேடிப் பார்த்தேன். கிடைக்கவில்லை. ஒரு விட்டையை எடுத்துக் கொண்டு வந்தேன். அவர்கள் விட்டையை எறிந்துவிட்டு 'இது அசுத்தமானது' என்று கூறினார்கள்" என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.



உளூச் செய்வது

'நபி(ஸல்) அவர்கள் இயற்கைத் தேவைக்காக வெளியே சென்றபோது அவர்களைத் தொடர்ந்து சென்றேன். அவர்கள் திரும்பிப் பார்க்காமலேயே சென்றார்கள். அவர்களின் அருகில் நான் சென்றபோது, 'சுத்தம் செய்வதற்காக எனக்குச் சில கற்களைக் கொண்டு வாரும். எலும்புகளையோ, விட்டையையோ கொண்டு வரவேண்டாம்" என்று கூறினார்கள். நான் (கற்களைப் பொறுக்கி) என்னுடைய ஆடையின் ஓரத்தில் எடுத்துக் கொண்டு வந்து நபி(ஸல்) அவர்களின் பக்கத்தில் வைத்துவிட்டுத் திரும்பினேன். நபி(ஸல்) அவர்கள் மலஜலம் கழித்த பின்னர் அக்கற்களால் சுத்தம் செய்தார்கள்" என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.


உளூச் செய்வது

உங்களில் ஒருவர் சிறுநீர் கழித்தால் அவர் தன்னுடைய வலக்கரத்தால் அதைத் தொடவேண்டாம். இன்னும் வலக்கரத்தால் சுத்தம் செய்யவும் வேண்டாம். (குடிப்பவர்) தன்னுடைய பாத்திரத்தில் மூச்சுவிடவேண்டாம் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் அபூ கதாதா தன்னுடைய தந்தையின் வாயிலாக அறிவித்தார்.


உளூச் செய்வது

'உங்களில் ஒருவர் (எதை) அருந்தினாலும் அந்தப் பாத்திரத்திற்குள் அவர் மூச்சு விட வேண்டாம். தம் வலக்கரத்தால் சத்தம் செய்யவும் வேண்டாம். (பானங்கள்) அருந்தும்போது குடிக்கும் பாத்திரத்திற்குள் மூச்சு விடவும் வேண்டாம்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என அபூ கதாதா(ரலி) அறிவித்தார்.


உளூச் செய்வது

நபி(ஸல்) அவர்கள் கழிப்பிடத்திற்குச் செல்லும்போது நானும் ஒரு சிறுவரும் தண்ணீர் நிரம்பிய தோல் பாத்திரத்தையும், ஒரு கைத்தடியையும் சுமந்து செல்வோம். (தேவையை முடித்ததும்) அவர்கள் தண்ணீரால் தூய்மைப்படுத்திக் கொள்வார்கள்" என அனஸ்(ரலி) அறிவித்தார்.
'கைத்தடி என்பது அதன் மேற்புறத்தில் பூண் இடப்பட்டுள்ள கைத்தடியாகும்' என்று ஷுஅபா குறிப்பிடுகிறார்.


உளூச் செய்வது

'நபி(ஸல்) அவர்கள் தங்களின் தேவைக்காக வெளியே சென்றால், நானும் சிறுவன் ஒருவனும் தண்ணீர் நிரம்பிய சிறிய தோல் பாத்திரம் ஒன்றை எங்களுடன் கொண்டு செல்வோம். அந்தத் தண்ணீரின் மூலம் நபி(ஸல்) அவர்கள் தூய்மைப்படுத்திக் கொள்வார்கள்" என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.



உளூச் செய்வது

'நபி(ஸல்) அவர்கள் தங்களின் தேவைக்காக வெளியே சென்றால், நானும் சிறுகூன் ஒருவனும் தண்ணீர் நிரம்பிய சிறிய தோல் பாத்திரம் ஒன்றை எங்களுடன் கொண்டு செல்வோம். அந்தத் தண்ணீர் மூலம் நபி(ஸல்) அவர்கள் தூய்மைப்படுத்திக் கொள்வார்கள்" என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.


உளூச் செய்வது

'எங்கள் வீட்டுக் கூரை மீது ஒரு நாள் ஏவினேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் இரண்டு செங்கற்களின் மீது பைத்துல் முகத்தஸ்ஸை முன்னோக்கியவர்களாக அமர்ந்திருக்கக் கண்டேன்" என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.



உளூச் செய்வது

'ஹப்ஸா(ரலி)வின் வீட்டுக்கூரை மீது ஒரு வேலையாக நான் ஏறினேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் சிரியாவை முன்னோக்கியும் கிப்லாவின் திசையைப் பின்னோக்கியும் அமர்ந்தவர்களாகத் தம் (இயற்கைத்) தேவையை நிறைவேற்றிக் கொண்டிருக்கக் கண்டேன்" என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.



உளூச் செய்வது

(நபி வீட்டுப்) பெண்களே! நீங்கள் உங்கள் தேவைக்காக வெளியே செல்ல (இப்போதும்) உங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டே உள்ளது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார். "வெளியே செல்ல' என்பதற்கு 'கழிப்பிடம் நாடி' என்பதே நபி(ஸல்) அவர்களின் கருத்தாகும்" என இந்த ஹதீஸ் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஹிஷாம் குறிப்பிடுகிறார்.


உளூச் செய்வது

'நபி(ஸல்) அவர்களின் மனைவியர் கழிப்பிடம் நாடி வெட்ட வெளிப் பொட்டல்களுக்கு இரவு நேரங்களில் (வீட்டைவிட்டு) வெளியே செல்லும் வழக்கமுடையவர்களாயிருந்தார்கள். வெட்ட வெளி பொட்டல் என்பது விசாலமான திறந்த வெளியாகும். நபி(ஸல்) அவர்களிடம், 'உங்கள் மனைவியரை (வெளியே செல்லும் போது) முக்காடிட்டு மறைத்துக் கொள்ளச் சொல்லுங்கள்' என உமர்(ரலி) சொல்லிக் கொண்டிருந்தார். ஆயினும் நபி(ஸல்) அவர்கள் அதைச் செயல்படுத்தவில்லை. நபி(ஸல்) அவர்களின் மனைவி ஸவ்தா(ரலி) இஷா நேரமான ஓர் இரவில் (கழிப்பிடம் நாடி) வீட்டைவிட்டு வெளியே சென்றார். நபி(ஸல்) அவர்களின் மனைவியரில் அவர்களே உயரமான பெண்மணியாக இருந்தார்கள். அவர்களைப் பார்த்த உமர்(ரலி), 'ஸவ்தாவே! உங்களை யார் என்று புரிந்து கொண்டோம்' என்றார். (அப்போதாவது பெண்கள்) முக்காடிடுவது பற்றிய குர்ஆன் வசனம் அருளப்படாதா என்ற பேராசையில் உரத்து அழைத்தார். அப்போதுதான் பெண்கள் முக்காடு போடுவது பற்றிய வசனத்தை அல்லாஹ் அருளினான்" ஆயிஷா(ரலி) அறிவித்தார்.



உளூச் செய்வது

நீர் உம்முடைய தேவைக்காக (மலம் கழிக்க) உட்கார்ந்தால் கிப்லாவையோ, பைத்துல் முகத்தஸ்ஸையோ முன்னோக்கக் கூடாது என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால் நான் ஒருநாள் எங்கள் வீட்டின் கூரையின் மீது (ஒரு வேலையாக) ஏறினேன். அப்போது (தற்செயலாக) நபி(ஸல்) இரண்டு செங்கற்களின் மீது பைத்துல் முகத்தஸ்ஸை முன்னோக்கியவர்களாக மலம் கழிக்க அமர்ந்திருக்கக் கண்டேன்" என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
இச்செய்தியை அவர்களிடமிருந்து அறிவிக்கும் வாஸிவு இப்னு ஹப்பான் அவர்களை (தொழுது முடித்த பிறகு) நோக்கி இப்னு உமர்(ரலி) 'நீரும் பிட்டங்களை பூமியில் அழுத்தித் தொழுபவர்களைச் சார்ந்தவர்தாம் போலும்" என்று கூறினார்கள். அதற்கு வாஸிவு, 'அல்லாஹ்வின் மீது சத்தியமாக நான் அவர்கள் குறை சொன்னவாறு தொழுதேனா என்பதை அறிய மாட்டேன்" என்று கூறினார்.
"பூமியுடன் (தன் பிட்டங்களை) அப்பியவராகவும், பிட்டங்களைப் பூமியைவிட்டு அகற்றாதவராகவும் ஸஜ்தா செய்து தொழுபவரைத்தான் (இப்னு உமர்) அவர்கள் குறிப்பிட்டார்கள்" என இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான இமாம் மாலிக் கூறினார்.



உளூச் செய்வது

உங்களில் ஒருவர் மலம் கழிக்கச் சென்றால் அவர் கிப்லாவை முன்னோக்கக் கூடாது. தம் முதுகுப் புறத்தால் (அதை) பின்னால் ஆக்கவும் கூடாது. (எனவே) கிழக்கு நோக்கியோ, மேற்கு நோக்கியோ திரும்பிக் கொள்ளுங்கள்' இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என அபூ அய்யூபில் அன்ஸாரி(ரலி) அறிவித்தார். (குறிப்பு: மேற்கூறப்பட்ட ஹதீஸ், கிப்லா தெற்கு வடக்காக அமைந்த மதீனா, யமன், சிரியா போன்ற நாடுகளில் வாழும் மக்களுக்கே பொருந்தும்.)



உளூச் செய்வது

'கழிப்பிடத்திற்குச் சென்றபோது, 'இறைவா! அருவருக்கத் தக்க செயல்கள், இழிவான பண்பாடுகள் ஆகியவற்றைத் தூண்டும் ஷைத்தானைவிட்டு உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்' என்று கூறும் வழக்கமுடையவர்களாக நபி(ஸல்) அவர்கள் இருந்தார்கள்" என அனஸ்(ரலி) அறிவித்தார்.


உளூச் செய்வது

'கழிப்பிடத்திற்குச் சென்றபோது, 'இறைவா! அருவருக்கத் தக்க செயல்கள், இழிவான பண்பாடுகள் ஆகியவற்றைத் தூண்டும் ஷைத்தானைவிட்டு உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்' என்று கூறும் வழக்கமுடையவர்களாக நபி(ஸல்) அவர்கள் இருந்தார்கள்" என அனஸ்(ரலி) அறிவித்தார்.


உளூச் செய்வது

'உங்களில் ஒருவர் தம் மனைவியுடன் உடலுறவு கொள்ளச் செல்லும்போது 'அல்லாஹ்வின் திரு நாமத்தைக் கொண்டு உடலுறவு கொள்ளப் போகிறேன். இறைவா! எங்களைவிட்டு ஷைத்தானைத் தூரமாக்கு! (இந்த உறவு மூலம்) நீ எங்களுக்கு அளிக்கப் போகும் (குழந்தைப்) பேற்றிலும் ஷைத்தானை அப்புறப்படுத்து' என்று சொல்லிவிட்டு உறவு கொண்டு அதன் மூலம் அவ்விருவருக்கும் குழந்தை வழங்கப்படுமானால் அக்குழந்தைக்கு ஷைத்தான் எந்த தீங்கும் விளைவிப்பதில்லை' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.



உளூச் செய்வது

'இப்னு அப்பாஸ்(ரலி) உளூச் செய்தார்கள். அப்போது ஒரு கைத் தண்ணீரை அள்ளி அதைக் கொண்டு தம் முகத்தைக் கழுவினார்கள். அதாவது ஒரு கைத் தண்ணீர் எடுத்து அதன் மூலமே தம் வலக்கையைக் கழுவினார்கள். பின்னர் இன்னொரு கையால் தண்ணீர் அள்ளித் தம் இடக்கையைத் கழுவினார்கள். பின்னர் ஈரக் கையால் தம் தலையைத் தடவினார்கள். பின்னர் இன்னொரு கைத் தண்ணீர் அள்ளி அதனை தம் வலக்காலில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி அதனைக் கழுவினார்கள். பின்னர் இன்னொரு கைத் தண்ணீர் அள்ளித் தம் இடக்காலில் ஊற்றிக் கழுவினார்கள். 'இப்படித்தான் நபி(ஸல்) அவர்கள் உளூச் செய்ய பார்த்தேன்' என்றும் இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்" என அதாவு இப்னு யஸார்(ரலி) அறிவித்தார்.


உளூச் செய்வது

(ஹஜ்ஜில்) நபி(ஸல்) அவர்கள் அரஃபாவிலிருந்து (முஸ்தலிஃபா) சென்று கொண்டிருந்தார்கள். வழியில் ஒரு கணவாயில் வாகனத்தைவிட்டு இறங்கிச் சிறுநீர் கழித்தார்கள். பின்னர் சுருக்கமாக உளூச் செய்தார்கள். அப்போது, 'இறைத்தூதர் அவர்களே! தாங்கள் தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழுகை உமக்கு முன்னர் (முஸ்தலிஃபாவில்) நடைபெறும்' என்று கூறிவிட்டு வாகனத்தில் ஏறினார்கள். முஸ்தலிஃபா என்ற இடம் வந்ததும். இறங்கி மீண்டும் உளூச் செய்தார்கள். இப்போது உளூவை முழுமையாகச் செய்தார்கள். மக்ரிப் தொழுகை நடைபெறப் போகிறது என்று அறிவிக்கப்பட்டதும், நபி(ஸல்) அவர்கள் மக்ரிப் தொழுகை நடத்தினார்கள். பின்னர் ஒவ்வொருவரும் தத்தம் ஒட்டகங்களைத் தங்குமிடங்களில் படுக்க வைத்தார்கள். பின்னர் இஷாத் தொழுகை நடைபெறப் போகிறது என்று அறிவிக்கப்பட்டது. நபி(ஸல்) அவர்கள் இஷாத் தொழுகை நடத்தினார்கள். (மக்ரிப், இஷா ஆகிய) இரண்டு தொழுகைகளுக்கிடையில் (வேறு எதுவும்) அவர்கள் தொழவில்லை" என உஸமா இப்னு ஜைத்(ரலி) அறிவித்தார்.



உளூச் செய்வது

நபி(ஸல்) அவர்கள் குறட்டை விடும் அளவுக்கு உறங்கிய பின்பு (எழுந்து) தொழுதனர். நான் என்னுடைய சிறிய தாயார் மைமூனா(ரலி) அவர்களின் வீட்டில் ஓரிரவு தங்கியிருந்தேன். நபி(ஸல்) அவர்கள் அந்த இரவின் ஆரம்பத்திலேயே எழுந்தார்கள். (பின்னர் தூங்கினார்கள்) இரவின் சிறு பகுதி ஆனதும் மீண்டும் எழுந்து, தொங்க விடப்பட்டிருந்த ஒரு பழைய தோல் துருத்தியிலிருந்து, (தண்ணீர் எடுத்து) சுருக்கமாக உளூச் செய்தார்கள்; பிறகு தொழுவதற்கு நின்றார்கள். நானும் அவர்கள் உளூச் செய்தது போன்று சுருக்கமாக உளூச் செய்துவிட்டு, நபி(ஸல்) அவர்களின் அருகே வந்து அவர்களின் இடப்பக்கத்தில் நின்றேன். உடனே நபி(ஸல்) அவர்கள் என்னைத் திருப்பி அவர்களின் வலப்பக்கமாக நிற்கச் செய்தார்கள். பின்னர்அவர்கள் அல்லாஹ் நாடிய அளவு தொழுதுவிட்டுப் பின்னர் மீண்டும் ஒருக்களித்துப் படுத்து குறட்டைவிட்டு உறங்கினார்கள். பின்னர் கூட்டுத் தொழுகைக்காக அவர்களை அழைத்தார். உடனே எழுந்து அவருடன் (ஸுப்ஹு) தொழுகைக்குச் சென்று மக்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். ஆனால் அவர்கள் (திரும்ப) உளூச் செய்யவில்லை" என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
இந்த ஹதீஸை அறிவிப்பவர்களில் ஒருவரான அம்ர் என்பவர் 'சுருக்கமாக உளூச் செய்தார்கள்' என்பதோடு 'குறைவாக' என்ற வார்த்தையையும் சேர்த்துக் கூறினார். அம்ர் என்பவரிடம் 'சிலர் இறைத்தூதரின் கண்கள்தாம் உறங்கும், அவர்களின் உள்ளம் உறங்காது என்று கூறுகிறார்களே! (அது உண்மையா?)' என நாங்கள் கேட்டதற்கு, 'நபிமார்களின் கனவு இறைவனிடமிருந்து வரும் செய்தி (யான வஹீ)க்கு சமமாகும்' என்று உபைது இப்னு உமைர் கூறத் தாம் கேட்டிருப்பதாகவும், அதற்குச் சான்றாக" உன்னை நான் அறுத்துப் பலியிடுவதாக என் உறக்கத்தில் கனவு கண்டேன்" (திருக்குர்ஆன் 37:102) என்ற இறை வசனத்தை அவர் ஓதிக் காட்டியதாகவும் சுஃப்யான் அவர்கள் கூறுகிறார்கள்.


உளூச் செய்வது

'தொழும்போது காற்றுப் பிரிவது போன்ற உணர்வு ஏற்படுவதாக நபி(ஸல்) அவர்களிடம் நான் முறையிட்டதற்கு, 'நாற்றத்தை உணரும் வரை அல்லது சப்தத்தைக் கேட்கும வரை தொழுகையிலிருந்து திரும்ப வேண்டாம்' என்று அவர்கள் கூறினார்கள்" என அப்துல்லாஹ் இப்னு ஸைத் இப்னு ஆஸிம்(ரலி) அறிவித்தார்.



உளூச் செய்வது

'சிறு தொடக்கு ஏற்பட்டவன் உளூச் செய்யும் வரை அவனுடைய தொழுகை ஏற்கப்படாது" என்று நபி(ஸல்) கூறினார்கள் என அபுஹுரைரா(ரலி) கூறியபோது, ஹள்ர மவ்த் என்ற இடத்தைச் சேர்ந்த ஒருவர் 'அபூ ஹுரைராவே! சிறு தொடக்கு என்பது என்ன? என்று கேட்டதற்கு அவர்கள் 'சப்தத்துடனோ சப்தமின்றியோ காற்றுப் பிரிவது' என்றார்கள்" ஹம்மாம் இப்னு முனப்பஹ் அறிவித்தார்.


உளூச் செய்வது

'ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் இஹ்ராம் கட்டியவர் அணிய வேண்டிய ஆடைகளைப் பற்றிக் கேட்டதற்கு, 'சட்டை, தலைப்பாகை, கால்சட்டைகள், முக்காடு (அல்லது தொப்பி), பச்சைச் சாயம் தோய்த்த ஆடை, அல்லது சிவப்புக் குங்குமச் சாயம் தோய்த்த ஆடை ஆகியவற்றை (இஹ்ராம் கட்டியவர்) அணியக் கூடாது. பாதணிகள் கிடைக்கவில்லையானால் (கணுக்கால்வரை) உயரமான காலுறைகளை அவர் அணிந்து கொள்ளலாம். (ஆனால்) கணுக்காலுக்குக் கீழே உயரம் குறையும் வரை அவ்விரண்டையும் வெட்டிவிடட்டும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.



உளூச் செய்வது

'ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் இஹ்ராம் கட்டியவர் அணிய வேண்டிய ஆடைகளைப் பற்றிக் கேட்டதற்கு, 'சட்டை, தலைப்பாகை, கால்சட்டைகள், முக்காடு (அல்லது தொப்பி), பச்சைச் சாயம் தோய்த்த ஆடை, அல்லது சிவப்புக் குங்குமச் சாயம் தோய்த்த ஆடை ஆகியவற்றை (இஹ்ராம் கட்டியவர்) அணியக் கூடாது. பாதணிகள் கிடைக்கவில்லையானால் (கணுக்கால்வரை) உயரமான காலுறைகளை அவர் அணிந்து கொள்ளலாம். (ஆனால்) கணுக்காலுக்குக் கீழே உயரம் குறையும் வரை அவ்விரண்டையும் வெட்டிவிடட்டும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

உளூச் செய்வது

ஒருவர் பள்ளிவாசலில் எழுந்து நின்று நபி(ஸல்) அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! நாங்கள் எங்கிருந்து இஹ்ராம் கட்டவேண்டும் எனக் கட்டளையிடுகிறீர்கள்?' என்று கேட்டபோது 'மதீனா வாசிகள் 'துல்ஹுலைஃபா' என்ற இடத்திலிருந்தும், ஷாம் வாசிகள் 'ஜுஹ்ஃபா' என்ற இடத்திலிருந்தும் நஜ்த் வாசிகள் 'கர்ன்' என்ற இடத்திலிருந்தும் இஹ்ராம் கட்ட வேண்டும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என அப்துல்லா இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
"யமன்' வாசிகள் 'யலம்லம்' என்ற இடத்திலிருந்து இஹ்ராம் கட்ட வேண்டும் என்றும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என சிலர் கருதிக் கொண்டிருக்கிறார்கள். அல்லாஹ்வின் தூதரிடமிருந்து இந்த வார்த்தை வந்ததாக எனக்குத் தெரியவில்லை" என்றும் இப்னு உமர்(ரலி) கூறினார்.



உளூச் செய்வது

'மதி (அதிக உணர்ச்சியினால் ஏற்படும் கசிவு) வெளியாகும் ஆடவனாக நான் இருந்தேன். (இது பற்றி அறிய) மிக்தாத்(ரலி) அவர்களை நபி(ஸல்) அவர்களிடம் கேட்குமாறு ஏவினேன். அவர் அது பற்றி அவர்களிடம் வினவினார். 'அதற்காக உளூச் செய்வதுதான் கடமை. (குளிக்க வேண்டிய கட்டாயமில்லை)' என்று நபி(ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்" என அலீ(ரலி) அறிவித்தார்.



;;