உளூச் செய்வது

'உபைது இப்னு ஜுரைஜ் என்பவர் அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்களிடம், 'அப்துர்ரஹ்மானின் தந்தையே! உங்கள் தோழர்களில் எவரும் செய்யாத நான்கு விஷயங்களை நீங்கள் செய்வதை காண்கிறேன்' என்றார். 'இப்னு ஜுரைஜே! அவை யாவை?' என இப்னு உமர்(ரலி) கேட்டதற்கு, '(தவாஃபின்போது) கஅபதுல்லாஹ்வின் நான்கு மூலைகளில் யமன் தேசத்தை நோக்கியுள்ள (ஹஜருல் அஸ்வத், ருக்னுல் யமானி ஆகிய) இரண்டு மூலைகளைத் தவிர மற்ற மூலைகளை நீங்கள் தொடுவதில்லை என்பதை பார்த்தேன். முடியில்லாத தோல் செருப்பை நீங்கள் அணிவதைப் பார்க்கிறேன். நீங்கள் ஆடையில் மஞ்சள் நிறத்தால் சாயம் பூசுவதைப் பார்க்கிறேன். மேலும் நீங்கள் மக்காவில் இருந்தபோது (துல்ஹஜ் மாத) பிறையைக் கண்டதுமே மக்கள் இஹ்ராம் அணிந்த நிலையில் நீங்கள் (துல்ஹஜ் மாதம்) எட்டாவது நாள்தான் இஹ்ராம் அணிந்ததைப் பார்த்தேன்' என்று இப்னு ஜுரைஜ் கூறியதற்கு, 'கஅபதுல்லாஹ்வின் மூலைகளைப் பொருத்த வரை நபி(ஸல்) அவர்கள் யமன் நாட்டை நோக்கியுள்ள இரண்டு மூலைகளைத் தவிர எதையும் தொட நான் காணவில்லை. முடியில்லாத செருப்பைப் பொருத்த வரையில் நபி(ஸல்) அணிந்து முடியில்லாத செருப்பை அணிந்து உளூச் செய்வதை பார்த்தேன். எனவே அதை அணிவதை நான் பிரியப்படுகிறேன். மஞ்சள் நிறத்தைப் பொருத்த வரை நபி(ஸல்) அவர்கள் ஆடையில் மஞ்சள் சாயம் பூசுவதை பார்த்தேன். எனவே அதைக் கொண்டு சாயம் பூசுவதை விரும்புகிறேன். இஹ்ராம் அணிவதைப் பொருத்தவரை நபி(ஸல்) அவர்கள் தங்கள் வாகனம் அவர்களை ஏற்றிக் கொண்டு (எட்டாம் நாள்) புறப்படும் வரை அவர்கள் இஹ்ராம் அணிவதை நான் பார்த்ததில்லை' என்று அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) கூறினார்" என ஸயீத் அல் மக்புரி அறிவித்தார்.