உளூச் செய்வது

நபி(ஸல்) அவர்கள் குறட்டை விடும் அளவுக்கு உறங்கிய பின்பு (எழுந்து) தொழுதனர். நான் என்னுடைய சிறிய தாயார் மைமூனா(ரலி) அவர்களின் வீட்டில் ஓரிரவு தங்கியிருந்தேன். நபி(ஸல்) அவர்கள் அந்த இரவின் ஆரம்பத்திலேயே எழுந்தார்கள். (பின்னர் தூங்கினார்கள்) இரவின் சிறு பகுதி ஆனதும் மீண்டும் எழுந்து, தொங்க விடப்பட்டிருந்த ஒரு பழைய தோல் துருத்தியிலிருந்து, (தண்ணீர் எடுத்து) சுருக்கமாக உளூச் செய்தார்கள்; பிறகு தொழுவதற்கு நின்றார்கள். நானும் அவர்கள் உளூச் செய்தது போன்று சுருக்கமாக உளூச் செய்துவிட்டு, நபி(ஸல்) அவர்களின் அருகே வந்து அவர்களின் இடப்பக்கத்தில் நின்றேன். உடனே நபி(ஸல்) அவர்கள் என்னைத் திருப்பி அவர்களின் வலப்பக்கமாக நிற்கச் செய்தார்கள். பின்னர்அவர்கள் அல்லாஹ் நாடிய அளவு தொழுதுவிட்டுப் பின்னர் மீண்டும் ஒருக்களித்துப் படுத்து குறட்டைவிட்டு உறங்கினார்கள். பின்னர் கூட்டுத் தொழுகைக்காக அவர்களை அழைத்தார். உடனே எழுந்து அவருடன் (ஸுப்ஹு) தொழுகைக்குச் சென்று மக்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். ஆனால் அவர்கள் (திரும்ப) உளூச் செய்யவில்லை" என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
இந்த ஹதீஸை அறிவிப்பவர்களில் ஒருவரான அம்ர் என்பவர் 'சுருக்கமாக உளூச் செய்தார்கள்' என்பதோடு 'குறைவாக' என்ற வார்த்தையையும் சேர்த்துக் கூறினார். அம்ர் என்பவரிடம் 'சிலர் இறைத்தூதரின் கண்கள்தாம் உறங்கும், அவர்களின் உள்ளம் உறங்காது என்று கூறுகிறார்களே! (அது உண்மையா?)' என நாங்கள் கேட்டதற்கு, 'நபிமார்களின் கனவு இறைவனிடமிருந்து வரும் செய்தி (யான வஹீ)க்கு சமமாகும்' என்று உபைது இப்னு உமைர் கூறத் தாம் கேட்டிருப்பதாகவும், அதற்குச் சான்றாக" உன்னை நான் அறுத்துப் பலியிடுவதாக என் உறக்கத்தில் கனவு கண்டேன்" (திருக்குர்ஆன் 37:102) என்ற இறை வசனத்தை அவர் ஓதிக் காட்டியதாகவும் சுஃப்யான் அவர்கள் கூறுகிறார்கள்.