தொழுகை

ஸஹ்ல் இப்னு ஸஅதிடம் '(நபி(ஸல்) அவர்களின் பிரசங்க) மேடை எதனால் செய்யப்பட்டது?' என்று (மக்கள்) கேட்டார்கள். அவர், '(இப்போது வாழும்) மனிதர்களில் இது பற்றி என்னை விட அதிகம் தெரிந்தவர்கள் எவருமில்லை. அது ஒரு வகைக் காட்டு மரத்தினால் செய்யப்பட்டது. இன்னாருடைய அடிமையான இன்னார்தாம் அதை நபி(ஸல்) அவர்களுக்குச் செய்து கொடுத்தார். அது செய்யப்பட்டு அதற்குரிய இடத்தில் வைக்கப்பட்டதும் அதன் மீது நபி(ஸல்) அவர்கள் நின்று கிப்லாவை முன்னோக்கி(த் தொழுகைக்குத்) தக்பீர் கூறினார்கள். அவர்களுக்குப் பின்னால் மக்களெல்லாம் நின்று தொழுதார்கள். நபி(ஸல்) அவர்கள் ஓதிவிட்டு ருகூவு செய்தார்கள். மக்கள் அவர்களுக்குப் பின்னால் ருகூவு செய்தார்கள். பின்னர் நபி(ஸல்) அவர்கள் தலையை உயர்த்திப் பின்னால் வந்து தரையில் ஸுஜுது செய்தார்கள். பின்னர் மிம்பரின் மீது ஏறி நின்றார்கள். பின்னர் ருகூவு செய்தார்கள். தலையை உயர்த்திப் பின்னால் வந்து தரையில் ஸஜ்தாச் செய்தார்கள். இதுதான் அந்த மேடையின் நிலையாகும் என்றார்" என அபூ ஹாஸிம் அறிவித்தார்.
அஹ்மத் இப்னு ஹன்பல் இந்த ஹதீஸைப் பற்றிக் கூறியபோது, 'மக்கள் நிற்கும் இடத்தை விட உயரமான இடத்தில் நபி(ஸல்) அவர்கள் நின்றார்கள் என்றே இந்த ஹதீஸின் மூலம் அறிகிறேன். எனவே ஜமாஅத்தாகத் தொழும்போது இமாம் உயரமான இடத்திலும் மக்கள் தாழ்ந்த இடத்திலும் நின்ற தொழுவது தவறில்லை என்பதைத்தான் இந்த ஹதீஸின் மூலம் அறியமுடிகிறது' என்று என்னிடம் கூறினார்" என .அலி இப்னு அப்தில்லாஹ் கூறினார்.
"இதைப்பற்றி சுஃப்யான் இப்னு உயைனா அவர்களிடம் அதிகமான கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. அவற்றை அவரிடமிருந்து நீங்கள் செவியுறவில்லையா?' என்று அலி இப்னு அப்தில்லாஹ், அஹ்மது இப்னு ஹன்பலிடம் கேட்டதற்கு அவர் 'இல்லை' என்று பதிலளித்தார்.


தொழுகை

தோலினால் செய்யப்பட்ட சிவப்பு நிற மேலங்கியை நபி(ஸல்) அவர்கள் அணிந்திருக்கப் பார்த்தேன். மேலும் நபி(ஸல்) அவர்கள் உளூச் செய்த தண்ணீரை பிலால்(ரலி) எடுத்துச் செல்வதையும் அந்தத் தண்ணீரை எடுப்பதில் மனிதர்கள் போட்டி போட்டுக் கொள்வதையும் கண்டேன். அந்தத் தண்ணீரைப் பெற்றவர் அதைத் தங்களின் உடம்பில் தடவினார். அந்தத் தண்ணீர் பெறாதவர் தண்ணீரைப் பெற்ற தம் நண்பரின் கையில் உள்ள ஈரத்தைத் தொட்டு(த் தடவி)க் கொண்டார்.
பிலால்(ரலி) ஒரு கைத்தடியை எடுத்து நாட்டினார். நபி(ஸல்) அவர்கள் ஒரு சிவப்பு நிற மேல் அங்கியை அணிந்து ஆயத்தமாம் அந்தத் தடியை(த் தடுப்பாக) வைத்து இரண்டு ரக்அத் ஜமாஅத்தாகத் தொழுதார்கள். அந்தக் கம்பிற்கு அப்பால் மனிதர்களும் ஆடு மாடுகளும் குறுக்கே செல்வதைப் பார்த்தேன்" என அபூ ஜுஹைஃபா(ரலி) அறிவித்தார்.


தொழுகை

'நபி(ஸல்) அவர்களுக்குப் பட்டினாலான மேல் அங்கி ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அதை அவர்கள் அணிந்து தொழுதார்கள். தொழுகையை முடித்த பின்னர் அந்த அங்கியில் வெறுப்புற்றவர்களைப் போன்று வேகமாக அதைக் கழற்றி எறிந்துவிட்டுப் 'பயபக்தியுடையவர்களுக்கு இந்த ஆடை உகந்ததன்று' என்று கூறினார்கள்" என உக்பா இப்னு ஆமிர்(ரலி) கூறினார்.


தொழுகை

'ஆயிஷா(ரலி) அவர்களிடம் (உருவப் படங்கள் நிறைந்த) ஒரு திரை இருந்தது. அதனால் தங்களின் வீட்டின் ஓர் ஓரத்தை மறைத்திருந்தார்கள். இதைக் கண்ட நபி(ஸல்) ஆயிஷா(ரலி) அவர்களிடம் 'உன்னுடைய இந்தத் திரையை நம்மைவிட்டும் அகற்றி விடு. அதிலுள்ள படங்கள் நான் தொழுது கொண்டிருக்கும்போது (என் எண்ணத்தில்) குறுக்கிடுகின்றன' என்று கூறினார்கள்" என அனஸ்(ரலி) அறிவித்தார்.


தொழுகை

நபி(ஸல்) அவர்கள் பல வண்ணங்கள் உள்ள ஓர் ஆடையை அணிந்து தொழுதபோது அந்த வண்ணங்களின் பக்கம் பார்வையைச் செலுத்தினார்கள். அவர்கள் தொழுகையை முடித்ததும், 'என்னுடைய இந்த ஆடையை எடுத்துச் சென்று அபூ ஜஹ்மிடம் கொடுத்துவிட்டு, அவரின் (வண்ணங்கள் இல்லாத) ஆடையைக் கொண்டு வாருங்கள். இந்த ஆடை சிறிது நேரத்திற்கு முன்னர் என்னுடைய தொழுகையைவிட்டு என் கவனத்தைத் திருப்பிவிட்டது' என்று கூறினார்கள்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
மற்றோர் அறிவிப்பின்படி, 'நான் தொழுகையில் நிற்கும்போது அந்த ஆடையின் வண்ணங்களைப் பார்ப்பதால் அது என்னைக் குழப்பி விடுமோ என அஞ்சினேன்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று உள்ளது.


தொழுகை

'நபி(ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுகையைத் தொழுவார்கள். இறைநம்பிக்கையுள்ள பெண்கள் ஆடைகளால் தங்களின் உடல் முழுவதையும் சுற்றி மறைத்தவர்களாக அவர்களுடன் தொழுவார்கள். பின்னர் தங்களின் வீடுகளுக்குச் செல்வார்கள். அவர்கள் யார் யார் என்பதை (வெளிச்சமின்மையால்) யாரும் அறியமாட்டார்கள்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.


தொழுகை

நபி(ஸல்) அவர்கள் கைபர் போருக்கு ஆயத்தமானார்கள். அங்கே நாங்கள் அதிகாலைத் தொழுகையை அதிகாலையின் வெண்மை தெரியும் முன்னர் தொழுதோம். பின்னர் நபி(ஸல்) அவர்கள் தங்களின் வாகனத்தில் ஏறினார்கள். அபூ தல்ஹா(ரலி) அவர்களும் ஏறினார். அவர்களுக்குப் பின்னால் நான் ஏறி அமர்ந்தேன். நபி(ஸல்) அவர்கள் கைபர் கணவாயினுள் சென்றார்கள். என்னுடைய மூட்டு நபி(ஸல்) அவர்களின் தொடையைத் தொட்டது. பின்னர் நபி(ஸல்) அவர்கள் தங்களின் தொடையிலிருந்த வேஷ்டியை நீக்கினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களின் தொடையின் வெண்மையை பார்த்தேன். நபி(ஸல்) அவர்கள் ஊருக்குள்ளே நுழைந்தபோது 'அல்லாஹ் பெரியவன்! கைபர் வீழ்ந்துவிட்டது! நிச்சயமாக நாம் ஒரு (எதிரிக்) கூட்டத்திடம் பகைமையுடன் இறங்கினால் எச்சரிக்கப்பட்ட அம்மக்களின் காலை நேரம் மோசமானதாம்விடும்' என்று மும்முறை கூறினார்கள். அவ்வூர் மக்கள் தங்களின் வேலைகளுக்காக வெளியே வந்தபோது நபி(ஸல்) அவர்களைப் பார்த்ததும், 'முஹம்மதும் அவரின் பட்டாளமும் வந்துள்ளார்கள்' என்று (பதட்டமாகக்) கூறினார்கள்.
நாங்கள் கைபரைப் பலவந்தமாகக் கைப்பற்றினோம். போர்க் கைதிகளெல்லாம் ஒன்று சேர்க்கப்பட்டபோது 'திஹ்யா' என்ற நபித்தோழர் வந்து 'இறைத்தூதா அவர்களே! கைதிகளிலுள்ள ஒரு பெண்ணை எனக்குக் கொடுங்கள்' என்று கேட்டார். 'நீர் போய் ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்துக் கொள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அவர் சென்று ஸஃபிய்யா பின்த் ஹுயய் என்ற பெண்ணைத் தேர்ந்தெடுத்தார். அப்போது ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! 'குறைளா' மற்றும் 'நளீர்' என்ற குலத்தின் தலைவி ஸஃபிய்யா பின்த் ஹுயய் என்ற பெண்ணையா திஹ்யாவிற்குக் கொடுத்துள்ளீர்கள். அந்தப் பெண் தங்களுக்கே தகுதியானவள்' என்றார். அப்போது 'அப்பெண்ணையும் திஹ்யாவையும் அழைத்து வாரும்' என்று நபி(ஸல்) அவர்கள் அவரிடம் கூறினார்கள். அப்பெண் அழைத்து வரப்பட்டார். அப்பெண் வந்ததும் 'நீ கைதிகளிலிருந்து வேறொரு பெண்ணைத் தேர்ந்தெடுத்துக் கொள்' என்ற திஹ்யாவிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நபி(ஸல்) அப்பெண்ணை விடுதலை செய்து பின்னர் அவரைத் திருமணம் செய்தார்கள்.
இந்த ஹதீஸை அறிவிக்கிற அனஸ்(ரலி) அவர்களிடம் ஸாபித் என்ற தோழர், 'அபூ ஹம்சாவே நபி(ஸல்) அப்பெண்ணுக்கு எவ்வளவு மஹர் கொடுத்தார்கள்?' என்று கேட்டதற்கு 'அவரையே மஹராகக் கொடுத்தார்கள்; அதாவது அவரை விடுதலை செய்து பின்னர் மணந்தார்கள்' எனக் கூறினார்.
நாங்கள் (கைபரிலிருந்து) திரும்பி வரும் வழியில் 'ஸஃபிய்யா' அவர்களை உம்மு ஸுலைம்(ரலி) மணப்பெண்ணாக ஆயத்தப்படுத்தி நபி(ஸல்) அவர்களிடம் இரவில் ஒப்படைத்தார். மறுநாள் காலை நபி(ஸல்) அவர்கள் புது மாப்பிள்ளையாகத் தோன்றினார்கள். அப்போது நபி(ஸல்) ஒரு விரிப்பை விரித்து 'உங்களில் யாரிடமாவது ஏதாவது (சாப்பிடுகிற) பொருள்கள் இருந்தால் கொண்டு வந்து இதில் போடுங்கள்' என்று கூறினார்கள். உடனே ஒருவர் பேரீச்சம் பழத்தைக் கொண்டு வந்தார். வேறு ஒருவர் நெய்யைக் கொண்டு வந்தார். ஒருவர் மாவைக் கொண்டு வந்தார். (இப்படி எல்லோரும் கொண்டுவந்த) அவற்றையெல்லாம் சேர்த்து ஒன்றாகக் கலந்தார்கள். அது நபி(ஸல்) அவர்களின் 'வலீமா' எனும் மணவிருந்தாக அமைந்தது" என அனஸ்(ரலி) அறிவித்தார்.
"அவளுடைய உடல் முழுவதையும் மறைக்கும் விதத்தில் ஒரே ஆடையை அணிந்தாலும் அது அவளுக்குப் போதுமானதாகும்" என இக்ரிமா கூறினார்.


தொழுகை

'ஜாபிர்(ரலி) ஒரே வேஷ்டியை சுற்றிக் கொண்டு தொழுதார். அவரின் மேலாடை தனியாக வைக்கப்பட்டிருந்தது. தொழுது முடித்ததும் 'அப்துல்லாஹ்வின் தந்தையே! உங்களுடைய மேலாடையைத் தனியே வைத்துவிட்டுத் தொழுகிறீர்களா?' என்று நாங்கள் கேட்டதற்கு, 'ஆம்! உங்களைப் போன்ற மடையர்கள் என்னைப் பார்க்க வேண்டுமென்பதை விரும்பினேன். நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு தொழுததை நான் பார்த்திருக்கிறேன் என்றார்கள்" என முஹம்மத் இப்னு அல் முன்கதிர் அறிவித்தார்.


தொழுகை

ஹஜ்ஜத்துல்வதா'விற்கு முந்திய ஆண்டு அபூ பக்ர்(ரலி) (அவர்களின் தலைமையில் நான் ஹஜ்ஜுக்குச் சென்றபோது) என்னை அறிவிப்புச் செய்பவர்களுடன் துல்ஹஜ் மாதம் பத்தாம் நாள் அனுப்பி வைத்தார்கள். நாங்கள் மினாவில் நின்று, 'அறிந்து கொள்ளுங்கள்! இந்த ஆண்டிற்குப் பிறகு எந்த முஷ்ரிக்கும் ஹஜ் செய்யக் கூடாது. நிர்வாணமாக யாரும் கஅபாவை வலம் வரக்கூடாது' என்று அறிவித்தோம்.
பின்னர் நபி(ஸல்) அவர்கள் அலீ(ரலி) அவர்களை அனுப்பி, திருக்குர்ஆனின் 9-வது அத்தியாயத்தில் ஒப்பந்த முறிவு பற்றிக் கூறப்படும் (முதல் இருபது வசனங்கள்) விஷயத்தை அறிவிக்குமாறு கட்டளையிட்டார்கள்.
எங்களுடன் அலீ(ரலி) அவர்களும் துல்ஹஜ் மாதம் பத்தாவது நாள் மினாவில் நின்று 'இந்த ஆண்டிற்குப் பிறகு இணைவைப்பாளர் எவரும் ஹஜ் செய்யக்கூடாது; கஅபாவை எவரும் நிர்வாணமாக வலம் வரக் கூடாது' என்று அறிவித்தார்கள்" அபூ ஹுரைரா(ரலி) கூறினார்.


தொழுகை

முனாபதா' 'முலாமஸா' எனும் இருவகை வியாபாரங்களையும், கையை வெளியே எடுக்க இயலாத அளவுக்கு இறுக்கமாக ஆடையைச் சுற்றிக் கொள்வதையும், ஒரே ஆடையை அணிந்திருக்கும்போது, இரண்டு முட்டுக் கால்களையும் நாட்டி வைத்து உட்காருவதையும் நபி(ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்" என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
(குறிப்பு: 'முனாபதா' குறிப்பிட்ட ஒரு பொருளை எடுத்து எறியும்போது அது எந்தப் பொருளின் மீது படுகிறதோ அந்தப் பொருளை இவ்வளவு விலைக்குத் தருகிறேன் என்று கூறி விற்பதைக் குறிக்கும்.
'முலாமஸா' குவிக்கப்பட்ட பொருட்களைப் பிரித்துப் பார்க்கவிடாமல் அதைத் தொட்டுப் பார்க்க மட்டுமே அனுமதித்து விற்பதைக் குறிக்கும்.)


தொழுகை

'கையை வெளியே எடுக்க இயலாத அளவுக்கு இறுககமாக ஆடையைச் சுற்றிக் கொள்வதையும் ஒரே ஆடையை அணிந்திருக்கும்போது, மர்மஸ்தானம் தெரியும் படியாக இரண்டு முழங்கால்களையும் நாட்டி வைத்து உட்காருவதையும் நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்" என அபூ ஸயீத் அல் குத்ரி(ரலி) அறிவித்தார்.


தொழுகை

'ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிய விரும்புகிறவர் எந்த ஆடையை அணிய வேண்டும் என்று ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டதற்கு 'சட்டை, முழுக்கால் சட்டை, தொப்பி, குங்குமச் சாயம் பட்ட ஆடை, சிவப்புச் சாயமிடப்பட்ட ஆடை ஆகியவற்றை அணியக் கூடாது. யாருக்காவது செருப்பு கிடைக்காமலிருந்தால் தோலினாலான காலுறை அணிந்து கொள்ளலாம். அந்தத் தோலுறையில் கரண்டைக்குக் கீழே இருக்கும் வகையில் மேல் பாகத்தை வெட்டி விட வேண்டும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.


தொழுகை

நபி(ஸல்) அவர்களிடம் ஓர் ஆடையை மட்டும் அணிந்து தொழுவது பற்றிக் கேட்டதற்கு 'உங்களில் எல்லோரும் இரண்டு ஆடைகளை வைத்திரக்கிறார்களா?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள்.
(உமர்(ரலி) அவர்களின் ஆட்சி காலத்தில்) பின்னர் ஒருவர் உமர்(ரலி) அவர்களிடம் இது விஷயமாக கேட்டதற்கு 'அல்லாஹ் உங்களுக்கு விசாலமாக்கியிருந்தால் நீங்களும் விசாலமாக்கிக் கொள்ளுங்கள்' என்று கூறினார். சிலர் எல்லா ஆடைகளையும் அணிந்து தொழுதார்கள். வேறு சிலர் ஒரு வேஷ்டியும் ஒரு மேலாடையும் அணிந்து தொழுதார்கள். இன்னும் சிலர் ஒரு வேஷ்டியும் ஒரு மேலங்கியும் அணிந்து தொழுதார்கள். வேறு சிலர் முழுக்கால் சட்டை, மேல் போர்வையும் அணிந்து தொழுதார்கள். வேறு சிலர் முழுக்கால் சட்டையும் மேல் அங்கியும் அணிந்து சிலர் தொழுதார்கள். அரைக்கால் சட்டையும் மேல் அங்கியும் அணிந்து சிலர் தொழுதார்கள். அரைக்கால் சட்டையும் சட்டையும் அணிந்தவராகச் சிலர் தொழுதார்கள். இவ்வாறு பல விதமாகத் தொழலானார்கள். வேஷ்டியும் சட்டையும் என்பதற்குப் பதிலாக வேஷ்டியும் மேல் போர்வையும்' என்று உமர்(ரலி) கூறியதாக நான் நினைக்கிறேன்" என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.


தொழுகை

'நபி(ஸல்) அவர்கள், (சிறு வயதில்) கஅபதுல்லாஹ்வின் கட்டுமானப் பணி நடந்தபோது அதைக் கட்டுபவர்களோடு கற்களை எடுத்துச் சென்றார்கள். அப்போது அவர்கள் ஒரு வேஷ்டி அணிந்திருந்தார்கள். நபி(ஸல்) அவர்களின் பெரிய தந்தை அப்பாஸ் 'என் சகோதரனின் மகனே! உன் வேஷ்டியை அவிழ்த்து அதை உன் தோளின் மீது வைத்து அதன் மேல் கல்லை எடுத்துச் சுமந்து வரலாமே' என்று நபி(ஸல்) அவர்களிடம் கூறினார்கள். அவ்வாறே நபி(ஸல்) வேஷ்டியை அவிழ்த்து அதைத் தங்களுடைய தோளின் மீது வைத்தார்கள். வைத்ததும் அவர்கள் மயக்கமுற்றுக் கீழே விழுந்தார்கள். அதற்கு பின்னர் நபி(ஸல்) அவர்கள் நிர்வாணமாக ஒருபோதும் காட்சியளிக்கவில்லை" என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.


தொழுகை

'நான் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் சென்றபோது, 'முகீராவே! தண்ணீர்ப் பாத்திரத்தை எடும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நான் அதை எடுத்துக் கொண்டேன். நபி(ஸல்) அவர்கள் நடந்து சென்று என் கண்ணுக்குத் தெரியாத மறைவான இடத்திற்குச் சென்று அவர்களின் இயற்கைத் தேவையை நிறைவேற்றினார்கள். அப்போது அவர்கள் ஷாம் (சிரியா) நாட்டுக் குளிர் ஆடையை அணிந்திருந்தார்கள். உளூச் செய்வதற்காக அதிலிருந்து தங்களின் கையை வெளியே எடுக்க முயன்றார்கள். அதன் கை இறுக்கமாக இருந்ததால் தங்களின் கையை அந்த ஆடையின் கீழ்ப்புறமாக வெளியே எடுத்தார்கள். நான் அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றினேன். அவர்கள் தொழுகைக்குரிய உளூவைச் செய்தார்கள். தங்களின் இரண்டு காலுறைகளின் மீதும் (அவற்றைக் கழுவாமல்) ஈரக்கையால் மஸஹ் செய்து (தடவி) தொழுதார்கள்" என முகீரா இப்னு ஷுஅபா(ரலி) அறிவித்தார்.


தொழுகை

'சில ஆண்கள் நபி(ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருந்தார்கள். அவர்கள் சிறுவர்களைப் போன்று தங்களின் (சிறிய) வேஷ்டியை தங்களின் கழுத்திலிருந்தே கட்டியிருந்தனர். (இதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் ஆண்களின் பின்னால் தொழுது கொண்டிருந்த) பெண்களிடம், 'ஆண்கள் ஸுஜுதிலிருந்து எழுந்து அமரும் வரை நீங்கள் உங்களுடைய தலைகளை ஸுஜுதிலிருந்து உயர்த்த வேண்டாம்' என்று கூறினார்கள்" என ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்.


தொழுகை

'நாங்கள் ஓர் ஆடை மட்டும் அணிந்து தொழுவது பற்றி ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அவர்களிடம் கேட்டதற்கு, 'நபி(ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் சென்றிருந்தேன். ஒரு நாள் இரவு என்னுடைய ஒரு வேலைக்காக நபி(ஸல்) அவர்களை நான் சந்தித்தபோது அவர்கள் தொழுது கொண்டிருந்தார்கள். என் மீது ஒரே ஓர் ஆடை மட்டுமே இருந்தது. அதை நான் சேர்த்து நெருக்கமாகச் சுற்றிக் கொண்டு நபி(ஸல்) அவர்களின் அருகில் நின்று தொழுதேன். அவர்கள் தொழுகையை முடித்ததும், 'ஜாபிரே! என்ன இரவு நேரத்தில் வந்திருக்கிறிர்?' என்று கேட்டார்கள். நான் வந்த நோக்கத்தை அவர்களிடம் சொன்னேன். சொல்லி முடித்ததும் 'இது என்ன? கை கால்கள் வெளியே தெரியாமல் (துணியால்) நெருக்கமாகச் சுற்றியிருப்பதைப் பார்க்கிறேன்' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். நான் இது இறுக்கமான ஆடை என்று நான் கூறியதும் நபி(ஸல்) அவர்கள், 'ஆடை விசாலமானதாக இருந்தால் அதன் ஓர் ஓரத்தை வலது தோளிலும் மற்றொரு ஒரத்தை இடது தோளிலுமாக அணிந்து கொள்ளுங்கள். ஆடை சிறிதாக இருந்தால் அதை இடுப்பில் அணிந்து கொள்ளுங்கள்' என்றார்கள்' என்று ஜாபிர்(ரலி) விடையளித்தார்கள்" என ஸயீத் இப்னு அல்ஹாரிஸ் அறிவித்தார்.

தொழுகை

'ஓர் ஆடையை மட்டும் அணிந்து தொழுபவர் அந்த ஆடையின் இரண்டு ஓரத்தையும் மாற்றி அணியட்டும்' (அதாவது வலப்புற ஓரத்தை இடது தோளிலும் அணியட்டும்)' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.


தொழுகை

'உங்களில் ஒருவர் தன்னுடைய தோளின் மீது எதுவும் இல்லாதிருக்க ஓர் ஆடையை மட்டும் அணிந்து தொழ வேண்டாம்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.


தொழுகை

'ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் ஒரே ஆடையை அணிந்து தொழுவதைப் பற்றிக் கேட்டதற்கு, 'உங்களில் ஒவ்வொருவருக்கும் இரண்டு ஆடைகள் இருக்கின்றனவா?' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கேட்டார்கள்" என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.


தொழுகை

'மக்கா வெற்றி கொள்ளப்பட்ட ஆண்டு, நான் நபி(ஸல்) அவர்களிடம் நான் சென்றிருந்தபோது அவர்கள் குளித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களின் மகள் ஃபாத்திமா(ரலி) நபி(ஸல்) அவர்களுக்குத் திரையிட்டார். நான் நபி(ஸல்) அவர்களுக்கு ஸலாம் சொன்னேன். அப்போது, 'யாரவர்?' எனக் கேட்டார்கள். 'நான் அபூ தாலிபின் மகள் உம்முஹானி' என்றேன். உடனே, 'உம்முஹானியே! வருக!' என்றார்கள். நபி(ஸல்) குளித்து முடித்த பின்னர் ஒரே ஆடையைச் சுற்றியவர்களாக எட்டு ரக்அத்துகள் தொழுதார்கள். அவர்கள் தங்கள் தொழுகையை முடித்ததும் 'இறைத்தூதர் அவர்களே! என்னுடைய சகோதரர் நான் அடைக்கலம் அளித்திருக்கும் ஹுபைராவின் மகனைக் கொலை செய்ய எண்ணியுள்ளார்' என்று நான் கூறியபோது 'உம்மு ஹானியே! நீ அடைக்கலம் அளித்திருப்பவருக்கு நாங்களும் அடைக்கலம் அளிக்கிறோம்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இச்சம்பவம் முற்பகலில் நடந்தது" என உம்மு ஹானி(ரலி) அறிவித்தார்.

தொழுகை

'உம்மு ஸலமா(ரலி) அவர்களின் வீட்டில் நபி(ஸல்) அவர்கள் ஒரே ஆடையை அணிந்து, அதன் இரண்டு ஓரத்தையும் இரண்டு தோள்களின் மீது மாற்றிப் போட்டு தொழுததை பார்த்திருக்கிறேன்" என உமர் இப்னு அபீ ஸலமா(ரலி) கூறினார்.


தொழுகை

'உம்மு ஸலமா(ரலி) அவர்களின் வீட்டில் நபி(ஸல்) அவர்கள் ஒரே ஆடையை அணிந்து, அதன் இரண்டு ஓரத்தையும் இரண்டு தோள்களின் மீது மாற்றிப் போட்டு தொழுதார்கள்" என உமர் இப்னு அபீ ஸலமா(ரலி) அறிவித்தார்.


தொழுகை

'நபி(ஸல்) அவர்கள் ஒரே ஆடையை அணிந்து, அதன் இரண்டு ஓரத்தையும் இரண்டு தோள்களின் மீது மாற்றிப் போட்டு தொழுதார்கள்" என உமர் இப்னு அபீ ஸலமா(ரலி) அறிவித்தார்.


தொழுகை.

'ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) ஒரே ஆடையை அணிந்தவர்களாகத் தொழுதுவிட்டு 'நபி(ஸல்) அவர்கள் ஒரே ஆடையை அணிந்து தொழுததைக் கண்டேன்' என்று கூறினார்கள்" என முஹம்மத் இப்னு அல் முன்கதிர் என்பவர் அறிவித்தார்.


தொழுகை

'ஜாபிர்(ரலி) ஒரே வேஷ்டியை அணிந்து கொண்டு அதைத் தங்களின் பிடரியில் முடிச்சுப் போட்டவர்களாகத் தொழுதார்கள். அவர்களின் இதர ஆடைகளோ துணி தொங்க விடப்படும் கம்பில் தொங்கிக் கொண்டிருந்தன. இவர்களிடம் ஒருவர், 'ஒரே வேஷ்டியிலா தொழுகிறீர்கள்?' என்று கேட்டதற்கு 'உன்னைப் போன்ற மடையவர்கள் என்னைப் பார்க்க வேண்டுமென்பதற்காகவே இவ்வாறு செய்தேன். நபி(ஸல்) அவர்களின் காலத்தில் எங்களில் யாருக்குத்தான் இரண்டு ஆடைகள் இருந்தன?' என்று ஜாபிர்(ரலி) கேட்டார்" என முஹம்மத் இப்னு அல் முன் கதிர் அறிவித்தார்.


தொழுகை

இரண்டு பெருநாள்களிலும் மாதவிடாய்ப் பெண்களையும் வீட்டில் இருக்கிற கன்னிப் பெண்களையும் வெளியேற்றி (தொழும் திடலுக்குப்) அழைத்துவருமாறும், அப்பெண்கள் வீட்டிலிருந்து வெளியாகி முஸ்லிம்கள் தொழுகிற இடத்திற்குச் சென்று அவர்களின் பிரச்சாரத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்றும், தொழும் இடத்தைவிட்டு மாதவிடாய்ப் பெண்கள் ஒதுங்கியிருக்க வேண்டும்' என்றும் கட்டளையிடப்பட்டோம்.
நபி(ஸல்) அவர்களின் இந்தக் கட்டளையைக் கேட்டுக் கொண்டிருந்த பெண்களில் ஒருவர் 'இறைத்தூதர் அவர்களே! எங்களில் எவருக்கேனும் அணிந்து கொள்வதற்கு மேலாடை இல்லையெனில் என்ன செய்வது?' எனக் கேட்டதற்கு, 'அவளுடைய தோழி தன்னுடைய (உபரியான) மேலாடையை இவளுக்கு அணியக் கொடுக்கட்டும்' என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்" என உம்மு அதிய்யா(ரலி) அறிவித்தார்.


தொழுகை

'அல்லாஹ் தொழுகையைக் கடமையாக்கியபோது ஊரிலிருந்தாலும் பயணத்திலிருந்தாலும் இரண்டிரண்டு ரக்அத்துகளாகக் கடமையாக்கினான், பயணத்தில் தொழுகை இரண்டு ரகஅத்தாகவே ஆக்கப்பட்டுப் பயணம் அல்லாத போதுள்ள தொழுகை அதிகரிக்கப்பட்டது" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.


தொழுகை

நான் மக்காவில் இருந்தபோது என்னுடைய வீட்டு முகடு திறக்கப்பட்டது. (அது வழியாக) ஜிப்ரீல் (அலை) இறங்கி என்னுடைய நெஞ்சைப் பிளந்தார்கள். அதை ஸம்ஸம் தண்ணீரால் கழுவினார்கள். பின்னர் ஈமான் எனும் இறைநம்பிக்கை மற்றும் ஞானத்தினால் நிரப்பப்பட்ட ஒரு தங்கத் தட்டைக் கொண்டு வந்து என்னுடைய நெஞ்சில் கொட்டிவிட்டு, அதை மூடி கையைப் பிடித்து முதல் வானத்திற்கு என்னை ஏற்றிச் சென்றார்கள். முதல் வானத்தை அடைந்ததும் அந்த வானத்தின் காவலரிடம் 'திற' என்றார்கள். அவ்வானவர், 'யார் அவர்?' என்று வினவியதற்கு 'நானே ஜிப்ரீல்' என்று பதில் கூறினார். அதற்கு அவ்வானவர், 'உம்முடன் எவரேனும் இருக்கிறார்களா?' எனக் கேட்டார். ஜிப்ரீல் ஆம்! என்னுடன் முஹம்மத் இருக்கிறார்கள்' என்று கூறினார்கள். அதற்கு வானவர் 'அவர் அழைக்கப்பட்டிருக்கிறாரா?' எனக் கேட்டார். ஜிப்ரீல் 'ஆம்' என்றார்கள்.
வானவர், முதல் வானத்தைத் திறந்ததும் நாங்கள் அவ்வானத்தில் ஏறினோம். அப்போது அங்கு ஒருவர் அமர்ந்திருந்தார். அவரின் வலப்பக்கம் சில மனிதர்களும் இடது மக்களும் சில மனிதர்களும் காணப்பட்டார்கள். அவர் தங்களின் வலப்பக்கமுள்ள மனிதர்களைப் பார்த்தால் சிரிக்கிறார். தங்களின் இடப்பக்கமுள்ளவர்களைப் பார்த்தால் அழுகிறார்.
இந்நிலையிலுள்ள அவர் 'நல்ல நபியே! வருக! நல்ல மகனே வருக!' என்றார். அப்போது ஜிப்ரீல்(அலை) அவர்களிடம் இவர் யார்? என கேட்டேன். 'இவர் தாம் ஆதம். அவரின் வலப்பக்கமும் இடப்பக்கமும் உள்ளவர்கள் அவரின் சந்ததிகளிலுள்ள மனிதர்கள். வலப்பக்கமுள்ளவர்கள் சுவர்க்கவாசிகள்; இடப்பக்கமுள்ளவர்கள் நரகவாசிகள். (எனவேதான்) அவர் தங்களின் வலப்பக்கம் பார்த்துச் சிரிக்கிறார்; தங்களின் இடப்பக்கம் பார்த்து அழுகிறார்' என்று கூறினார்கள்.
பின்னர், ஜிப்ரீல்(அலை) என்னை இரண்டாவது வானத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அந்த வானத்தில் காவலரிடம் 'திற' எனக் கூறினார். முதல் வானத்தின் காவலர் கேட்ட கேள்விகளைப் போன்றே இவரும் கேட்டுவிட்டுத் திறந்தார். இந்த ஹதீஸை அறிவிக்கும் அனஸ்(ரலி), 'வானங்களில் ஆதம், இத்ரீஸ், மூஸா, ஈஸா, இப்ராஹீம்(அலை) ஆகிய நபிமார்களைக் கண்டதாக நபி(ஸல்) குறிப்பிட்டார்கள். முதல் வானத்தில் ஆதம்(அலை) அவர்களையும் ஆறாவது வானத்தில் இப்ராஹீம்(அலை) அவர்களையும் கண்டதாகக் குறிப்பிட்டார்கள். மற்ற நபிமார்களைக் கண்ட இடத்தைக் கூறவில்லை' என்று கூறினார்.
'ஜிப்ரீல்(அலை) என்னை அழைத்துக்கொண்டு இத்ரீஸ்(அலை) பக்கமாகச் சென்றபோது 'நல்ல நபியே! வருக! நல்ல சகோதரரே வருக!' என இத்ரீஸ்(அலை) கூறியபோது இம்மனிதர் யார்? என நான் கேட்டதற்கு, 'இவர் இத்ரீஸ்(அலை)' என ஜிப்ரீல்(அலை) பதில் கூறினார்கள்.
பின்னர் மூஸா(அலை) பக்கமாக நான் சென்றபோது 'நல்ல நபியே வருக! நல்ல சகோதரரே வருக!' எனக் கூறினார்கள். இவர் யார்? என நான் கேட்டதற்கு, 'இவர்தான் மூஸா(அலை)' என ஜிப்ரீல் கூறினார்கள்.
பின்னர் ஈஸா(அலை) பக்கமாகச் சென்றபோது 'நல்ல நபியே! வருக! நல்ல சகோதரரே வருக!' எனக் கூறினார்கள். இவர் யார்? என நான் கேட்டதற்கு, 'இவர் ஈஸா(அலை)' என ஜிப்ரீல்(அலை) கூறினார்கள்.
பின் இப்ராஹீம்(அலை) பக்கமாக நான் சென்றபோது 'நல்ல நபியே வருக! நல்ல மகனே வருக!" என்றார்கள். இவர் யார்? என ஜிப்ரீல்(அலை) அவர்களிடம் நான் கேட்டதற்கு, 'இவர் இப்ராஹீம்(அலை)' என்று கூறினார்கள்.
இப்னு அப்பாஸ்(ரலி) அபூ ஹப்பா அல் அன்ஸாரி(ரலி) ஆகியோர் அறிவிக்கும் மற்றோர் அறிவிப்பில், 'பின்னர் நான் மேலே கொண்டு செல்லப்பட்டேன். நான் ஏணியில் ஏறிச் சென்றபோது எழுது கோல்களால் எழுதும் சப்தத்தை செவியுற்றேன்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.த (தொடர்ந்து)
"அல்லாஹ் என்னுடைய உம்மத்தின் மீது ஐம்பது நேரத் தொழுகையைக் கடமையாக்கினான். (அதை ஏற்று) திரும்பி வந்து கொண்டிருந்தபோது, மூஸா(அலை) அவர்களின் பக்கமாகச் நான் சென்றபோது 'உங்கள் சமுதாயத்திற்கு அல்லாஹ் எதைக் கடமையாக்கினான்?' என அவர்கள் கேட்டார்கள். ஐம்பது நேரத் தொழுகையைக் கடமையாக்கினான் என்றேன். 'நீங்கள் உங்களுடைய இறைவனிடம் திரும்பச் செல்லுங்கள். உங்கள் சமூகம் அதற்கு சக்தி பெறாது' என மூஸா(அலை) கூறினார்கள். நான் திரும்பச் சென்றபோது அதில் கொஞ்சத்தை அல்லாஹ் குறைத்தான். (அதை ஏற்றுக் கொண்டு) நான் மூஸா(அலை) அவர்களிடம் வந்து கொஞ்சம் குறைத்துள்ளான் என்றேன். 'நீங்கள் உங்களுடைய இறைவனிடம் திரும்பச் செல்லுங்கள். உங்கள் சமூகம் அதற்கு(ம்) சக்தி பெறாது' என்றார்கள். நான் திரும்பிச் சென்றேன். அதில் (இன்னும்) கொஞ்சம் குறைத்தான். நான் மூஸா(அலை) அவர்களிடம் வந்தேன். (இன்னும் கொஞ்சம் குறைத்தான் என்றேன்). 'நீங்கள் உங்களுடைய இறைவனிடம் திரும்பச் செல்லுங்கள். உங்களின் சமூகம் அதற்கு சக்தி பெறாது' என்றார்கள். நாம் திரும்பச் சென்றபோது 'ஐந்து நேரத் தொழுகையைக் கடமையாக்குகிறேன். அது ஐம்பதிற்கு சமம்; என்னுடைய சொல்லில் எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை' என்று அல்லாஹ் கூறினான். நான் மூஸா(அலை) அவர்களிடம் வந்தபோது 'உங்களுடைய இறைவனிடம் சென்று இதையும் குறைக்குமாறு கூறுங்கள்' என்றார்கள். இனிமேல் என்னுடைய இறைவனிடம் (குறைத்துக் கேட்பதற்கு) வெட்கப்படுகிறேன் என்று கூறினேன். பின்னர் ஜிப்ரீல்(அலை) என்னை 'ஸித்ரதுல் முன்தஹா' என்னும் இடத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அதைப் பல வண்ணங்கள் சூழந்திருந்தன. அது என்ன என்பது எனக்குப் புலப்படவில்லை. பின்னர் சுவர்க்கத்தில் புகுத்தப்பட்டேன். அதில் முத்துக்களால் உள்ள கயிறுகளைப் பார்த்தேன். சுவர்க்கத்தின் மண் கஸ்தூரியாக இருந்தது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என அபூ தர்(ரலி) அறிவித்தார்.


தயம்மும்

'ஒருவர் ஜமாஅத்துடன் தொழாமல் தனியாக இருப்பத்தைக் கண்ட நபி(ஸல்) அவர்கள், 'நீர் ஏன் ஜமாஅத்துடன் தொழவில்லை?' என்று கேட்டார்கள். அதற்கு அவர், 'இறைத்தூதர் அவர்களே! எனக்குக் குளிப்புக் கடமையாகிவிட்டது. தண்ணீர் கிடைக்கவில்லை' என்று கூறியபோது 'மண்ணில் தயம்மும் செய்யும்! அது உமக்குப் போதுமானது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என இம்ரான் இப்னு ஹுஸைன் அல் குஸாயீ(ரலி) அறிவித்தார்.


தயம்மும்

நான் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) மற்றும் அபூ மூஸல் அஷ்அரி(ரலி) ஆகிய இருவருடன் அமர்ந்திருந்தேன். அபூ மூஸா(ரலி) அப்துல்லாஹ் இப்னுமஸ்வூத்(ரலி) அவர்களிடம் 'குளிப்புக் கடமையானவர் ஒரு மாத காலம் வரை தண்ணீரைப் பெறவில்லையானால் அவர் தயம்மும் செய்து தொழ வேண்டியதில்லையா? 'மாயிதா' என்ற அத்தியாயத்தில் வரும், 'நீங்கள் தண்ணீரைப் பெறவில்லையானால் சுத்தமான மண்ணில் தயம்மும் செய்யுங்கள்' என்ற வசனத்தை என்ன செய்வீர்கள்?' என்று கேட்டதற்கு, 'இந்த விஷயத்தில் பொது அனுமதி கொடுக்கப்பட்டால், தண்ணீர் கொஞ்சம் குளிராக இருக்கும் போதெல்லாம் (மக்கள்) தண்ணீரில் உளூச் செய்வதைவிட்டுவிட்டு மண்ணில் தயம்மும் செய்து விடுவார்கள்' என்று அப்துல்லா இப்னு மஸ்வூத்(ரலி) கூறினார். அப்போது 'இதற்காகத்தான் தயம்மும் செய்வதை நீங்கள் வெறுத்தீர்களா?' என்று நான் கேட்டதற்கு 'ஆம்!' என்று பதிலளித்தபோது, 'என்னை ஒரு வேலைக்காக நபி(ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தபோது எனக்குக் கிடைக்கவில்லை. எனவே பிராணிகள் மண்ணில் புரளுவது போன்று புரண்டேன். இச்செய்தியை நபி(ஸல்) அவர்களிடம் நான் சொன்னபோது நபி(ஸல்) அவர்கள் தங்களின் இரண்டு கைகளால் பூமியில் ஓர் அடி அடித்து, பின்னர் இரண்டு கைகளையும் தட்டிவிட்டு, தங்களின் வலக்கரத்தால் இடது புறங்கையைத் தடவினார்கள். அல்லது தங்களின் இடக்கரத்தால் வலப்புறங்கையைத் தடவினார்கள். பின்னர் இரண்டு கைகளால் தங்களின் முகத்தைத் தடவிவிட்டு 'இப்படிச் செய்வது உமக்குப் போதுமானதாக இருந்தது' என்று கூறினார்கள்' என்ற செய்தியை 'உமர்(ரலி) அவர்களிடம், அம்மார் சொன்னதை நீங்கள் கேள்விப்படவில்லையா?' என அபூ மூஸா(ரலி) கேட்டதற்கு, 'அம்மார் சொன்னதில் உமர்(ரலி) திருப்திப்படவில்லை' என்பது உமக்குத் தெரியாதா? என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) திரும்பக் கேட்டார்" என ஷகீக் அறிவித்தார்.
மற்றோர் அறிவிப்பில்: 'நான் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி), அபூ மூஸா(ரலி) ஆகிய இருவருடன் அமர்ந்திருந்தபோது, அபூ மூஸா(ரலி), அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களை நோக்கி 'என்னையும் உங்களையும் நபி(ஸல்) அவர்கள் (ஒரு வேலைக்காக) அனுப்பியபோது எனக்குக் குளிப்புக் கடமையாகி மண்ணில் நான் புரண்டதும், பின்னர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து நடந்த விஷயத்தைச் சொன்னபோது நபி(ஸல்) அவர்கள் தங்களின் முகத்தையும் இரண்டு முன் கைகளையும் ஒரு முறை தடவிவிட்டு 'இப்படி நீர் செய்திருந்தால் அது உமக்குப் போதுமானது' என்று கூறினார்கள்' என உமர்(ரலி) அவர்களிடம் அம்மார்(ரலி) கூறியதை நீர் கேள்விப்பட்டதில்லையா' என அபூ மூஸா(ரலி) கேட்டார்" என ஷகீக்' வாயிலாக 'யஃலா' அறிவித்தார்.


தயம்மும்

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அபூ மூஸ அல் அஷ்அரி(ரலி) ஆகியோருடன் நானும் இருந்தபோது அபூ மூஸா(ரலி) அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களிடம் 'அபூ அப்திர்ரஹ்மானே! குளிப்புக் கடமையானவருக்குத் தண்ணீர் கிடைக்காவிட்டால் அவர் என்ன செய்ய வேண்டும்?' என்று கேட்டதற்கு, 'தண்ணீர் கிடைக்கும் வரை அவர் தொழ வேண்டியதில்லை' என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) கூறியபோது, 'நபி(ஸல்) அவர்கள் அம்மார் இப்னு யாஸிர்(ரலி) அவர்களிடம், 'தண்ணீர் கிடைக்காவிட்hல் தயம்மும் செய்தால் போதுமானது' என்று சொன்ன செய்தியை நீர் என்ன செய்வீர்?' என அபூ மூஸா(ரலி) கேட்டதற்கு, '(அம்மார்(ரலி) உமர்(ரலி) அவர்களிடம் அச்செய்தியைக் கூறிய போது) அதை உமர்(ரலி) ஏற்றுக் கொள்ளவில்லை என்பது உமக்குத் தெரியாதா?' என்று அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) பதில் கூறினார். அப்போது, 'அம்மார்(ரலி) அறிவிப்பதைவிட்டு விடுங்கள். 'தண்ணீர் கிடைக்காவிட்டால் தயம்மும் செய்து கொள்ளுங்கள்' என்ற இந்த இறைவசனத்தை என்ன செய்வீர்கள்?' என்று அபூ மூஸா(ரலி) கேட்டதற்கு, 'இந்த விஷயத்தில் நாம் அவர்களுக்கு அனுமதி வழங்கிவிட்டால் யாருக்காவது தண்ணீர் கொஞ்சம் குளிராகத் தெரிந்தால் அதில் உளூச் செய்வதைவிட்டுவிட்டு தயம்மும் செய்வார்' என்று அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) தாம் சொல்லக்கூடிய இந்த வார்த்தையின் விபரீதத்தைப் புரியாமலே சொல்லிவிட்டார்.
இதற்காகத்தான் தயம்மும் செய்வதை அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) வெறுத்திருக்கக் கூடுமோ? என ஷகீம்டம் நான் கேட்டதற்கு அவர் 'ஆம்! என்றார்" என அஃமஷ் அறிவித்தார்.



தயம்மும்

(குளிப்புக் கடமையானவருக்குத்) தண்ணீர் கிடைக்காவிட்டாலும் அவர் தொழ வேண்டாமல்லவா?' என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களிடம் அபூ மூஸா(ரலி) கேட்டதற்கு, 'இந்த விஷயத்தில் நாம் சலுகையளித்தால் குளிர் ஏற்பட்டால் கூட மக்கள் தயம்மும் செய்து தொழ ஆரம்பித்து விடுவார்கள்' என்று அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி), அம்மார் இப்னு யாஸிர்(ரலி) உமர்(ரலி) அவர்களிடம் ('தண்ணீர் கிடைக்காவிட்டால் தயம்மும் செய்தால் போதுமானது' என்று) சொன்ன செய்தியை நீர் என்ன செய்வீர்?' என்று அவர் கேட்டார். அதற்கு, '(அம்மார்(ரலி) உமர்(ரலி) அவர்களிடம் அச்செய்தியைக் கூறியபோது) அதை உமர்(ரலி) ஏற்றுக் கொள்ளவில்லை' என்பது உமக்குத் தெரியாதா?' என்று அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) கேட்டார்.
'இதற்காகத்தான் தயம்மும் செய்வதை அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) வெறுத்திருக்கக் கூடுமோ?' என ஷகீக் அவர்களிடம் நான் கேட்டதற்கு, அவர் 'ஆம்! எனப் பதிலளித்தார்கள்" என அஃமஷ் அறிவித்தார்.


தயம்மும்

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு பயணம் சென்றோம். இரவின் கடைசி நேரம் வந்தபோது எங்களுக்கு தூக்கம் மேலிட்டது. பயணிக்கு அதைவிட இன்பமான தூக்கம் எதுவும் இருக்க முடியாது. அந்தத் தூக்கத்திலிருந்து எங்களை (அதிகாலை) சூரிய வெப்பம்தான் எழுப்பியது. முதல் முதலாகத் தூக்கத்திலிருந்து எழுந்தவர் இன்னவர், அடுத்த இன்னவர் அவரை அடுத்து இன்னவர் இந்த ஹதீஸ் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூ ரஜா எழுந்தவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டுக் கூறினார். அவருக்கு அடுத்த அறிவிப்பாளரான அவ்ஃப் அவர்களின் பெயர்களை மறந்துவிட்டார். நான்காவதாகத் தூக்கத்திலிருந்து எழுந்தவர் உமர் இப்னு கத்தாப்(ரலி) ஆவார்கள்."
நபி(ஸல்) அவர்கள் தூங்கினால் அவர்கள் தாமாகவே தூக்கத்திலிருந்து விழிக்கும் வரை வேறு யாராலும் எழுப்பப்பட மாட்டார்கள். காரணம் அவர்களின் தூக்கத்தில் என்ன செய்தி வருமென்பது எங்களுக்குத் தெரியாது. உமர்(ரலி) தூக்கத்தைவிட்டு எழுந்து மக்களுக்கு ஏற்பட்ட (ஸுப்ஹ் தொழுகை தவறிப்போன) இந்நிலையைப் பார்த்ததும் அல்லாஹு அக்பர்!' என்று சப்தமிட்டார். அவர் திடகாத்திரமான மனிதராக இருந்தார். அவர் சப்தமிட்டுத் தக்பீர் முழங்கிக் கொண்டே இருந்தார். அவர்களின் சப்தத்தைக் கேட்டு நபி(ஸல்) அவர்களும் தூக்கத்திலிருந்து எழுந்தார்கள். உடனே மக்கள் தங்களுக்கு ஏற்பட்ட இந்நிலையை நபி(ஸல்) அவர்களிடம் முறையிட்டார்கள். அப்போது 'அதனால் எந்தப் பாதிப்புமில்லை. நீங்கள் இங்கிருந்து புறப்படுங்கள்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறிவிட்டு, அந்த இடத்தைவிட்டும் புறப்பட்டார்கள். சிறிது தூரம் சென்றதும் அங்கே தங்கி உளூச் செய்யத் தண்ணீர் கொண்டு வரச் செய்து அதில் உளூச் செய்தார்கள். தொழுகைக்காக அழைப்புக் கொடுக்கப்பட்டது. மக்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். நபி(ஸல்) அவர்கள் தொழுகையை முடித்துவிட்டு திரும்பிப் பார்த்தபோது, அங்கு ஒருவர் கூட்டத்துடன் தொழாமல் தனியாக இருந்தார். 'ஜமாஅத்துடன் நீர் தொழாமலிருக்கக் காரணமென்ன?' என்று அவரிடம் கேட்டபோது, 'எனக்குக் குளிப்புக் கடமையாகிவிட்டது. தண்ணீர் இல்லை' என்று அவர் கூறினார். 'மண்ணில் தயம்மும் செய். அது உனக்குப் போதுமானது' என்று நபி(ஸல்) அவர்கள் அவரிடம் கூறினார்கள்.
பின்னர் நபி(ஸல்) அவர்கள் பயணத்தைத் தொடங்கினார்கள். அப்போது மக்கள் அவர்களிடம் சென்று 'தாகமாக இருக்கிறது; தண்ணீர் இல்லை' என முறையிட்டார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் தங்களின் வாகனத்திலிருந்து இறங்கி, ஒரு மனிதரையும் அவர் பெயரை அபூ ரஜா குறிப்பிட்டார்கள். அவ்ஃப் என்பவர் மறந்துவிட்டார். அலீ(ரலி) அவர்களையும் அழைத்து' நீங்கள் இருவரும் சென்று தண்ணீரைத் தேடுங்கள்' என்று கூறினார்கள். அவர்கள் இருவரும் தண்ணீரைத் தேடிச் சென்று கொண்டிருந்தபோது, வழியில் ஒரு பெண்ணைச் சந்தித்தார்கள். அவள் ஓர் ஒட்டகத்தின் மீது இரண்டு தோல் பைகளில் தண்ணீர் வைத்துக் கொண்டு அதற்கிடையில் அமர்ந்திருந்தாள்.
'தண்ணீர் எங்கே கிடைக்கிறது?' என்று அவ்விருவரும் அப்பெண்ணிடம் கேட்டனர். 'தண்ணீர் ஒரு நாள் பயண தூரத்தில் இருக்கிறது. எங்களுடைய ஆண்கள் தண்ணீருக்காகப் பின்தங்கிவிட்டனர்' என அப்பெண் கூறினாள். 'அப்படியானால் நீ புறப்படு' என்று அவ்விருவரும் அப்பெண்ணிடம் கூறினார்கள். 'எங்கே?' என்று அவள் கேட்டாள். 'அல்லாஹ்வின் தூதரிடம்' என்று கூறினார்கள். 'மதம் மாறியவர் என்று கூறப்படுகிறாரே அவரிடத்திலா?' என்று அப்பெண் கேட்டாள். 'நீ கூறுகிற அவரேதான்' என்று கூறிவிட்டு அவளை நபி(ஸல்) அவர்களிடம் அழைத்து வந்து நடந்ததைக் கூறினார்கள்.
'அந்தப் பெண்ணை அவளுடைய ஒட்டகத்திலிருந்து இறங்கச் செல்லுங்கள்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறிவிட்டு, ஒரு பாத்திரத்தைக் கொண்டு வரச் சொல்லி, அந்த இரண்டு தோல் பைகளிலிருந்த தண்ணீரைப் பாத்திரங்களில் நிரப்பினார்கள். பின்னர் அந்த இரண்டு தோல் பைகளின் அடிப்புற வாயைக் கட்டிவிட்டுத் தண்ணீர் செலுத்தும் மேற்புற வாயைக் கட்டாமல்விட்டுவிட்டார்கள். 'எல்லோரும் வந்து தண்ணீர் குடியுங்கள். சேகரித்து வையுங்கள்' என்று மக்களுக்கு அறிவிக்கப்பட்டது. விரும்பியவர்கள் குடித்தார்கள்; விரும்பியவர்கள் பாத்திரங்களில் எடுத்து வைத்தார்கள். குளிப்புக் கடமையான அவர்தாம் கடைசியாக வந்தவர். அவருக்கு ஒரு பாத்திரம் தண்ணீர் கொடுத்து, 'இதைக் கொண்டு போய் உம் மீது ஊற்றிக் கொள்ளும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அந்தப் பெண் தன்னுடைய தண்ணீர் எந்தெந்த வகையிலெல்லாம் பயன்படுத்தப்படுகிறது என்பதைக் கவனித்துக் கொண்டே நின்றாள். அல்லாஹ்வின் மீது ஆணையாக அவளுடைய உள்ளத்தில் நபி(ஸல்) மீது இருந்த வெறுப்பு நீங்கிவிட்டது. அந்த இரண்டு தோல் பைகளிலிருந்து முதலில் தண்ணீரை எடுக்கும்போது இருந்ததை விட அதிகமான தண்ணீர் பிறகு அத்தோல் பையில் இருப்பது போன்று எங்களுக்குத் தெரிந்தது. (தண்ணீர் குறையவில்லை.) 'அந்தப் பெண்ணுக்கு ஏதாவது சேகரித்துக் கொடுங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அவளுக்காகப் பேரீச்சம் பழம், மாவு போன்றவற்றைச் சேகரித்தார்கள். அவளுக்குப் போதுமான உணவு சேர்ந்தது. அதைத் துணியில் வைத்துக் (கட்டி) அவளை ஒட்டகத்தின் மீது அமரச் செய்து உணவுப் பொட்டலமுள்ள துணியை அவளுக்கு முன்னால் வைத்தார்கள். பின்னர், அந்தப் பெண்ணிடம் 'உன்னுடைய தண்ணீரிலிருந்து எதையும் நாங்கள் குறைக்கவில்லை; அல்லாஹ்தான் எங்களுக்குத் தண்ணீர் புகட்டினான்' என்பதைத் தெரிந்து கொள் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அந்தப் பெண் தன்னுடைய குடும்பத்தினரிடம் குறிப்பிட்ட நேரத்தை விடத் தாமதமாக வந்தபோது, 'பெண்ணே! நீ பிந்தி வரக்காரணமென்ன?' என்று கேட்டதற்கு 'ஓர் ஆச்சரியமான விஷயம் நிகழ்ந்தது. இரண்டு மனிதர்கள் என்னைச் சந்தித்து மதம் மாறியவர் என்று கூறப்படக் கூடிய அந்த மனிதரிடம் என்னை அழைத்துச் சென்றனர். அவர் இப்படியெல்லாம் செய்தார்' (என நடந்த நிகழ்ச்சிகளைக் கூறினாள்.)
அவள் தன் கையின் நடுவிரலையும், ஆட்காட்டி விரலையும் வானத்தின் பக்கம் உயர்த்தி, 'அல்லாஹ்வின் மீது ஆணையாக இந்த வானத்திற்கும் இந்த பூமிக்கும் இடையிலுள்ள சூனியக்காரர்களில் அவர் மிகச் சிறந்தவராக இருக்க வேண்டும். அல்லது அல்லாஹ்வின் மீது ஆணையாக அவர் இறைத்தூதராக இருக்க வேண்டும்' என்று கூறினாள்.
பின்னர் முஸ்லிம்கள் அந்தப் பெண்ணைச் சுற்றி வாழ்ந்தவர்களை எதிர்த்துப் போராடினார்கள். அப்போது அந்தப் பெண் எந்தக் குடும்பத்தைச் சார்ந்துள்ளாளோ அந்தக் குடும்பத்தை அவர்கள் ஒன்றும் செய்யவில்லை.
ஒரு முறை அந்தப் பெண் தங்களின் கூட்டத்தாரிடம், 'இந்த முஸ்லிம்கள் வேண்டுமென்றே (உங்களிடம் போரிடாமல்) உங்களைவிட்டு விடுகிறார்கள் என்றே கருதுகிறேன். எனவே நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள விரும்புகிறீர்களா?' என்று கேட்டபோது அவர்கள் எல்லோரும் அவளுடைய பேச்சுக்குக் கட்டுப்பட்டு இஸ்லாத்தில் இணைந்தார்கள்" என இம்ரான்(ரலி) அறிவித்தார்.



தயம்மும்

'நபி(ஸல்) அவர்கள் தங்களின் இரண்டு கைகளையும் தரையில் அடித்துத் தங்களின் முகத்தையும் இரண்டு முன் கைகளையும் தடவிக் காண்பித்தார்கள்" என அம்மார்(ரலி) அறிவித்தார்.



தயம்மும்

முந்திய ஹதீஸே இங்கு மீண்டும் இடம் பெற்றுள்ளது.


தயம்மும்

'நானோ மண்ணில் புரண்டேன். இந்நிகழ்ச்சியை நபி(ஸல்) அவர்களிடம் சொன்னபோது அவர்கள் முன்கைகளும் முகமும் போதுமானதாக இருந்தது' என அம்மார்(ரலி) உமர்(ரலி) அவர்களிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள கூறினார்கள்' என்று குறிப்பிட்டார்" அப்துர்ரஹ்மான் இப்னு அப்ஸா(ரலி) அறிவித்தார்.


தயம்மும்

நான் உமர்(ரலி) அவர்களிடமிருந்தேன். அப்போது அம்மார் இப்னு யாஸிர்(ரலி) உமர்(ரலி) அவர்களிடம் 'நாம் ஒரு பயணத்தில் சென்றபோது குளிப்புக் கடமையாகிவிட்டது' என்று கூறி (தயம்மும் செய்து காட்டினார்கள். அப்போது) இரண்டு கைகளிலும் ஊதிக் காட்டினார்கள்" என அப்துர்ரஹ்மான் இப்னு அப்ஸா(ரலி) அறிவித்தார்.


தயம்மும்

முந்திய ஹதீஸ் இங்கே இடம் பெறுகிறது. அத்துடன் 'ஷுஅபா' என்பவர் இரண்டு கைகளால் பூமியில் அடித்து அவற்றைத் தம் வாயின் பக்கம் நெருக்கி (ஊதிவிட்டு) பின்னர் தம் முகத்தையும் இரண்டு முன் கைகளையும் தடவினார்" என்று குறிப்பிட்டார் எனக் குறிப்பிடப்படுகிறது.



தயம்மும்

'ஒருவர் உமர்(ரலி) அவர்களிடம் வந்து 'நான் குளிப்புக் கடமையானவனாக ஆம்விட்டேன். தண்ணீர் கிடைக்கவில்லை. என்ன செய்யவேண்டும்?' என்று கேட்டபோது, அங்கிருந்த அம்மார் இப்னு யாஸிர்(ரலி) உமர்(ரலி) அவர்களிடம், 'நானும் நீங்களும் ஒரு பயணத்தில் சென்றோம். (அப்போது தண்ணீர் கிடைக்காததால்) நீங்கள் தொழவில்லை; நானோ மண்ணில் புரண்டுவிட்டுத் தொழுதேன். இந்நிகழ்ச்சியை நபி(ஸல்) அவர்களிடம் நான் சொன்னபோது நபி(ஸல்) அவர்கள் தங்களின் இரண்டு கைகளையும் தரையில் அடித்து, அவற்றில் ஊதிவிட்டு அவ்விரு கைகளால் தங்களின் முகத்தையும் இரண்டு முன்கைகளையும் தடவிக் காண்பித்து 'இவ்வாறு செய்திருந்தால் அது உனக்குப் போதுமானதாக இருந்தது' எனக் கூறிய சம்பவம் உங்களுக்கு நினைவில்லையா?' என்று கேட்டார்கள்" என அப்துர்ரஹ்மான் அப்ஸா(ரலி) கூறினார்.


தயம்மும்

'நானும் நபி(ஸல்) அவர்களின் மனைவியான மைமூனாவின் அடிமை அப்துல்லாஹ் இப்னு யஸாரும் அபூ ஜுஹைம் இப்னு அல்ஹாரிது இப்னு அஸ்ஸிம்மத்தில் அன்ஸாரி(ரலி) அவர்களிடம் சென்றோம். 'எங்களிடம் நபி(ஸல்) அவர்கள் 'பீர்ஜமல்' என்ற இடத்திலிருந்து வந்து கொண்டிருந்தார்கள். அப்போது ஒருவர் அவர்களை சந்தித்து ஸலாம் கூறியதற்கு, நபி(ஸல்) அவர்கள் பதில் சொல்லாமல் ஒரு சுவர் பக்கம் சென்று (அதில் கையை அடித்து) தங்களின் முகத்தையும் இரண்டு கைகளையும் தடவிய பின்னர் அவரின் ஸலாத்திற்கு பதில் கூறினார்கள்' என்று அபூ ஜுஹைம்(ரலி) கூறினார்" என உமைர் என்பவர் அறிவித்தார்.


தயம்மும்

'ஆயிஷா (தங்களின் சகோதரி) அஸ்மாவிடமிருந்து ஒரு கழுத்தணியை இரவல் வாங்கியிருந்தார். அந்தக் கழுத்தணி காணாமல் போனது. இதை அறிந்த நபி(ஸல்) அவர்கள் ஒரு மனிதரை அனுப்பி அந்தக் கழுத்தணியைத் தேடி வருமாறு கூறினார்கள். தேடிப்போனவர் அதைக் கண்டெடுத்தார். தேடிப் போன அந்த இடத்தில் தொழுகையின் நேரம் வந்துவிட்டது. அவர்களிடம் தண்ணீர் இருக்கவில்லை. எனவே (உளூவின்றித்) தொழுதுவிட்டார். இதைப் பற்றி நபி(ஸல்) அவர்களிடம் முறையிட்டார். அப்போது அல்லாஹ் தயம்முடைய வசனத்தை அருளினான். அப்போது உஜைத் இப்னு ஹுளைர் என்பவர் ஆயிஷா(ரலி) அவர்களிடம் 'அல்லாஹ் உங்களுக்கு நற்கூலியைத் தருவானாக! அல்லாஹ்வின் மீது ஆணையாக நீங்கள் வெறுக்கக் கூடிய எந்த ஒரு விஷயம் உங்களுக்கு ஏற்பட்டாலும், அதை உங்களுக்கும் மற்ற முஸ்லிம்களுக்கும் நலமானதாக அல்லாஹ் ஆக்கி விடுகிறான்' என்று கூறினார்" என உர்வா அறிவித்தார்.


தயம்மும்

'எனக்கு முன்னர் யாருக்கும் கொடுக்கப்படாத ஐந்து விஷயங்கள் எனக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. எதிரிகளுக்கும் எனக்குமிடையில் ஒரு மாத காலம் பயணம் செய்யும் இடைவெளியிருந்தாலும் அவர்களின் உள்ளத்தில் பயம் ஏற்படுத்தப்படுவதன் மூலம் நான் உதவப்பட்டுள்ளேன். பூமி முழுவதும் சுத்தம் செய்யத் தக்கதாகவும் தொழுமிடமாகவும் எனக்கு ஆக்கப்பட்டுள்ளது. என்னுடைய சமுதாயத்தில் தொழுகையின் நேரத்தை அடைந்தவர் (இருக்கும் இடத்தில்) தொழுதுகொள்ளட்டும்! போரில் கிடைக்கிற பொருள்கள் எனக்கு ஹலாலாக்கப்பட்டுள்ளன. எனக்கு முன்பு ஹலாலாக்கப்பட்டதில்லை. (மறுமையில்) சிபாரிசு செய்யும் வாய்ப்புக் கொடுக்கப்பட்டுள்ளேன். ஒவ்வொரு நபியும் தங்களின் சமூகத்திற்கு மட்டுமே நபியாக அனுப்பட்டார்கள். ஆனால், மனித இனம் முழுமைக்கும் நபியாக அனுப்பப்பட்டுள்ளேன்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.


தயம்மும்

நாங்கள் ஒரு பயணத்தில் நபி(ஸல்) அவர்களுடன் சென்றோம். 'பைதாவு' அல்லது 'தாத்துல் ஜைஷ்' என்ற இடத்தை வந்தடைந்ததும் என்னுடைய கழுத்தணி அறுந்து (தொலைந்து)விட்டது. அதைத்தேடுவதற்காக நபி(ஸல்) அவர்களும் மற்றவர்களும் அந்த இடத்தில் தங்கினோம். நாங்கள் தங்கிய இடத்தில் தண்ணீர் இல்லை. அப்போது அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் சிலர் வந்து, '(உங்கள் மகளான) ஆயிஷா செய்ததை நீங்கள் பார்த்தீர்களா? நபி(ஸல்) அவர்களையும் மக்களையும் இங்கே தங்கச் செய்துவிட்டார். அவர்கள் தங்கிய இடத்திலும் தண்ணீர் இல்லை; அவர்களுடனும் தண்ணீர் எடுத்து வரவில்லை' என்று முறையிட்டனர். அபூ பக்ர்(ரலி) (என்னருகே) வந்தபோது நபி(ஸல்) அவர்கள் தங்களின் தலையை என்னுடைய மடி மீது வைத்துத் தூங்கிக் கொண்டிருந்தார்கள். 'நபி(ஸல்) அவர்களையும் மக்களையும் தங்க வைத்துவிட்டாயே? அவர்கள் தங்கிய இடத்திலும் தண்ணீர் இல்லை; அவர்களிடமும் தண்ணீர் இல்லை' என்று கூறினார்கள். அவர்கள் எதைச் சொல்ல அல்லாஹ் நாடினானோ அதையெல்லாம் சொல்லிவிட்டு, தங்களின் கையால் என்னுடைய இடுப்பில் குத்தினார்கள். நபி(ஸல்) அவர்களின் தலை என் மடியின் மீது இருந்ததால் நான் அசையாது இருந்தேன். நபி(ஸல்) அவர்கள் காலையில் விழித்தெழிந்தபோதும் தண்ணீர் கிடைக்கவில்லை. அப்போது அல்லாஹ் தயத்தின் வசனத்தை அருளினான். எல்லோரும் தயம்மும் செய்தார்கள்.
இது பற்றிப் பின்னர் உஜைத் இப்னு ஹுளைர்(ரலி) 'அபூ பக்ரின் குடும்பத்தார்களே! உங்களின் மூலமாக ஏற்பட்ட பரக்கத்துக்களில் இது முதலாவதாக இல்லை. (இதற்கு முன்பும் உங்களின் மூலம் எத்தனையோ பரக்கத்துக்கள் ஏற்பட்டுள்ளன)' எனக் கூறினார். அப்போது நான் இருந்த ஒட்டகத்தை எழுப்பியபோது அதனடியில் (காணாமல் போன) என் கழுத்தணி கிடந்ததைக் கண்டோம்"என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.


மாதவிடாய்

'எனக்கு மாதவிடாய் ஏற்படும்போது நான் தொழுவதில்லை. அந்நிலையில் நபி(ஸல்) அவர்களின் பள்ளிவாசலின் அருகில் படுத்திருந்தேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் சிறிய பாயில் தொழுது கொண்டிருந்தார்கள். ஸஜ்தாச் செய்யும்போது அவர்கள் அணிந்திருந்த ஆடையின் ஒரு பகுதி என் மீது படும்" என்று மைமூனா(ரலி) அறிவித்தார்.


மாதவிடாய்

'ஒரு பெண் பிரசவ நேரத்தில் இறந்தபோது அவருக்கு நபி(ஸல்) ஜனாஸாத் தொழுகை நடத்தினார்கள். தொழுகையின்போது ஜனாஸாவின் நடுப்பகுதிக்கு நேராக நின்றார்கள்" என ஸமுரா இப்னு ஜுன்துப்(ரலி) அறிவித்தார்.


மாதவிடாய்

'மாதவிடாய் ஏற்படும்போது தொழுகையைவிட்டுவிடு. மாதவிடாய்க் காலம் கழிந்ததும் இரத்ததைச் சுததம் செய்துவிட்டுத் தொழுது கொள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.


மாதவிடாய்

'ஹஜ்ஜில் ஒரு பெண்ணிற்கு மாதவிடாய் ஏற்பட்டால் அவள் சுத்தமான பின்னர் தவாஃபை நிறைவேற்றிவிட்டுத்தான் வீடு செல்ல வேண்டும்' என இப்னு உமர் ஆரம்பகாலத்தில் சொல்லியிருந்தார். ஆனால் பின்னர் 'அவள் வலம் வராமலே வீடு திரும்பலாம்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என இப்னு உமர்(ரலி) கூறினார்" என தாவூஸ் அறிவித்தார்.


மாதவிடாய்

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். ஹஜ்ஜில் ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் (தவாஃப் செய்யாமல்) வீடு திரும்புதல் அனுமதிக்கப்பட்டிருக்கிறது.


மாதவிடாய்

'ஹஜ்ஜின்போது நான் நபி(ஸல்) அவர்களிடம் ஸஃபியாவுக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது' எனக் கூறினேன். அதற்கு நபியவர்கள் 'அவள் நம்மைப் பயணத்தைவிட்டு நிறுத்தி விடுவாள் போலிருக்கிறதே! உங்களுடன் அவள் தவாஃப் செய்யவில்லையா?' என்று கேட்டார்கள். 'தவாஃப் செய்துவிட்டார்' என (அங்கிருந்தோர்) கூறினார்கள். 'அப்படியானால் புறப்படுங்கள்' என்று நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.


மாதவிடாய்

'உம்மு ஹபீபா என்ற பெண் ஏழு ஆண்டுகள் உதிரப் போக்குடையவராக இருந்தார். இது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்டபோது, குளிக்குமாறு அவர்களுக்குக் கட்டளையிட்டு, 'இது ஒரு நோய்' என்று கூறினார்கள். (இதனால்) ஒவ்வொரு தொழுகைக்கும் அப்பெண் குளிப்பவராக இருந்தார்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.


மாதவிடாய்

'மாதவிடாய் அல்லாத நாள்களில் வெளிப்படும் மஞ்சள் நிற இரத்தத்தையும் ஒருவகை மண்நிற இரத்தத்தையும் மாதவிடாயாக நாங்கள் கருதுவதில்லை" என உம்மு அதிய்யா(ரலி) அறிவித்தார்.


மாதவிடாய்

'பாத்திமா பின்த் அபீ ஹுபைஷ் என்ற பெண், நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! நான் (இரத்தப் போக்கிலிருந்து) சுத்தமாவதே இல்லை. எனவே நான் தொழுகையை விடலாமா?' என்று கேட்டதற்கு, 'கூடாது. அது ஒரு நரம்பு நோய்; மாதவிடாய் இரத்தமன்று. மாதவிடாய் ஏற்படும் நாள்களின் அளவுக்குத் தொழுகையைவிட்டுவிடு. பின்னர் தொழுது கொள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.


மாதவிடாய்

நாங்கள் இரண்டு பெருநாள்களிலும் தொழும் இடத்திற்குச் செல்வதைவிட்டும் எங்கள் குமரிப் பெண்களைத் தடுத்துக் கொண்டிருந்தோம். அப்போது ஒரு பெண் வந்து பனீ கலஃப் வம்சத்தினரின் இல்லத்தில் தங்கியிருந்தார். அவர் தங்களின் சகோதரி (உம்மு அதிய்யா) வழியாக வந்த செய்தியை அறிவித்தார். அவரின் சகோதரி (உம்மு அதிய்யா) நபி(ஸல்) அவர்களோடு தம் கணவர் பங்கெடுத்த பன்னிரண்டு போர்களில் ஆறு போர்களில் கணவரோடு இருந்தார்.
'நாங்கள் போர்க்களத்தில் காயமுற்றவர்களுக்குச் சிகிச்சையளிப்போம். நோயாளியைக் கவனிப்போம். நான் நபி(ஸல்) அவர்களிடம் எங்களில் ஒருத்திக்கு மேலங்கி இல்லாவிட்டால் (பெரு நாள் தொழுகைக்கு) செல்லாமல் இருப்பது குற்றமா?' என நான் கேட்டதற்கு, 'அவளுடைய தோழி தன்னுடைய உபரியான மேலங்கியை அவளுக்கு அணியக் கொடுக்கட்டும். அவள் நன்மையான காரியங்களிலும் முஸ்லிம்கதளின் பிரச்சாரத்திலும் கலந்து கொள்ளட்டும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என்றார்.
உம்மு அதிய்யா(ரலி) வந்தபோது 'நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு கூற நீங்கள் கேட்டீர்களா?' என நான் கேட்டதற்கு 'என்னுடைய தந்தை அர்ப்பணமாகட்டும்; ஆம்! கேட்டேன்' எனக் கூறினார். இவர் நபி(ஸல்) அவர்களின் பெயரைக் கூறும் போதெல்லாம் 'என்னுடைய தந்தை அர்ப்பணமாகட்டும்' என்பதையும் சேர்த்தே கூறுவார்.
'கன்னிப் பெண்களும் மாதவிடாய்ப் பெண்களும் (பெருநாளன்று) வெளியே சென்று நன்மையான காரியங்களிலும் முஸ்லிம்களின் பிரச்சாரத்திலும் பங்கு கொள்வார்கள். பெருநாள் தொழுகை நடக்கும் இடத்திற்குச் செல்லும் மாதவிடாய்ப் பெண்கள் தொழும் இடத்தைவிட்டு ஒதுங்கி இருப்பார்கள்' என்றும் உம்மு அதிய்யா(ரலி) கூறினார். இதைக் கேட்ட நான் மாதவிடாய்ப் பெண்களுமா? எனக் கேட்டதற்கு, 'மாதவிடாய்ப் பெண் அரஃபாவிலும் மற்ற (மினா முஸ்தலிஃபா போன்ற) இடங்களுக்கும் செல்வதில்லையா?' என்று உம்மு அதிய்யா(ரலி) கேட்டார்" என ஹஃப்ஸா அறிவித்தார்.


மாதவிடாய்

நான் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு போர்வையைப் போர்த்திப்படுத்துக் கொண்டிருந்தேன். அப்போது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டது. மாதவிடாய்க் காலத்தில் அணியும் துணியை எடுப்பதற்காக நபி(ஸல்) அவர்களுக்குத் தெரியாதவாறு அந்த இடத்தைவிட்டு நகர்ந்தேன். 'உனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டதா?' என்று நபி(ஸல்) அவர்கள் என்னை அழைத்தார்கள். நான் அவர்களோடு போர்வைக்குள் படுத்துக்கொண்டேன்" என உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார்.


மாதவிடாய்

நான் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு போர்வையைப் போர்த்திப் படுத்துக் கொண்டிருந்தபோது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டது. மாதவிடாய்க் காலத்தில் அணியும் துணியை எடுப்பதற்காக நபி(ஸல்) அவர்களுக்குத் தெரியாதவாறு அந்த இடத்தைவிட்டு நகர்ந்து அதை அணிந்தேன். 'உனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டதா?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். 'ஆம்' என்றேன். ஆயினும், அவர்கள் என்னை(த் தம்மருகில்) அழைத்தார்கள். நான் அவர்களோடு போர்வைக்குள் படுத்துக் கொண்டேன்" என்றும்,
"நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும்போது என்னை முத்தமிடுவார்கள். நானும் நபி(ஸல்) அவர்களும் ஒரே பாத்திரத்திலிருந்து கடமையான குளிப்பை நிறைவேற்றுவோம்" என்றும் உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார்.


மாதவிடாய்

'பெண்கள் மாதவிடாயிலிருந்து சுத்தமான பின்னர் தொழுதால் மட்டும் போதுமா?' என்று ஒரு பெண் ஆயிஷா(ரலி) அவர்களிடம் கேட்டதற்கு, 'நீ 'ஹரூர்' எனும் இடத்தைச் சார்ந்த பெண்ணா? நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் இருக்கும்போது எங்களுக்கு மாதவிடாய் ஏற்படும். அப்போது எங்களிடம் விடுபட்ட தொழுகையைத் தொழுமாறு ஏவ மாட்டார்கள்' என்று அல்லது அத்தொழுகையை நாங்கள் தொழ மாட்டோம்" என்று ஆயிஷா(ரலி) கூறினார்" என முஆதா அறிவித்தார்.


மாதவிடாய்

'பாத்திமா பின்த் அபீ ஹுபைஷ் என்ற பெண் உதிரப் போக்குடையவராக இருந்தார். நபி(ஸல்) அவர்களிடம் அப்பெண் (இது குறித்து) கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள் 'அது ஒரு நரம்பு நோய். அது மாதவிடாய் இரத்தமன்று. மாதவிடாய் ஏற்படும்போது தொழுகையைவிட்டுவிடு. மாதவிடாய்க் காலம் கழிந்ததும் குளித்துவிட்டுத் தொழுது கொள்' என்று கூறினார்கள்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.


மாதவிடாய்

நபி(ஸல்) அவர்களின் இறுதி ஹஜ்ஜின்போது நபி(ஸல்) அவர்களோடு சென்றோம். எங்களில் உம்ரா செய்வதற்காக இஹ்ராம் அணிந்தவர்களும் இருந்தனர். ஹஜ் செய்வதற்காக இஹ்ராம் அணிந்தவர்களும் இருந்தனர். நாங்கள் மக்காவை அடைந்ததும் 'உங்களில் குர்பானிப் பிராணியைத் தம்முடன் கொண்டு வராமல் உம்ராவிற்காக இஹ்ராம் அணிந்தவர்கள் (உம்ரா கடமைகளை நிறைவேற்றிவிட்டு) இஹ்ராமிலிருந்து விலம்க் கொள்ளலாம். உம்ராவிற்காக இஹ்ராம் அணிந்து தங்களுடன் குர்பானிப் பிராணியைக் கொண்டு வந்திருப்பவர்கள் தங்களின் குர்பானியைப் பத்தாவது நாளன்று அறுக்கும் வரை தங்களின் இஹ்ராமிலிருந்து விலக வேண்டாம். ஹஜ்ஜிற்காக மட்டும் இஹ்ராம் அணிந்திருப்பவர்கள் தங்களின் ஹஜ்ஜை நிறைவேற்றட்டும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அப்போது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. அது அரஃபா நாள் வரை நீடித்தது. நான் உம்ராவிற்காகத்தான் இஹ்ராம் அணிந்திருந்தேன். (இதை நபி(ஸல்) அவர்களிடம் தெரிவித்தேன்) என்னுடைய தலை முடியை அவிழ்த்துவிட்டு அதை வாரி விடுமாறும், நான் உம்ராவிற்காக இஹ்ராம் அணிந்ததைவிட்டுவிட்டுத் திரும்ப ஹஜ்ஜிற்காக இஹ்ராம் அணிந்து கொள்ளுமாறும் எனக்குக் கட்டளையிட்டார்கள். நான் அவ்வாறே செய்தேன். என்னுடைய ஹஜ்ஜை நிறைவேற்றிய பின்னர் என்னுடன் (என்னுடைய சகோதரர்) அப்துர்ரஹ்மானை அனுப்பி, தன்யீம் என்ற இடத்திலிருந்து எனக்குவிடுபட்ட உம்ராவிற்காக இஹ்ராம் அணிந்து வருமாறு நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
சில பெண்கள் மாதவிடாய் செல்லும் இடத்தில் வைத்துக் கட்டிய பஞ்சு மஞ்சள் நிறமாக இருக்கும்போது அதை ஆயிஷா(ரலி) அவர்களிடம் அனுப்பி மாதவிடாய் இரத்தம் நின்றுவிட்டதா இல்லையா என்பதைத் தெரிந்து கொள்வார்கள். அப்போது 'மாதவிடாய் செல்லும் இடத்தில் வைக்கப்படும் பஞ்சு வெள்ளை நிறமாகக் காணும் வரை நீங்கள் அவசரப்பட்டு மாதவிடாயிலிருந்து சுத்தமாம் விட்டீர்கள் என்று கருதவேண்டாம்' என்று அப்பெண்களுக்கு ஆயிஷா(ரலி) கூறினார். சில பெண்கள் நடு இரவில் விளக்குகளைக் கொண்டு வரச் செய்து மாதவிடாயிலிருந்து சுத்தமாம் விட்டோமா என்பதைப் பார்ப்பார்கள் என்ற செய்தி ஜைத் இப்னு ஸாபித்(ரலி) அவர்களின் மகளுக்குக் கிடைத்தபோது, 'நபி(ஸல்) காலத்துப் பெண்மணிகள் இப்படியெல்லாம் செய்ய மாட்டார்கள்' என்று இப்படி செய்யும் பெண்களைக் குறை கூறினார்கள்"


மாதவிடாய்

'அல்லாஹ் கர்ப்பப் பையில் ஒரு வானவரை நியமிக்கிறான். கர்ப்பப் பையில் விந்து செலுத்தப்பட்ட பின்னர் அதன் ஒவ்வொரு நிலையிலும் மாற்றம் ஏற்படும்போது அந்த வானவர், 'யா அல்லாஹ்! இப்போது விந்தாக இருக்கிறது. யா அல்லாஹ்! இப்போது 'அலக்' (கருப்பைச் சுவற்றின் தொங்கும்) எனும் நிலையில் இருக்கிறது. யா அல்லாஹ்! இப்போது சதைத் துண்டாக இருக்கிறது' என்று கூறிவருவார். அல்லாஹ் அதை உருவாக்க நாடினால் அது ஆணா? பெண்ணா? நல்லவனா? கெட்டவனா? என்பதையும் அவனுக்குச் கொடுக்கவிருக்கும் செல்வம் எவ்வளவு? அவனுடைய வாழ்நாள் எவ்வளவு? என்பதையும் கூறிவிடுகிறான். மனிதன் தன் தாயின் வயிற்றில் இருக்கும் போதே இவை எழுதப்பட்டு விடுகின்றன' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என அனஸ்(ரலி) அறிவித்தார்.


மாதவிடாய்

துல்ஹஜ் மாதப் பிறையைப் பயணத்தில் அடையும் நிலையில் புறப்பட்டோம். அப்போது 'உம்ராச் செய்ய விரும்புவோர் உம்ராவிற்காக இஹ்ராம் அணிந்து கொள்ளட்டும். நான் என்னுடன் அறுத்துக் கொடுப்பதற்குரிய பிராணியைக் கொண்டு வராதிருந்தால் உம்ராவிற்காக இஹ்ராம் அணிந்திருப்பேன்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது சிலர் உம்ராவிற்காக வேறு சிலர் ஹஜ்ஜிற்காகவும் இஹ்ராம் அணிந்தனர். உம்ராவிற்காக இஹ்ராம் அணிந்தவர்களுடன் இருந்தேன். நான் மாதவிடாயுடன் இருந்தபோது அரஃபா நாள் வந்தது. நபி(ஸல்) அவர்களிடம் இது பற்றி முறையிட்டேன். 'நீ உன்னுடைய உம்ராவைவிட்டு விடு; உன்னுடைய தலைமுடியை அவிழ்த்து அதை வாரி விடு; பின்னர் ஹஜ்ஜிற்காக இஹ்ராம் அணிந்து கொள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நானும் அவ்வாறே செய்தேன். ஹஸ்பாவில் தங்கிய இரவு என்னுடைய சகோதரர் அப்துர் ரஹ்மானை நபி(ஸல்) என்னுடன் அனுப்பினார்கள். தன்யீம் என்ற இடத்திற்குச் சென்று எனக்கு விடுபட்ட உம்ராவிற்காக அங்கிருந்து இஹ்ராம் அணிந்தேன்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
"இந்த முறையில் செய்த எதிலும் அறுத்துப் பலியிடுவதோ, நோன்பு நோற்பதோ மற்றும் தர்மம் கொடுப்பதோ இருக்கவில்லை" என்று ஹிஷாம் குறிப்பிடுகிறார்.


மாதவிடாய்

நான் நபி(ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜதுல் வதாவின்போது இஹ்ராம் அணிந்தேன். அறுத்துக் கொடுப்பதற்குரிய கால் நடையைக் கொண்டுவராத ஹஜ்ஜின் 'தமத்துவ்' என்ற வகையை நிறைவேற்றுபவர்களுடன் இருந்தேன். மாதவிடாய் ஏற்பட்டுவிட்டதை உணர்ந்தேன். அரஃபாவின் இரவு வரும் வரை நான் சுத்தமாகவில்லை. அப்போது நான் நபி(ஸல்) அவர்களிடம் இறைத்தூதர் அவர்களே! இன்று அரஃபாவின் இரவு. நான் 'உம்ரா'ச் செய்துவிட்டுத் திரும்ப இஹ்ராம் அணிந்து ஹஜ் செய்வதாக நினைத்திருந்தேன் என்றேன். 'உன்னுடைய தலைமுடியை அவிழ்த்து அதை வாரிவிட்டு உம்ரா செய்வதை நிறுத்தி விடு. (ஹஜ்ஜிற்கு இஹ்ராம் அணிந்து கொள்)' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அவ்வாறே நானும் செய்தேன். ஹஜ்ஜின் கிரியைகளை முடித்த பின்பு, ஹஸ்பாவில் தங்கிய இடத்திலிருந்து தன்யீம் என்ற இடத்திற்குச் சென்று, எனக்கு விடுபட்ட உம்ராவிற்கு அங்கிருந்து இஹ்ராம் அணிந்து வருவதற்காக என்னை கூட்டிச் செல்லுமாறு (என் சகோதரர்) அப்துர்ரஹ்மானிடம் நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.


மாதவிடாய்

நான் நபி(ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜதுல் வதாவின்போது இஹ்ராம் அணிந்தேன். அறுத்துக் கொடுப்பதற்குரிய கால் நடையைக் கொண்டுவராத ஹஜ்ஜின் 'தமத்துவ்' என்ற வகையை நிறைவேற்றுபவர்களுடன் இருந்தேன். மாதவிடாய் ஏற்பட்டுவிட்டதை உணர்ந்தேன். அரஃபாவின் இரவு வரும் வரை நான் சுத்தமாகவில்லை. அப்போது நான் நபி(ஸல்) அவர்களிடம் இறைத்தூதர் அவர்களே! இன்று அரஃபாவின் இரவு. நான் 'உம்ரா'ச் செய்துவிட்டுத் திரும்ப இஹ்ராம் அணிந்து ஹஜ் செய்வதாக நினைத்திருந்தேன் என்றேன். 'உன்னுடைய தலைமுடியை அவிழ்த்து அதை வாரிவிட்டு உம்ரா செய்வதை நிறுத்தி விடு. (ஹஜ்ஜிற்கு இஹ்ராம் அணிந்து கொள்)' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அவ்வாறே நானும் செய்தேன். ஹஜ்ஜின் கிரியைகளை முடித்த பின்பு, ஹஸ்பாவில் தங்கிய இடத்திலிருந்து தன்யீம் என்ற இடத்திற்குச் சென்று, எனக்கு விடுபட்ட உம்ராவிற்கு அங்கிருந்து இஹ்ராம் அணிந்து வருவதற்காக என்னை கூட்டிச் செல்லுமாறு (என் சகோதரர்) அப்துர்ரஹ்மானிடம் நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.


மாதவிடாய்

'அன்ஸாரிப் பெண்களில் ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து 'மாதவிடாயில் இருந்த நான் சுத்தமாவதற்காக எவ்வாறுக் குளிக்க வேண்டும்?' எனக் கேட்டார். 'கஸ்தூரி கலந்த பஞ்சை எடுத்து நீ சுத்தம் செய்' என மூன்று முறை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். பின்னர் அவர்கள் வெட்கப்பட்டுத் தங்களின் முகத்தைத் திருப்பினார்கள். அல்லது 'அதைக் கொண்டு நீ சுத்தம் செய்' என்று கூறினார்கள். அப்போது நான் அந்தப் பெண்ணைப் பிடித்து என் பக்கம் இழுத்து நபி(ஸல்) அவர்கள் என் பக்கம் இழுத்து நபி(ஸல்) அவர்கள் என்ன குறிப்பிடுகிறார்கள் என்பதை அவளுக்கு விளக்கினேன்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.


மாதவிடாய்

'இறந்தவர்களுக்காக மூன்று நாள்களுக்கு மேல் துக்கத்தை வெளிப்படுத்துவதற்கு தடுக்கப்பட்டுள்ளோம். ஆனால் கணவன் இறந்த பின்னர் அவனுடைய மனைவி நான்கு மாதம் பத்து நாள்கள் துக்கத்தை வெளிப்படுத்த வேண்டும். இந்த நாள்களில் நாங்கள் சுருமா இடவோ, மணப் பொருட்களைப் பூசவோ, சாயமிடப் பட்ட ஆடைகளை அணியவோ கூடாது. ஆனால் நெய்வதற்கு முன் நூலில் சாயமிடப்பட்டு தயாரிக்கப்பட்ட ஆடைகளை அணியலாம். எங்களில் ஒருத்தி மாதவிடாயிலிருந்து நீங்கக் குளிக்கும்போது மணப் பொருளைப் பயன்படுத்துவது அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜனாஸாவைப் பின்தொடர்ந்து செல்வதைவிட்டும் தடுக்கப்பட்டுள்ளோம்" என உம்மு அதிய்யா(ரலி) அறிவித்தார்.


மாதவிடாய்

'எங்களில் ஒருவருக்கு ஓர் ஆடை மட்டுமே இருக்கும். அதில்தான் அவரின் மாதவிடாய் ஏற்படும். ஏதாவது இரத்தம் அந்த ஆடையில் பட்டால் தங்களின் எச்சிலைத் தொட்டு அந்த இடத்தில் வைத்துத் தங்களின் நகத்தால் சுரண்டி விடுவார்கள்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.


மாதவிடாய்

'இறைநம்பிக்கையாளர்களின் தாயான ஒருவர் உதிரப் போக்குள்ள நிலையிலும் இஃதிகாப் இருந்தார்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.


மாதவிடாய்

'நபி(ஸல்) அவர்களின் மனைவியரில் ஒருவர் மஞ்சள் நிற உதிரப் போக்கு இரத்தத்தைக் காணும்போது தமக்கடியில் ஒரு தட்டை வைத்து நபி(ஸல்) அவர்களுடன் இஃதிகாப் இருந்தவாறு தொழுதார்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.


;;