உளூச் செய்வது
நபி(ஸல்) அவர்கள் கஅபதுல்லாஹ்வில் தொழுது கொண்டிருந்தபோது அபூ ஜஹ்லும் அவனுடைய தோழர்களும் அங்கே அமர்ந்திருந்தனர். அவர்களில் சிலர் சிலரைப் பார்த்து 'இன்ன குடும்பத்தினரின் அறுக்கப்பட்ட ஒட்டகத்தின் கர்ப்பப்பையைக் கொண்டு வந்து முஹம்மத் ஸஜ்தாச் செய்யும்போது அவருடைய முதுகின் மீது போடுவதற்கு உங்களில் யார் தயார்?' என்று கேட்டனர். அப்போது அக்கூட்டத்தில் மிக இழிந்த ஒருவன் அதைக் கொண்டு வந்தான். நபி(ஸல்) அவர்கள் ஸஜ்தாச் செய்வதைப் பார்த்ததும் அவர்களின் இரண்டு புஜங்களுக்கிடையில் போட்டுவிட்டான். அதை நான் பார்த்துக் கொண்டுதானிருந்தேன். ஆனால், அதைத் தடுத்து நிறுத்த எனக்கு அன்று சக்தி இருக்கவில்லை. இந்நிகழ்ச்சியைப் பார்த்து அங்கு அமர்ந்திருந்த இறைமறுப்பாளர்கள் ஒருவரின் மீது ஒருவர் விழுந்து சிரித்தனர். நபி(ஸல்) அவர்களோ தலையை உயர்த்த முடியாதவர்களாக ஸஜ்தாவிலேயே இருந்தார்கள். அப்போது ஃபாத்திமா(ரலி) அங்கே வந்து, நபி(ஸல்) அவர்களின் முதுகின் மீது போடப்பட்டிருந்ததை எடுத்து அப்புறப்படுத்தினார்கள். பின்னர் நபி(ஸல்) அவர்கள் தங்களின் தலையை உயர்த்தி 'யா அல்லாஹ்! குறைஷிகளை நீ கவனித்துக் கொள்வாயாக' என்று மூன்று முறை கூறினார்கள். அவர்களுக்குக் கேடாக நபி(ஸல்) அவர்கள் பிரார்த்தித்தது குறைஷிகளுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியது. ஏனெனில், 'அந்நகரில் கேட்கப்படும் பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப்படும்' என அவர்களும் நம்பியிருநார்கள்.
பின்னர் நபி(ஸல்) அவர்கள் (அங்கிருந்தோரின்) பெயர்களைக் குறிப்பிட்டு, 'யா அல்லாஹ்! அபூ ஜஹ்ல், உத்பா இப்னு ரபீஆ, ஷைபா இப்னு ரபீஆ, வலீத் இப்னு உத்பா, உமய்யா இப்னு கலப், உக்பா இப்னு அபீ முயீத் ஆகியோரை நீ கவனித்துக் கொள்வாயாக!' என்று கூறினார்கள். ஏழாவது ஒரு நபரின் பெயரை நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். அதை நான் மறந்துவிட்டேன். என்னுடைய உயிர் எவன் கையிலிருக்கிறதோ அந்த அல்லாஹ்வின் மீது ஆணையாக நபி(ஸல) அவர்க்ள குறிப்பிட்ட அனைவரும் பத்ருப் போர்க்களத்தில் 'கலீப்' என்ற பாழ் கிணற்றில் செத்து வீழ்ந்து கிடந்ததை பார்த்தேன்" என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.