உளூச் செய்வது
ஒரு சூரிய கிரகணத்தன்று ஆயிஷா(ரலி) அவர்களிடம் நான் சென்றேன். ஆயிஷா(ரலி) தொழுது கொண்டிருந்தார்கள். மக்களும் தொழுதார்கள். நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம் வந்து, 'மக்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது?' என்று கேட்டேன். (தொழுகையில் நின்ற) ஆயிஷா(ரலி) வானை நோக்கித் தம் கையால் சுட்டிக் காட்டினார்கள். (தொழுகையில் பேசக் கூடாது என்பதை உணர்த்துவதற்காக) 'ஸுப்ஹானல்லாஹ்' என்றும் கூறினார்கள். அப்போது இது (ஏதாவது) அடையாளமா? என்று நான் கேட்டதற்கு ஆயிஷா(ரலி) 'ஆமாம் அப்படித்தான்' என்று தலையால் சைகை செய்தார்கள். உடனே நானும் (தொழுகையில்) நின்று கொண்டேன். (நீண்ட நேரம் நின்றதால்) நான் மயக்கமுற்றேன். (அதனால்) என் தலை மீது தண்ணீரை ஊற்றினேன். நபி(ஸல்) அவர்கள் தங்களின் உரையில் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, 'எனக்கு இது வரை காட்டப்படாத சுவர்க்கம் நரகம் உட்பட அத்தனைப் பொருட்களையும் இந்த இடத்திலேயே கண்டேன். மேலும் நிச்சயமாக நீங்கள் உங்கள் மண்ணறைகளில் மஸீஹுத் தஜ்ஜால் என்பவனின் குழப்பத்துக்கு நிகரான சோதனைக்கு உள்ளாக்கப்படுவீர்கள். (அப்போது மண்ணறையில் அடக்கம் செய்யப்பட்டவரிடம்) 'இந்த மனிதரைப் பற்றி உமக்கு என்ன தெரியும்?' என்று கேட்கப்படும். நம்பிக்கையாளர், எங்களிடம் நேர் வழியையும் தெளிவான சான்றுகளையும் கொண்டு வந்தார்கள். நாங்கள் ஏற்று நம்பிப் பின் பற்றினோம்' என்று கூறுவார். அப்போது 'நல்லவராய் நீர் உறங்குவீராக!' என்றும் 'நிச்சயமாகவே நீர் நபி(ஸல்) அவர்களைப் பற்றி இத்தகைய உறுதியான நம்பிக்கையுடையவராகவே இருந்தீர் என்றும் அறிவோம்' என (வானவர்களால்) கூறப்படும். நயவஞ்சகனோ 'எனக்கு எதுவும் தெரியாது. மக்கள் அவரைப் பற்றி ஏதோ சொல்லிக் கொண்டிருக்கக் கேட்டிருக்கிறேன். எனவே நானும் அது போன்று கூறினேன்' என்பான்' என எனக்கு அறிவிக்கப்பட்டது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என அஸ்மா(ரலி) அறிவித்தார்.
"அஸ்மா(ரலி) இந்த ஹதீஸை அறிவித்தபோது 'நிகரான' என்ற இடத்தில் 'அடுத்த படியான' என்று கூறினார்களா? 'நம்பிக்கையாளர்' என்ற இடத்தில் 'உறுதியிலிருப்பவர்' என்று கூறினார்களா? 'நயவஞ்சகன் என்ற இடத்தில் 'சந்தேகத்துடன் இருந்தவன்' என்று கூறினார்களா? என்பது எனக்கு நினைவில்லை என்று கூறினார்" என்று ஃபாத்திமா கூறினார்.