தொழுகை நேரங்கள்

ஸுஹ்ரி அறிவித்தார்.
உமர் இப்னு அப்தில அஸீஸ் ஒரு நாள் தொழுகையைத் தாமதப் படுத்திவிட்டார்கள். அப்போது உர்வா இப்னு ஸுபைர் அவரிடம் வந்து பின்வரும் நிகழ்ச்சியைக் கூறி (அவரின் செயலைக் கண்டிக்கலா)னார்கள். இராக்கில் இருக்கும்போது ஒரு நாள் முகீரா இப்னு ஷுஅபா(ரலி) தொழுகையைத் தாமதப் படுத்திவிட்டார்கள். அப்போது அபூ மஸ்வூத் அல் அன்ஸாரி(ரலி), அவரிடம் வந்து, 'முகீராவே! இது என்ன? ஜிப்ரீல்(அலை) அவர்கள் இறங்கி (ஃபஜ்ருத்) தொழ, நபி(ஸல்) அவர்களும் தொழுதார்கள். பின்பு (லுஹர்) தொழ, நபி(ஸல்) அவர்களும் தொழுதார்கள். பின்பு (அஸர்) தொழ நபி(ஸல்) அவர்களும் தொழுதார்கள். பின்பு (மக்ரிப்) தொழ நபி(ஸல்) அவர்களும் தொழுதார்கள். பின் இஷா தொழ, நபி(ஸல்) அவர்களும் தொழுதார்கள். பின்னர் நபியிடம் "இந்நேரங்களில் தொழ வேண்டும் என்றே உமக்குக் கட்டளையிடப் பட்டுள்ளது' என்றும் ஜிப்ரீல்(அலை) அவர்கள் கூறினார்கள். இதை நீர் அறியவில்லையா?' என்று கேட்டார்கள். (இந்த நிகழ்ச்சியை உர்வா இப்னு ஸுபைர், உமர் இப்னு அப்தில் அஸீஸ் அவர்களிடம் கூறிய போது) 'உர்வாவே நீர் கூறுவது என்னவென்பதைக் கவனித்துப் பாரும்! நபி(ஸல்) அவர்களுக்குத் தொழுகையின் நேரத்தை ஜிப்ரீல்(அலை) அவர்கள் நிர்ணயித்தார்களா?' என்று உமர் இப்னு அப்தில் அஸீஸ் கேட்டார்கள்.

தொழுகை

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் கஅபாவினருகில் தொழுது கொண்டிருந்தார்கள். அப்போது குரைஷிகள் தங்கள் சபையில் குழுமியிருந்தனர். 'இந்த முகஸ்துதி விரும்பியை நீங்கள் பார்க்கவில்லையா?' என்று அவர்களில் ஒருவன் கேட்டான். இன்னாருடைய (அறுக்கப்பட்ட) ஒட்டகத்தினருகில் சென்று அதன் சாணத்தையும் இரதத்தையும் மற்றும் கருப்பையையும் எடுத்து வந்து இவர் ஸஜ்தாச் செய்யும் வரை காத்திருந்து அதை இவரின் இரண்டு தோள் புஜத்திலும் போட்டுவிட உங்களில் யார் தயார்?' என்று அவன் கேட்டான்.
அவர்களில் மிக மோசமான ஒருவன் அதற்கு முன் வந்தான். நபி(ஸல்) அவர்கள் ஸஜ்தாச் செய்தபோது அதை அவர்களின் தோள் புஜத்தில் போட்டான். நபி(ஸல்) அவர்கள் ஸஜ்தாவிலேயே கிடந்தார்கள். ஒருவரின் மீது ஒருவர் சாய்ந்து விடும் அளவுக்குக் குரைஷிகள் சிரிக்கலானார்கள். சிறுமியாக இருந்த ஃபாதிமா(ரலி) அவர்களிடம் ஒருவர் சென்று இதைத் தெரிவித்ததும் அவர்கள் ஓடாடி வந்தார்கள். அவர்கள் வந்து அசுத்தங்களை அகற்றும் வரை ஸஜ்தாவிலேயே நபி(ஸல்) அவர்கள் கிடந்தார்கள். பின்பு குரைஷிகளை ஃபாதிமா(ரலி) ஏச ஆரம்பித்தார்கள்.
நபி(ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும் 'இறைவா! குரைஷிகளை நீ பார்த்துக் கொள்! இறைவா! குரைஷிகளை நீ பார்த்துக் கொள்! இறைவா! குரைஷிகளை நீ பார்த்துக் கொள்!" என்று கூறிவிட்டு 'அம்ர் இப்னு ஹிஷாம், உத்பா இப்னு ரபீஆ, ஷைபா இப்னு ரபீஆ, வலீத் இப்னு உக்பா, உமய்யா இப்னு கலப், உக்பா இப்னு அபீ முயீத், உமாரா இப்னு வலீத் ஆகியோரை இறைவா! நீ பார்த்துக் கொள்! என்று கூறினார்கள்.
அல்லாஹ்வின் மீது அணையாக பத்ருப் போரில் இவர்களெல்லாம் வேரற்ற மரங்கள் போல் மாண்டு மடிந்ததையும் பத்ருக்களத்திலுள்ள பாழடைந்த கிணற்றில் இவர்கள் போடப் பட்டதையும் பார்த்தேன்.
"பாழடைந்த கிணற்று வாசிகள் சாபத்திற்கு ஆளானார்கள்" என்றும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.


தொழுகை

ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நான் நபி(ஸல்) அவர்களுக்கும் கிப்லாவுக்கும் இடையே உறங்கிக் கொண்டிருப்பேன். அவர்கள் ஸஜ்தாச் செய்யும்போது (விரலால்) என் காலில் குத்துவார்கள். நான் கால்களை மடக்கிக் கொள்வேன். இவ்வாறிருக்க எங்களை நாய்களுக்கும் கழுதைகளுக்கும் சமமாக்கி விட்டீர்களே?


தொழுகை

மைமூனா(ரலி) அறிவித்தார்.
"நான் மாதவிடாய்க்காரியாக இருக்கும் சமயத்தில் நபி(ஸல்) அவர்களின் அருகே படுத்துறங்குவேன். அவர்கள் ஸஜ்தாச் செய்யும்போது அவர்களின் ஆடை என் மேல் படுவதுண்டு.


தொழுகை

மைமூனா(ரலி) அறிவித்தார்.
என்னுடைய விரிப்பு நபி(ஸல்) அவர்கள் தொழும் விரிப்புடன் பட்டுக் கொண்டிருக்கும். சில சமயம் நான் விரிப்பில் இருக்கும்போது அவர்களின் ஆடை என் மேல் படுவதுண்டு.


தொழுகை

அபூ கதாதா அல் அன்ஸாரி(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் தங்களின் மகள் ஸைனப் அவர்களின் குழந்தை 'உமாமா'வைத் (தோளில்) சுமந்த நிலையில் தொழுதிருக்கிறார்கள். ஸஜ்தாவுக்குச் செல்லும்போது இறக்கி விடுவார்கள். நிற்கும்போது தூக்கிக் கொள்வார்கள்.


தொழுகை

ஸுஹ்ரி அறிவித்தார்.
நான் என் தந்தையின் உடன் பிறந்தாரிடம் எவை (குறுக்கே சென்றால்) தொழுகை முறிக்கும் என்று கேட்டேன். அதற்கவர் 'எதுவும் முறிக்காது' என்று கூறிவிட்டு, 'நபி(ஸல்) அவர்களின் குடும்பத்திற்குரிய விரிப்பில், கிப்லாவுக்கும் நபி(ஸல்) அவர்களுக்கும்போது நபி(ஸல்) இரவில் தொழுவார்கள்' என்று ஆயிஷா(ரலி) கூறினார் என குறிப்பிட்டார்.


தொழுகை

மஸ்ரூக் அறிவித்தார்.
ஆயிஷா(ரலி) அவர்களிடம் தொழுகையை முறிக்கும் காரியங்கள் பற்றிப் பேசப்பட்டது. சிலர் நாயும் கழுதையும் பெண்ணும் (தொழுபவருக்குக் குறுக்கே சென்றால்) தொழுகையை முறிப்பர் என்று கூறினர். அதைக் கேட்ட ஆயிஷா(ரலி) 'எங்களை கழுதைகளுடனும் நாய்களுடனும் ஒப்பிட்டு விட்டீர்களே! நிச்சயமாக கிப்லாவுக்கும் நபி(ஸல்) அவர்களுக்குமிடையே கட்டிலில் நான் படுத்திருக்கும்போது நபி(ஸல்) அவர்கள் தொழுவார்கள். அப்போது எனக்கு ஏதேனும் தேவை ஏற்பட்டால் எழுந்து அமர்வது நபி(ஸல்) அவர்களுக்குத் தொல்லை தராமல் அவர்களின் கால் வழியாக நழுவி விடுவேன்' என்று கூறினார்கள்.


தொழுகை

ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நான் நபி(ஸல்) அவர்களுக்கு முன்னே உறங்கிக் கொண்டிருப்பேன். என் கால்களிரண்டும் அவர்களின் முகத்துக்கு நேராக இருக்கும். அவர்கள் ஸஜ்தா செய்யும்போது (விரலால் என் காலில்) குத்துவார்கள். நான் கால்களை மடக்கிக் கொள்வேன். அவர்கள் எழுந்ததும கால்களை நீட்டிக் கொள்வேன். அன்றைய காலத்தில் (எங்கள்) வீடுகளில் விளக்குகள் கிடையாது.


தொழுகை

ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் தொழுது கொண்டிருக்கும்போது நான் அவர்களின் விரிப்பில் அவர்களுக்குக் குறுக்கே உறங்கிக் கொண்டிருப்போன். அவர்கள் வித்ருத தொழ எண்ணும்போது என்னை எழச் செய்வார்கள். அதன்பின்னர் வித்ருத் தொழுவேன்.


தொழுகை

மஸ்ருக் அறிவித்தார்.
ஆயிஷா(ரலி) அவர்களிடம் தொழுகையை முறிக்கும் காரியங்கள் பற்றிப் பேசப்பட்டது. சிலர் நாயும் கழுதையும் பெண்ணும் (தொழுபவருக்குக் குறுக்கே சென்றால்) தொழுகையை முறிப்பர் என்று கூறினர். அதைக் கேட்ட ஆயிஷா(ரலி) 'எங்களை நாய்களோடு ஒப்பிட்டு விட்டீர்களே! நிச்சயமாக கிப்லாவுக்கும் நபி(ஸல்) அவர்களுக்குமிடையே கட்டிலில் நான் படுத்திருக்கும்போது நபி(ஸல்) அவர்கள் தொழுவார்கள். அப்போது எனக்கு ஏதேனும் தேவை ஏற்பட்டால் நபி(ஸல்) அவர்களை (நேருக்கு நேர்) எதிர் கொள்வதை விரும்பாமல் நழுவி விடுவேன்' என்றார்கள்.


தொழுகை

புஸ்ரு இப்னு ஸயீத் அறிவித்தார்.
தொழுபவரின் குறுக்கே செல்பவர் பற்றி நபி(ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றதை அறிந்து வருமாறு என்னை அபூ ஜுஹைம்(ரலி) அவர்களிடம் ஸைத் இப்னு காலித்(ரலி) அனுப்பு வைத்தார். 'தொழுபவருக்குக் குறுக்கே செல்பவர், அதனால் தமக்கு ஏற்படும் பாவத்தைப் பற்றி அறிந்திருந்தால் அவருக்குக் குறுக்கே செல்வதற்குப் பதில் நாற்பது நாள்கள் நின்று கொண்டிருப்பது அவருக்கு நல்லதாகத் தோன்றும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஜுஹைம்(ரலி) விடையளித்தார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபுன் னழ்ரு என்பவர் 'நாற்பது ஆண்டுகள்" என்று கூறினார்களா? அல்லது 'நாற்பது மாதங்கள்' அல்லது 'நாற்பது நாள்கள்' என்று கூறினார்களா? என்பது சரியாக தமக்கு நினைவில்லை என்கிறார்.


தொழுகை

அபூ ஸாலிஹ் அறிவித்தார்.
எவரும் குறுக்கே செல்லாமலிருக்கத் தடுப்பு வைத்துக் கொண்டு அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) ஒரு வெள்ளிக்கிழமையன்று தொழுது கொண்டிருந்தார்கள். பனூ அபூ முயீத் என்ற கூட்டடத்தைச் சேர்ந்த இளைஞரொருவர் குறுக்கே செல்ல முயன்றார். உடனே அபூ ஸயீத்(ரலி) அவரின் நெஞ்சில் கையால் தள்ளினார்கள். வேறு வழியேதும் உள்ளதா என்று அந்த இளைஞர் கவனித்தபோது, அபூ ஸயீத்(ரலி)யின் குறுக்கே செல்வதைத் தவிர அவருக்கு வேறு வழிதென்படவில்லை. எனவே மீண்டும் அவர்களுக்குக் குறுக்கே செல்ல முயன்றார். முன்பை விடக் கடுமையாக அபூ ஸயீத்(ரலி) அவரைத் தள்ளினார்கள். அதனால் அவருக்குப் பாதிப்பு ஏற்பட்டது. உடனே அவர் (அட்சித் தலைவராக இருந்த) மர்வானிடம் சென்று இது பற்றி முறையிட்டார். அவரைத் தொடர்ந்து அபூ ஸயீத்(ரலி) மர்வானிடம் சென்றார்கள். 'உமக்கும் உம் சகோதரர் மகனுக்குமிடையே என்ன பிரச்சினை?' என்று மர்வான் கேட்டார். 'உங்களில் எவரேனும் தமக்கு முன்னால் 'தடுப்பு' வைத்துத் தொழும்போது, எவரேனும் குறுக்கே செல்ல முயன்றால் அவரைத் தடுக்க வேண்டும்; அதை அவர் எதிர்த்தால் அவருடன் சண்டையிட வேண்டும். ஏனெனில் அவர் நிச்சயம் ஷைத்தானாவார்" என்று நபி(ஸல்) அவர்கள் கூற செவியுற்றுள்ளேன்' என அபூ ஸயீத்(ரலி) கூறினார்.


தொழுகை

ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
(பெண்கள், நாய்கள், கழுதைகள் தொழுபவருக்குக் குறுக்கே சென்றால் தொழுகை முறிந்து விடும் என்று கூறுவதன் மூலம்) எங்களை நாய்களுக்கும் கழுதைகளுக்கும் சமமாக்கி விட்டீர்களே! நான் கட்டிலில் படுத்திருக்கும்போது நபி(ஸல்) அவர்கள் கட்டிலுக்கு நேராக நின்று தொழுவார்கள். அவர்களுக்கு நேராக நின்று தொழுவார்கள். அவர்களுக்கு நேராகக் கால்களை நீட்டுவது எனக்குப் பிடிக்காததால் கட்டிலின் கால்கள் வழியாக நழுவிக் சென்று விடுவேன்.


தொழுகை

நாஃபிவு அறிவித்தார்.
'நபி(ஸல்) அவர்கள் தங்களின் ஒட்டகத்தைக் குறுக்கே நிறுத்தி அதை நோக்கித் தொழுவார்கள்' என்று இப்னு உமர்(ரலி) கூறினார். 'ஒட்டகம் மிரண்டு ஓடிவிட்டால்...?' என்று கேட்டேன். 'ஒட்டகத்தின் மீது அமைக்கப்படும் சாய்மானத்தை எடுத்து அதை நோக்கித் தொழுவார்கள்' என்று கூறியதுடன் அவரும் அவ்வாறே செய்வார்.


தொழுகை

நாஃபிவு அறிவித்தார்.
அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) கஅபாவுக்குள் நுழையும்போது கஅபாவின் உள்ளே நேராகச் சென்று வாசல் தம் முதுகுக்குப் பின் இருக்குமாறும் தமக்கும் எதிர் சுவற்றுக்குமிடையே மூன்று முழ இடைவெளி இருக்கும் விதமாகவும் நின்று தொழுவார்கள். அதாவது நபி(ஸல்) அவர்கள் எந்த இடத்தில் தொழுததாக பிலால்(ரலி) அறிவித்தார்களோ அந்த இடத்தைத் தேடித் தொழுவார்கள். 'கஅபாவின் எந்தப் புறத்தில் நின்று தொழுதாலும் அதில் தவறில்லை' என்றும் கூறுவார்கள்.


தொழுகை

இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களும் பிலால்(ரலி), உஸாமா இப்னு ஸைத்(ரலி) உஸ்மான்பின் தல்ஹா(ரலி) ஆகியோரும் கஅபாவுக்குள் நுழைந்து கதவை அடைத்துக் கொண்டு (நீண்ட நேரம்) உள்ளே இருந்தார்கள். வெளியே வந்த பிலால்(ரலி) அவர்களிடம் 'நபி9ஸல்) அவர்கள் உள்ளே என்ன செய்தார்கள்?' என்று கேட்டேன். 'ஒரு தூண் தம் வலப்பக்கமும் மற்றொரு தூண் தம் இடப்பக்கமும் மூன்று தூண்கள் பின்புறமும் இருக்குமாறு தொழுதார்கள்' என்று பிலால்(ரலி) விடையளித்தார்கள். அன்றைய தினம் கஅபாவுக்குள் ஆறு தூண்கள் இருந்தன. மற்றோர் அறிவிப்பில் 'வலப்பக்கம் இரண்டு தூண்கள்' என்று கூறப்படுகிறது.


;;