தொழுகை

அபூ ஸாலிஹ் அறிவித்தார்.
எவரும் குறுக்கே செல்லாமலிருக்கத் தடுப்பு வைத்துக் கொண்டு அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) ஒரு வெள்ளிக்கிழமையன்று தொழுது கொண்டிருந்தார்கள். பனூ அபூ முயீத் என்ற கூட்டடத்தைச் சேர்ந்த இளைஞரொருவர் குறுக்கே செல்ல முயன்றார். உடனே அபூ ஸயீத்(ரலி) அவரின் நெஞ்சில் கையால் தள்ளினார்கள். வேறு வழியேதும் உள்ளதா என்று அந்த இளைஞர் கவனித்தபோது, அபூ ஸயீத்(ரலி)யின் குறுக்கே செல்வதைத் தவிர அவருக்கு வேறு வழிதென்படவில்லை. எனவே மீண்டும் அவர்களுக்குக் குறுக்கே செல்ல முயன்றார். முன்பை விடக் கடுமையாக அபூ ஸயீத்(ரலி) அவரைத் தள்ளினார்கள். அதனால் அவருக்குப் பாதிப்பு ஏற்பட்டது. உடனே அவர் (அட்சித் தலைவராக இருந்த) மர்வானிடம் சென்று இது பற்றி முறையிட்டார். அவரைத் தொடர்ந்து அபூ ஸயீத்(ரலி) மர்வானிடம் சென்றார்கள். 'உமக்கும் உம் சகோதரர் மகனுக்குமிடையே என்ன பிரச்சினை?' என்று மர்வான் கேட்டார். 'உங்களில் எவரேனும் தமக்கு முன்னால் 'தடுப்பு' வைத்துத் தொழும்போது, எவரேனும் குறுக்கே செல்ல முயன்றால் அவரைத் தடுக்க வேண்டும்; அதை அவர் எதிர்த்தால் அவருடன் சண்டையிட வேண்டும். ஏனெனில் அவர் நிச்சயம் ஷைத்தானாவார்" என்று நபி(ஸல்) அவர்கள் கூற செவியுற்றுள்ளேன்' என அபூ ஸயீத்(ரலி) கூறினார்.