தொழுகை

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் கஅபாவினருகில் தொழுது கொண்டிருந்தார்கள். அப்போது குரைஷிகள் தங்கள் சபையில் குழுமியிருந்தனர். 'இந்த முகஸ்துதி விரும்பியை நீங்கள் பார்க்கவில்லையா?' என்று அவர்களில் ஒருவன் கேட்டான். இன்னாருடைய (அறுக்கப்பட்ட) ஒட்டகத்தினருகில் சென்று அதன் சாணத்தையும் இரதத்தையும் மற்றும் கருப்பையையும் எடுத்து வந்து இவர் ஸஜ்தாச் செய்யும் வரை காத்திருந்து அதை இவரின் இரண்டு தோள் புஜத்திலும் போட்டுவிட உங்களில் யார் தயார்?' என்று அவன் கேட்டான்.
அவர்களில் மிக மோசமான ஒருவன் அதற்கு முன் வந்தான். நபி(ஸல்) அவர்கள் ஸஜ்தாச் செய்தபோது அதை அவர்களின் தோள் புஜத்தில் போட்டான். நபி(ஸல்) அவர்கள் ஸஜ்தாவிலேயே கிடந்தார்கள். ஒருவரின் மீது ஒருவர் சாய்ந்து விடும் அளவுக்குக் குரைஷிகள் சிரிக்கலானார்கள். சிறுமியாக இருந்த ஃபாதிமா(ரலி) அவர்களிடம் ஒருவர் சென்று இதைத் தெரிவித்ததும் அவர்கள் ஓடாடி வந்தார்கள். அவர்கள் வந்து அசுத்தங்களை அகற்றும் வரை ஸஜ்தாவிலேயே நபி(ஸல்) அவர்கள் கிடந்தார்கள். பின்பு குரைஷிகளை ஃபாதிமா(ரலி) ஏச ஆரம்பித்தார்கள்.
நபி(ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும் 'இறைவா! குரைஷிகளை நீ பார்த்துக் கொள்! இறைவா! குரைஷிகளை நீ பார்த்துக் கொள்! இறைவா! குரைஷிகளை நீ பார்த்துக் கொள்!" என்று கூறிவிட்டு 'அம்ர் இப்னு ஹிஷாம், உத்பா இப்னு ரபீஆ, ஷைபா இப்னு ரபீஆ, வலீத் இப்னு உக்பா, உமய்யா இப்னு கலப், உக்பா இப்னு அபீ முயீத், உமாரா இப்னு வலீத் ஆகியோரை இறைவா! நீ பார்த்துக் கொள்! என்று கூறினார்கள்.
அல்லாஹ்வின் மீது அணையாக பத்ருப் போரில் இவர்களெல்லாம் வேரற்ற மரங்கள் போல் மாண்டு மடிந்ததையும் பத்ருக்களத்திலுள்ள பாழடைந்த கிணற்றில் இவர்கள் போடப் பட்டதையும் பார்த்தேன்.
"பாழடைந்த கிணற்று வாசிகள் சாபத்திற்கு ஆளானார்கள்" என்றும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.