தொழுகை

'நபி(ஸல்) அவர்களுக்குப் பட்டினாலான மேல் அங்கி ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அதை அவர்கள் அணிந்து தொழுதார்கள். தொழுகையை முடித்த பின்னர் அந்த அங்கியில் வெறுப்புற்றவர்களைப் போன்று வேகமாக அதைக் கழற்றி எறிந்துவிட்டுப் 'பயபக்தியுடையவர்களுக்கு இந்த ஆடை உகந்ததன்று' என்று கூறினார்கள்" என உக்பா இப்னு ஆமிர்(ரலி) கூறினார்.


தொழுகை

'ஆயிஷா(ரலி) அவர்களிடம் (உருவப் படங்கள் நிறைந்த) ஒரு திரை இருந்தது. அதனால் தங்களின் வீட்டின் ஓர் ஓரத்தை மறைத்திருந்தார்கள். இதைக் கண்ட நபி(ஸல்) ஆயிஷா(ரலி) அவர்களிடம் 'உன்னுடைய இந்தத் திரையை நம்மைவிட்டும் அகற்றி விடு. அதிலுள்ள படங்கள் நான் தொழுது கொண்டிருக்கும்போது (என் எண்ணத்தில்) குறுக்கிடுகின்றன' என்று கூறினார்கள்" என அனஸ்(ரலி) அறிவித்தார்.


தொழுகை

நபி(ஸல்) அவர்கள் பல வண்ணங்கள் உள்ள ஓர் ஆடையை அணிந்து தொழுதபோது அந்த வண்ணங்களின் பக்கம் பார்வையைச் செலுத்தினார்கள். அவர்கள் தொழுகையை முடித்ததும், 'என்னுடைய இந்த ஆடையை எடுத்துச் சென்று அபூ ஜஹ்மிடம் கொடுத்துவிட்டு, அவரின் (வண்ணங்கள் இல்லாத) ஆடையைக் கொண்டு வாருங்கள். இந்த ஆடை சிறிது நேரத்திற்கு முன்னர் என்னுடைய தொழுகையைவிட்டு என் கவனத்தைத் திருப்பிவிட்டது' என்று கூறினார்கள்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
மற்றோர் அறிவிப்பின்படி, 'நான் தொழுகையில் நிற்கும்போது அந்த ஆடையின் வண்ணங்களைப் பார்ப்பதால் அது என்னைக் குழப்பி விடுமோ என அஞ்சினேன்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று உள்ளது.


தொழுகை

'நபி(ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுகையைத் தொழுவார்கள். இறைநம்பிக்கையுள்ள பெண்கள் ஆடைகளால் தங்களின் உடல் முழுவதையும் சுற்றி மறைத்தவர்களாக அவர்களுடன் தொழுவார்கள். பின்னர் தங்களின் வீடுகளுக்குச் செல்வார்கள். அவர்கள் யார் யார் என்பதை (வெளிச்சமின்மையால்) யாரும் அறியமாட்டார்கள்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.


தொழுகை

நபி(ஸல்) அவர்கள் கைபர் போருக்கு ஆயத்தமானார்கள். அங்கே நாங்கள் அதிகாலைத் தொழுகையை அதிகாலையின் வெண்மை தெரியும் முன்னர் தொழுதோம். பின்னர் நபி(ஸல்) அவர்கள் தங்களின் வாகனத்தில் ஏறினார்கள். அபூ தல்ஹா(ரலி) அவர்களும் ஏறினார். அவர்களுக்குப் பின்னால் நான் ஏறி அமர்ந்தேன். நபி(ஸல்) அவர்கள் கைபர் கணவாயினுள் சென்றார்கள். என்னுடைய மூட்டு நபி(ஸல்) அவர்களின் தொடையைத் தொட்டது. பின்னர் நபி(ஸல்) அவர்கள் தங்களின் தொடையிலிருந்த வேஷ்டியை நீக்கினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களின் தொடையின் வெண்மையை பார்த்தேன். நபி(ஸல்) அவர்கள் ஊருக்குள்ளே நுழைந்தபோது 'அல்லாஹ் பெரியவன்! கைபர் வீழ்ந்துவிட்டது! நிச்சயமாக நாம் ஒரு (எதிரிக்) கூட்டத்திடம் பகைமையுடன் இறங்கினால் எச்சரிக்கப்பட்ட அம்மக்களின் காலை நேரம் மோசமானதாம்விடும்' என்று மும்முறை கூறினார்கள். அவ்வூர் மக்கள் தங்களின் வேலைகளுக்காக வெளியே வந்தபோது நபி(ஸல்) அவர்களைப் பார்த்ததும், 'முஹம்மதும் அவரின் பட்டாளமும் வந்துள்ளார்கள்' என்று (பதட்டமாகக்) கூறினார்கள்.
நாங்கள் கைபரைப் பலவந்தமாகக் கைப்பற்றினோம். போர்க் கைதிகளெல்லாம் ஒன்று சேர்க்கப்பட்டபோது 'திஹ்யா' என்ற நபித்தோழர் வந்து 'இறைத்தூதா அவர்களே! கைதிகளிலுள்ள ஒரு பெண்ணை எனக்குக் கொடுங்கள்' என்று கேட்டார். 'நீர் போய் ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்துக் கொள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அவர் சென்று ஸஃபிய்யா பின்த் ஹுயய் என்ற பெண்ணைத் தேர்ந்தெடுத்தார். அப்போது ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! 'குறைளா' மற்றும் 'நளீர்' என்ற குலத்தின் தலைவி ஸஃபிய்யா பின்த் ஹுயய் என்ற பெண்ணையா திஹ்யாவிற்குக் கொடுத்துள்ளீர்கள். அந்தப் பெண் தங்களுக்கே தகுதியானவள்' என்றார். அப்போது 'அப்பெண்ணையும் திஹ்யாவையும் அழைத்து வாரும்' என்று நபி(ஸல்) அவர்கள் அவரிடம் கூறினார்கள். அப்பெண் அழைத்து வரப்பட்டார். அப்பெண் வந்ததும் 'நீ கைதிகளிலிருந்து வேறொரு பெண்ணைத் தேர்ந்தெடுத்துக் கொள்' என்ற திஹ்யாவிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நபி(ஸல்) அப்பெண்ணை விடுதலை செய்து பின்னர் அவரைத் திருமணம் செய்தார்கள்.
இந்த ஹதீஸை அறிவிக்கிற அனஸ்(ரலி) அவர்களிடம் ஸாபித் என்ற தோழர், 'அபூ ஹம்சாவே நபி(ஸல்) அப்பெண்ணுக்கு எவ்வளவு மஹர் கொடுத்தார்கள்?' என்று கேட்டதற்கு 'அவரையே மஹராகக் கொடுத்தார்கள்; அதாவது அவரை விடுதலை செய்து பின்னர் மணந்தார்கள்' எனக் கூறினார்.
நாங்கள் (கைபரிலிருந்து) திரும்பி வரும் வழியில் 'ஸஃபிய்யா' அவர்களை உம்மு ஸுலைம்(ரலி) மணப்பெண்ணாக ஆயத்தப்படுத்தி நபி(ஸல்) அவர்களிடம் இரவில் ஒப்படைத்தார். மறுநாள் காலை நபி(ஸல்) அவர்கள் புது மாப்பிள்ளையாகத் தோன்றினார்கள். அப்போது நபி(ஸல்) ஒரு விரிப்பை விரித்து 'உங்களில் யாரிடமாவது ஏதாவது (சாப்பிடுகிற) பொருள்கள் இருந்தால் கொண்டு வந்து இதில் போடுங்கள்' என்று கூறினார்கள். உடனே ஒருவர் பேரீச்சம் பழத்தைக் கொண்டு வந்தார். வேறு ஒருவர் நெய்யைக் கொண்டு வந்தார். ஒருவர் மாவைக் கொண்டு வந்தார். (இப்படி எல்லோரும் கொண்டுவந்த) அவற்றையெல்லாம் சேர்த்து ஒன்றாகக் கலந்தார்கள். அது நபி(ஸல்) அவர்களின் 'வலீமா' எனும் மணவிருந்தாக அமைந்தது" என அனஸ்(ரலி) அறிவித்தார்.
"அவளுடைய உடல் முழுவதையும் மறைக்கும் விதத்தில் ஒரே ஆடையை அணிந்தாலும் அது அவளுக்குப் போதுமானதாகும்" என இக்ரிமா கூறினார்.


தொழுகை

'ஜாபிர்(ரலி) ஒரே வேஷ்டியை சுற்றிக் கொண்டு தொழுதார். அவரின் மேலாடை தனியாக வைக்கப்பட்டிருந்தது. தொழுது முடித்ததும் 'அப்துல்லாஹ்வின் தந்தையே! உங்களுடைய மேலாடையைத் தனியே வைத்துவிட்டுத் தொழுகிறீர்களா?' என்று நாங்கள் கேட்டதற்கு, 'ஆம்! உங்களைப் போன்ற மடையர்கள் என்னைப் பார்க்க வேண்டுமென்பதை விரும்பினேன். நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு தொழுததை நான் பார்த்திருக்கிறேன் என்றார்கள்" என முஹம்மத் இப்னு அல் முன்கதிர் அறிவித்தார்.


தொழுகை

ஹஜ்ஜத்துல்வதா'விற்கு முந்திய ஆண்டு அபூ பக்ர்(ரலி) (அவர்களின் தலைமையில் நான் ஹஜ்ஜுக்குச் சென்றபோது) என்னை அறிவிப்புச் செய்பவர்களுடன் துல்ஹஜ் மாதம் பத்தாம் நாள் அனுப்பி வைத்தார்கள். நாங்கள் மினாவில் நின்று, 'அறிந்து கொள்ளுங்கள்! இந்த ஆண்டிற்குப் பிறகு எந்த முஷ்ரிக்கும் ஹஜ் செய்யக் கூடாது. நிர்வாணமாக யாரும் கஅபாவை வலம் வரக்கூடாது' என்று அறிவித்தோம்.
பின்னர் நபி(ஸல்) அவர்கள் அலீ(ரலி) அவர்களை அனுப்பி, திருக்குர்ஆனின் 9-வது அத்தியாயத்தில் ஒப்பந்த முறிவு பற்றிக் கூறப்படும் (முதல் இருபது வசனங்கள்) விஷயத்தை அறிவிக்குமாறு கட்டளையிட்டார்கள்.
எங்களுடன் அலீ(ரலி) அவர்களும் துல்ஹஜ் மாதம் பத்தாவது நாள் மினாவில் நின்று 'இந்த ஆண்டிற்குப் பிறகு இணைவைப்பாளர் எவரும் ஹஜ் செய்யக்கூடாது; கஅபாவை எவரும் நிர்வாணமாக வலம் வரக் கூடாது' என்று அறிவித்தார்கள்" அபூ ஹுரைரா(ரலி) கூறினார்.


தொழுகை

முனாபதா' 'முலாமஸா' எனும் இருவகை வியாபாரங்களையும், கையை வெளியே எடுக்க இயலாத அளவுக்கு இறுக்கமாக ஆடையைச் சுற்றிக் கொள்வதையும், ஒரே ஆடையை அணிந்திருக்கும்போது, இரண்டு முட்டுக் கால்களையும் நாட்டி வைத்து உட்காருவதையும் நபி(ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்" என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
(குறிப்பு: 'முனாபதா' குறிப்பிட்ட ஒரு பொருளை எடுத்து எறியும்போது அது எந்தப் பொருளின் மீது படுகிறதோ அந்தப் பொருளை இவ்வளவு விலைக்குத் தருகிறேன் என்று கூறி விற்பதைக் குறிக்கும்.
'முலாமஸா' குவிக்கப்பட்ட பொருட்களைப் பிரித்துப் பார்க்கவிடாமல் அதைத் தொட்டுப் பார்க்க மட்டுமே அனுமதித்து விற்பதைக் குறிக்கும்.)


தொழுகை

'கையை வெளியே எடுக்க இயலாத அளவுக்கு இறுககமாக ஆடையைச் சுற்றிக் கொள்வதையும் ஒரே ஆடையை அணிந்திருக்கும்போது, மர்மஸ்தானம் தெரியும் படியாக இரண்டு முழங்கால்களையும் நாட்டி வைத்து உட்காருவதையும் நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்" என அபூ ஸயீத் அல் குத்ரி(ரலி) அறிவித்தார்.


தொழுகை

'ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிய விரும்புகிறவர் எந்த ஆடையை அணிய வேண்டும் என்று ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டதற்கு 'சட்டை, முழுக்கால் சட்டை, தொப்பி, குங்குமச் சாயம் பட்ட ஆடை, சிவப்புச் சாயமிடப்பட்ட ஆடை ஆகியவற்றை அணியக் கூடாது. யாருக்காவது செருப்பு கிடைக்காமலிருந்தால் தோலினாலான காலுறை அணிந்து கொள்ளலாம். அந்தத் தோலுறையில் கரண்டைக்குக் கீழே இருக்கும் வகையில் மேல் பாகத்தை வெட்டி விட வேண்டும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.


;;