தொழுகை

உபைதுல்லாஹ் அல் கவ்லானி அறிவித்தார்.
உஸ்மான்(ரலி) பள்ளியை விரிவுபடுத்தியபோது 'நீங்கள் மிகவும் விரிவு படுத்தி விட்டீர்கள்' என்று மக்கள் அவர்களிடம் ஆட்சேபனை செய்தார்கள். அதற்கு 'அல்லாஹ்வின் திருமுகத்தை நாடி, பள்ளிவாசல் ஒன்றைக் கட்டியவர் அது போன்ற ஒன்றைச் சுவர்க்கத்தில் அவருக்காக அல்லாஹ் கூறினான்" என்று நபி(ஸல்) கூற செவியுற்றுள்ளேன்' என உஸ்மான்(ரலி) கூறினார்.


தொழுகை

ஜாபிர்(ரலி) அறிவித்தார்.
'இறைத்தூதர் அவர்களே! தாங்கள் உட்கார்ந்து கொள்வதற்காக ஒரு மேடையை உங்களுக்குச் செய்து தரட்டுமா? என்னிடம் தச்சு வேலை தெரிந்த ஊழியர் ஒருவர் இருக்கிறார்.' என்று ஒரு பெண்மணி நபி(ஸல்) அவர்களிடம் கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள் 'நீ விரும்பினால் செய்து தா!' என்றனர். அப்பெண் மேடை செய்து கொடுத்தார்.


தொழுகை

ஸஹ்ல்(ரலி) அறிவித்தார்.
"நான் உட்கார்ந்து கொள்வதற்காக எனக்கு மரத்தினால் மேடையைச் செய்து தருமாறு உன்னுடைய ஊழியரிடம் கூறு" என்று ஒரு பெண்ணுக்கு நபி(ஸல்) அவர்கள் சொல்லியனுப்பினார்கள்.


தொழுகை

இக்ரிமா அறிவித்தார்.
இப்னு அப்பாஸ்(ரலி) என்னிடமும் அவர் மகன் அலியிடமும் 'நீங்களிருவரும் அபூ ஸயீத்(ரலி) அவர்களிடம் சென்று அவர் அறிவிக்கும் செய்தியைச் செவிமடுத்து வாருங்கள்!' எனக் கூறினார்கள். நாங்கள் சென்றோம். அபூ ஸயீத்(ரலி) தங்களின் தோட்டத்தைச் சரி செய்து கொண்டிருந்தார்கள். (எங்களைக் கண்டதும் தங்களின் மேலாடையைப் போர்த்திக் கொண்டு (பல செய்திகளை) எங்களுக்குக் கூறலானார்கள். பள்ளிவாசல் கட்டப்பட்ட செய்தியைக் கூறும்போது 'நாங்கள் ஒவ்வொரு செங்கல்லாகச் சுமப்பவர்களாக இருந்தோம். (ஆனால்) அம்மார்(ரலி) இரண்டிரண்டு செங்கற்களாகச் சுமக்கலானார். அதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் அவரின் மேனியில் படிந்த மண்ணைத் தட்டிவிட்டு 'பாவம் அம்மார்! இவரை அக்கிரமக்காரக் கூட்டம் கொலை செய்யும்! இவர் அவர்களைச் சுவர்க்கத்திற்கு அழைப்பார். அவர்களோ இவரை நரகத்திற்கு அழைப்பார்கள்." என்று கூறினார்கள். அதற்கு அம்மார்(ரலி) 'அந்தக் குழப்பங்களைவிட்டும் அல்லாஹ்விடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்' என்று கூறினார்கள்' என அபூ ஸயீத்(ரலி) குறிப்பிட்டார்கள்.


தொழுகை

அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களின் காலத்தில் 'மஸ்ஜிதுன்னபி'யுடைய சுவர்கள் செங்கற்களாலும் அதன் கூரை பேரீச்ச மர ஓலையாலும் தூண்கள் பேரீச்ச மரங்களாலும் அமைந்திருந்தன. அபூ பக்ரு(ரலி) (தம் ஆட்சியின் போது) அதில் எந்த விரிவாக்கமும் செய்யவில்லை என்றாலும் உமர்(ரலி) அதை விரிவுபடுததினார்கள். நபி(ஸல்) காலத்தில் இருந்தது போன்றே செங்கல், பேரீச்ச மர ஓலை, பேரீச்ச மரம் ஆகியவற்றைக் கொண்டே விரிவுபடுத்தினார்கள்.
பின்னர் உஸ்மான்(ரலி) அந்தப் பள்ளியில் அனேக விஷயங்களை அதிகமாக்கினார்கள். சித்திர வேலைகள் செய்யப்பட்ட கற்களாலும் சுண்ணாம்புக் காரையாலும் அதன் சுவர்களைக் கட்டினார்கள். சித்திர வேலைகள் செய்யப்பட்ட கற்களால் அதன் தூண்களை எழுப்பினார்கள். அதன் கூரையைத் தேக்கு மரத்தால் அமைத்தார்கள்.


தொழுகை

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
"ஒருவர் எந்த இடத்தில் தொழுதாரோ அந்த இடத்திலேயே அமர்ந்திருக்கும்போது அவருக்காக வானவர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள். ஆனால் உளூ முறிந்து விடாமலிருக்க வேண்டும். 'இறைவா! இவரை மன்னித்து விடு! இறைவா! இவருக்கு அருள் புரி!" என்று கூறுகிறார்கள்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.


தொழுகை

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
'உங்களில் எவரும் பள்ளிவாசலுக்குச் சென்றால் உட்காருவதற்கு முன்பு இரண்டு ரக்அத்கள் தொழட்டும்!"
என அபூ கதாதா(ரலி) அறிவித்தார்.


தொழுகை

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இருக்கும்போது நான் அவர்களிடம் வந்தேன். 'இரண்டு ரக்அத் தொழுவீராக!" என்று கூறினார்கள். எனக்கு நபி(ஸல்) தர வேண்டிய கடன் ஒன்றும் இருந்தது. அந்தக் கடனை திருப்பி தந்ததுடன் மேலதிகமாகவும் தந்தார்கள்.
(இந்த ஹதீஸின் மூன்றாவது அறிவிப்பாளரான) மிஸ்அர் 'முற்பகல் நேரத்தில் வந்தேன்' என்று ஜாபிர்(ரலி) கூறினார் எனக் குறிப்பிடுகிறார்.


தொழுகை

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
திண்ணைத் தோழர்களில் எழுபது நபர்களை பார்த்திருக்கிறேன். அவர்களில் எவருக்குமே மேலாடை இருந்ததில்லை. அவர்களில் சிலரிடம் வேட்டி மட்டும் இருந்தது. (வேறுசிலரிடம்) தங்கள் கழுத்திலிருந்து கட்டிக் கொள்ளத்தக்க ஒரு போர்வை இருந்தது. (அவ்வாறு கட்டிக் கொள்ளும்போது) சிலரின் போர்வை கரண்டைக்கால் வரையும் இருக்கும். வேறு சிலரின் போர்வை கால்களில் பாதியளவு வரை இருக்கும். தங்களின் மறைவிடங்களைப் பிறர் பார்த்து விடலாகாது என்பதற்காகத் தம் கைகளால் துணியைச் சேர்த்துப் பிடித்துக் கொள்வார்கள்.


தொழுகை

அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) கூறினார்.
நபி(ஸல்) அவர்கள் ஃபாதிமாவின் இல்லத்திற்கு வந்தபோது அலீ(ரலி)யைக் காணவில்லைஇம 'உன் பெரிய தந்தையின் மகன் எங்கே?' என்று ஃபாதிமா(ரலி) விடம் கேட்டார்கள். 'எனக்கும் அவருக்கும் சிறிய மனஸ்தாபம் இருந்தது; கோபித்துக் கொண்டு சென்றார்; என்னிடம் தங்கவில்லை' என்று ஃபாதிமா(ரலி) கூறினாhக்ள். நபி(ஸல்) அவர்கள் 'அவர் எங்கே என்று பார்த்து வாரும்!" என்று ஒருவரை அனுப்பினார்கள். அவர் வந்து, 'அலி பள்ளிவாசலில் உறங்கிக் கொண்டிருக்கிறார்' என்றார். நபி(ஸல்) அவர்கள் பள்ளிக்கு வந்தபோது அலீ(ரலி) தங்களின் மேலாடை விலகியவராகவும் மேனியில் மண் படிந்தவராகவும் ஒரு பக்கமாகப் படுத்திருந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் அவரின் மேனியில் படிந்திருந்த மண்ணைத் தட்டிவிட்டு 'மண்ணின் தந்தையே எழும்! மண்ணின் தந்தையே எழும்!" எனக் கூறினார்கள்.


;;