தொழுகை

'உம்மு ஸலமா(ரலி) அவர்களின் வீட்டில் நபி(ஸல்) அவர்கள் ஒரே ஆடையை அணிந்து, அதன் இரண்டு ஓரத்தையும் இரண்டு தோள்களின் மீது மாற்றிப் போட்டு தொழுதார்கள்" என உமர் இப்னு அபீ ஸலமா(ரலி) அறிவித்தார்.


தொழுகை

'நபி(ஸல்) அவர்கள் ஒரே ஆடையை அணிந்து, அதன் இரண்டு ஓரத்தையும் இரண்டு தோள்களின் மீது மாற்றிப் போட்டு தொழுதார்கள்" என உமர் இப்னு அபீ ஸலமா(ரலி) அறிவித்தார்.


தொழுகை.

'ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) ஒரே ஆடையை அணிந்தவர்களாகத் தொழுதுவிட்டு 'நபி(ஸல்) அவர்கள் ஒரே ஆடையை அணிந்து தொழுததைக் கண்டேன்' என்று கூறினார்கள்" என முஹம்மத் இப்னு அல் முன்கதிர் என்பவர் அறிவித்தார்.


தொழுகை

'ஜாபிர்(ரலி) ஒரே வேஷ்டியை அணிந்து கொண்டு அதைத் தங்களின் பிடரியில் முடிச்சுப் போட்டவர்களாகத் தொழுதார்கள். அவர்களின் இதர ஆடைகளோ துணி தொங்க விடப்படும் கம்பில் தொங்கிக் கொண்டிருந்தன. இவர்களிடம் ஒருவர், 'ஒரே வேஷ்டியிலா தொழுகிறீர்கள்?' என்று கேட்டதற்கு 'உன்னைப் போன்ற மடையவர்கள் என்னைப் பார்க்க வேண்டுமென்பதற்காகவே இவ்வாறு செய்தேன். நபி(ஸல்) அவர்களின் காலத்தில் எங்களில் யாருக்குத்தான் இரண்டு ஆடைகள் இருந்தன?' என்று ஜாபிர்(ரலி) கேட்டார்" என முஹம்மத் இப்னு அல் முன் கதிர் அறிவித்தார்.


தொழுகை

இரண்டு பெருநாள்களிலும் மாதவிடாய்ப் பெண்களையும் வீட்டில் இருக்கிற கன்னிப் பெண்களையும் வெளியேற்றி (தொழும் திடலுக்குப்) அழைத்துவருமாறும், அப்பெண்கள் வீட்டிலிருந்து வெளியாகி முஸ்லிம்கள் தொழுகிற இடத்திற்குச் சென்று அவர்களின் பிரச்சாரத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்றும், தொழும் இடத்தைவிட்டு மாதவிடாய்ப் பெண்கள் ஒதுங்கியிருக்க வேண்டும்' என்றும் கட்டளையிடப்பட்டோம்.
நபி(ஸல்) அவர்களின் இந்தக் கட்டளையைக் கேட்டுக் கொண்டிருந்த பெண்களில் ஒருவர் 'இறைத்தூதர் அவர்களே! எங்களில் எவருக்கேனும் அணிந்து கொள்வதற்கு மேலாடை இல்லையெனில் என்ன செய்வது?' எனக் கேட்டதற்கு, 'அவளுடைய தோழி தன்னுடைய (உபரியான) மேலாடையை இவளுக்கு அணியக் கொடுக்கட்டும்' என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்" என உம்மு அதிய்யா(ரலி) அறிவித்தார்.


தொழுகை

'அல்லாஹ் தொழுகையைக் கடமையாக்கியபோது ஊரிலிருந்தாலும் பயணத்திலிருந்தாலும் இரண்டிரண்டு ரக்அத்துகளாகக் கடமையாக்கினான், பயணத்தில் தொழுகை இரண்டு ரகஅத்தாகவே ஆக்கப்பட்டுப் பயணம் அல்லாத போதுள்ள தொழுகை அதிகரிக்கப்பட்டது" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.


தொழுகை

நான் மக்காவில் இருந்தபோது என்னுடைய வீட்டு முகடு திறக்கப்பட்டது. (அது வழியாக) ஜிப்ரீல் (அலை) இறங்கி என்னுடைய நெஞ்சைப் பிளந்தார்கள். அதை ஸம்ஸம் தண்ணீரால் கழுவினார்கள். பின்னர் ஈமான் எனும் இறைநம்பிக்கை மற்றும் ஞானத்தினால் நிரப்பப்பட்ட ஒரு தங்கத் தட்டைக் கொண்டு வந்து என்னுடைய நெஞ்சில் கொட்டிவிட்டு, அதை மூடி கையைப் பிடித்து முதல் வானத்திற்கு என்னை ஏற்றிச் சென்றார்கள். முதல் வானத்தை அடைந்ததும் அந்த வானத்தின் காவலரிடம் 'திற' என்றார்கள். அவ்வானவர், 'யார் அவர்?' என்று வினவியதற்கு 'நானே ஜிப்ரீல்' என்று பதில் கூறினார். அதற்கு அவ்வானவர், 'உம்முடன் எவரேனும் இருக்கிறார்களா?' எனக் கேட்டார். ஜிப்ரீல் ஆம்! என்னுடன் முஹம்மத் இருக்கிறார்கள்' என்று கூறினார்கள். அதற்கு வானவர் 'அவர் அழைக்கப்பட்டிருக்கிறாரா?' எனக் கேட்டார். ஜிப்ரீல் 'ஆம்' என்றார்கள்.
வானவர், முதல் வானத்தைத் திறந்ததும் நாங்கள் அவ்வானத்தில் ஏறினோம். அப்போது அங்கு ஒருவர் அமர்ந்திருந்தார். அவரின் வலப்பக்கம் சில மனிதர்களும் இடது மக்களும் சில மனிதர்களும் காணப்பட்டார்கள். அவர் தங்களின் வலப்பக்கமுள்ள மனிதர்களைப் பார்த்தால் சிரிக்கிறார். தங்களின் இடப்பக்கமுள்ளவர்களைப் பார்த்தால் அழுகிறார்.
இந்நிலையிலுள்ள அவர் 'நல்ல நபியே! வருக! நல்ல மகனே வருக!' என்றார். அப்போது ஜிப்ரீல்(அலை) அவர்களிடம் இவர் யார்? என கேட்டேன். 'இவர் தாம் ஆதம். அவரின் வலப்பக்கமும் இடப்பக்கமும் உள்ளவர்கள் அவரின் சந்ததிகளிலுள்ள மனிதர்கள். வலப்பக்கமுள்ளவர்கள் சுவர்க்கவாசிகள்; இடப்பக்கமுள்ளவர்கள் நரகவாசிகள். (எனவேதான்) அவர் தங்களின் வலப்பக்கம் பார்த்துச் சிரிக்கிறார்; தங்களின் இடப்பக்கம் பார்த்து அழுகிறார்' என்று கூறினார்கள்.
பின்னர், ஜிப்ரீல்(அலை) என்னை இரண்டாவது வானத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அந்த வானத்தில் காவலரிடம் 'திற' எனக் கூறினார். முதல் வானத்தின் காவலர் கேட்ட கேள்விகளைப் போன்றே இவரும் கேட்டுவிட்டுத் திறந்தார். இந்த ஹதீஸை அறிவிக்கும் அனஸ்(ரலி), 'வானங்களில் ஆதம், இத்ரீஸ், மூஸா, ஈஸா, இப்ராஹீம்(அலை) ஆகிய நபிமார்களைக் கண்டதாக நபி(ஸல்) குறிப்பிட்டார்கள். முதல் வானத்தில் ஆதம்(அலை) அவர்களையும் ஆறாவது வானத்தில் இப்ராஹீம்(அலை) அவர்களையும் கண்டதாகக் குறிப்பிட்டார்கள். மற்ற நபிமார்களைக் கண்ட இடத்தைக் கூறவில்லை' என்று கூறினார்.
'ஜிப்ரீல்(அலை) என்னை அழைத்துக்கொண்டு இத்ரீஸ்(அலை) பக்கமாகச் சென்றபோது 'நல்ல நபியே! வருக! நல்ல சகோதரரே வருக!' என இத்ரீஸ்(அலை) கூறியபோது இம்மனிதர் யார்? என நான் கேட்டதற்கு, 'இவர் இத்ரீஸ்(அலை)' என ஜிப்ரீல்(அலை) பதில் கூறினார்கள்.
பின்னர் மூஸா(அலை) பக்கமாக நான் சென்றபோது 'நல்ல நபியே வருக! நல்ல சகோதரரே வருக!' எனக் கூறினார்கள். இவர் யார்? என நான் கேட்டதற்கு, 'இவர்தான் மூஸா(அலை)' என ஜிப்ரீல் கூறினார்கள்.
பின்னர் ஈஸா(அலை) பக்கமாகச் சென்றபோது 'நல்ல நபியே! வருக! நல்ல சகோதரரே வருக!' எனக் கூறினார்கள். இவர் யார்? என நான் கேட்டதற்கு, 'இவர் ஈஸா(அலை)' என ஜிப்ரீல்(அலை) கூறினார்கள்.
பின் இப்ராஹீம்(அலை) பக்கமாக நான் சென்றபோது 'நல்ல நபியே வருக! நல்ல மகனே வருக!" என்றார்கள். இவர் யார்? என ஜிப்ரீல்(அலை) அவர்களிடம் நான் கேட்டதற்கு, 'இவர் இப்ராஹீம்(அலை)' என்று கூறினார்கள்.
இப்னு அப்பாஸ்(ரலி) அபூ ஹப்பா அல் அன்ஸாரி(ரலி) ஆகியோர் அறிவிக்கும் மற்றோர் அறிவிப்பில், 'பின்னர் நான் மேலே கொண்டு செல்லப்பட்டேன். நான் ஏணியில் ஏறிச் சென்றபோது எழுது கோல்களால் எழுதும் சப்தத்தை செவியுற்றேன்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.த (தொடர்ந்து)
"அல்லாஹ் என்னுடைய உம்மத்தின் மீது ஐம்பது நேரத் தொழுகையைக் கடமையாக்கினான். (அதை ஏற்று) திரும்பி வந்து கொண்டிருந்தபோது, மூஸா(அலை) அவர்களின் பக்கமாகச் நான் சென்றபோது 'உங்கள் சமுதாயத்திற்கு அல்லாஹ் எதைக் கடமையாக்கினான்?' என அவர்கள் கேட்டார்கள். ஐம்பது நேரத் தொழுகையைக் கடமையாக்கினான் என்றேன். 'நீங்கள் உங்களுடைய இறைவனிடம் திரும்பச் செல்லுங்கள். உங்கள் சமூகம் அதற்கு சக்தி பெறாது' என மூஸா(அலை) கூறினார்கள். நான் திரும்பச் சென்றபோது அதில் கொஞ்சத்தை அல்லாஹ் குறைத்தான். (அதை ஏற்றுக் கொண்டு) நான் மூஸா(அலை) அவர்களிடம் வந்து கொஞ்சம் குறைத்துள்ளான் என்றேன். 'நீங்கள் உங்களுடைய இறைவனிடம் திரும்பச் செல்லுங்கள். உங்கள் சமூகம் அதற்கு(ம்) சக்தி பெறாது' என்றார்கள். நான் திரும்பிச் சென்றேன். அதில் (இன்னும்) கொஞ்சம் குறைத்தான். நான் மூஸா(அலை) அவர்களிடம் வந்தேன். (இன்னும் கொஞ்சம் குறைத்தான் என்றேன்). 'நீங்கள் உங்களுடைய இறைவனிடம் திரும்பச் செல்லுங்கள். உங்களின் சமூகம் அதற்கு சக்தி பெறாது' என்றார்கள். நாம் திரும்பச் சென்றபோது 'ஐந்து நேரத் தொழுகையைக் கடமையாக்குகிறேன். அது ஐம்பதிற்கு சமம்; என்னுடைய சொல்லில் எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை' என்று அல்லாஹ் கூறினான். நான் மூஸா(அலை) அவர்களிடம் வந்தபோது 'உங்களுடைய இறைவனிடம் சென்று இதையும் குறைக்குமாறு கூறுங்கள்' என்றார்கள். இனிமேல் என்னுடைய இறைவனிடம் (குறைத்துக் கேட்பதற்கு) வெட்கப்படுகிறேன் என்று கூறினேன். பின்னர் ஜிப்ரீல்(அலை) என்னை 'ஸித்ரதுல் முன்தஹா' என்னும் இடத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அதைப் பல வண்ணங்கள் சூழந்திருந்தன. அது என்ன என்பது எனக்குப் புலப்படவில்லை. பின்னர் சுவர்க்கத்தில் புகுத்தப்பட்டேன். அதில் முத்துக்களால் உள்ள கயிறுகளைப் பார்த்தேன். சுவர்க்கத்தின் மண் கஸ்தூரியாக இருந்தது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என அபூ தர்(ரலி) அறிவித்தார்.


தயம்மும்

'ஒருவர் ஜமாஅத்துடன் தொழாமல் தனியாக இருப்பத்தைக் கண்ட நபி(ஸல்) அவர்கள், 'நீர் ஏன் ஜமாஅத்துடன் தொழவில்லை?' என்று கேட்டார்கள். அதற்கு அவர், 'இறைத்தூதர் அவர்களே! எனக்குக் குளிப்புக் கடமையாகிவிட்டது. தண்ணீர் கிடைக்கவில்லை' என்று கூறியபோது 'மண்ணில் தயம்மும் செய்யும்! அது உமக்குப் போதுமானது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என இம்ரான் இப்னு ஹுஸைன் அல் குஸாயீ(ரலி) அறிவித்தார்.


தயம்மும்

நான் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) மற்றும் அபூ மூஸல் அஷ்அரி(ரலி) ஆகிய இருவருடன் அமர்ந்திருந்தேன். அபூ மூஸா(ரலி) அப்துல்லாஹ் இப்னுமஸ்வூத்(ரலி) அவர்களிடம் 'குளிப்புக் கடமையானவர் ஒரு மாத காலம் வரை தண்ணீரைப் பெறவில்லையானால் அவர் தயம்மும் செய்து தொழ வேண்டியதில்லையா? 'மாயிதா' என்ற அத்தியாயத்தில் வரும், 'நீங்கள் தண்ணீரைப் பெறவில்லையானால் சுத்தமான மண்ணில் தயம்மும் செய்யுங்கள்' என்ற வசனத்தை என்ன செய்வீர்கள்?' என்று கேட்டதற்கு, 'இந்த விஷயத்தில் பொது அனுமதி கொடுக்கப்பட்டால், தண்ணீர் கொஞ்சம் குளிராக இருக்கும் போதெல்லாம் (மக்கள்) தண்ணீரில் உளூச் செய்வதைவிட்டுவிட்டு மண்ணில் தயம்மும் செய்து விடுவார்கள்' என்று அப்துல்லா இப்னு மஸ்வூத்(ரலி) கூறினார். அப்போது 'இதற்காகத்தான் தயம்மும் செய்வதை நீங்கள் வெறுத்தீர்களா?' என்று நான் கேட்டதற்கு 'ஆம்!' என்று பதிலளித்தபோது, 'என்னை ஒரு வேலைக்காக நபி(ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தபோது எனக்குக் கிடைக்கவில்லை. எனவே பிராணிகள் மண்ணில் புரளுவது போன்று புரண்டேன். இச்செய்தியை நபி(ஸல்) அவர்களிடம் நான் சொன்னபோது நபி(ஸல்) அவர்கள் தங்களின் இரண்டு கைகளால் பூமியில் ஓர் அடி அடித்து, பின்னர் இரண்டு கைகளையும் தட்டிவிட்டு, தங்களின் வலக்கரத்தால் இடது புறங்கையைத் தடவினார்கள். அல்லது தங்களின் இடக்கரத்தால் வலப்புறங்கையைத் தடவினார்கள். பின்னர் இரண்டு கைகளால் தங்களின் முகத்தைத் தடவிவிட்டு 'இப்படிச் செய்வது உமக்குப் போதுமானதாக இருந்தது' என்று கூறினார்கள்' என்ற செய்தியை 'உமர்(ரலி) அவர்களிடம், அம்மார் சொன்னதை நீங்கள் கேள்விப்படவில்லையா?' என அபூ மூஸா(ரலி) கேட்டதற்கு, 'அம்மார் சொன்னதில் உமர்(ரலி) திருப்திப்படவில்லை' என்பது உமக்குத் தெரியாதா? என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) திரும்பக் கேட்டார்" என ஷகீக் அறிவித்தார்.
மற்றோர் அறிவிப்பில்: 'நான் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி), அபூ மூஸா(ரலி) ஆகிய இருவருடன் அமர்ந்திருந்தபோது, அபூ மூஸா(ரலி), அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களை நோக்கி 'என்னையும் உங்களையும் நபி(ஸல்) அவர்கள் (ஒரு வேலைக்காக) அனுப்பியபோது எனக்குக் குளிப்புக் கடமையாகி மண்ணில் நான் புரண்டதும், பின்னர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து நடந்த விஷயத்தைச் சொன்னபோது நபி(ஸல்) அவர்கள் தங்களின் முகத்தையும் இரண்டு முன் கைகளையும் ஒரு முறை தடவிவிட்டு 'இப்படி நீர் செய்திருந்தால் அது உமக்குப் போதுமானது' என்று கூறினார்கள்' என உமர்(ரலி) அவர்களிடம் அம்மார்(ரலி) கூறியதை நீர் கேள்விப்பட்டதில்லையா' என அபூ மூஸா(ரலி) கேட்டார்" என ஷகீக்' வாயிலாக 'யஃலா' அறிவித்தார்.


தயம்மும்

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அபூ மூஸ அல் அஷ்அரி(ரலி) ஆகியோருடன் நானும் இருந்தபோது அபூ மூஸா(ரலி) அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களிடம் 'அபூ அப்திர்ரஹ்மானே! குளிப்புக் கடமையானவருக்குத் தண்ணீர் கிடைக்காவிட்டால் அவர் என்ன செய்ய வேண்டும்?' என்று கேட்டதற்கு, 'தண்ணீர் கிடைக்கும் வரை அவர் தொழ வேண்டியதில்லை' என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) கூறியபோது, 'நபி(ஸல்) அவர்கள் அம்மார் இப்னு யாஸிர்(ரலி) அவர்களிடம், 'தண்ணீர் கிடைக்காவிட்hல் தயம்மும் செய்தால் போதுமானது' என்று சொன்ன செய்தியை நீர் என்ன செய்வீர்?' என அபூ மூஸா(ரலி) கேட்டதற்கு, '(அம்மார்(ரலி) உமர்(ரலி) அவர்களிடம் அச்செய்தியைக் கூறிய போது) அதை உமர்(ரலி) ஏற்றுக் கொள்ளவில்லை என்பது உமக்குத் தெரியாதா?' என்று அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) பதில் கூறினார். அப்போது, 'அம்மார்(ரலி) அறிவிப்பதைவிட்டு விடுங்கள். 'தண்ணீர் கிடைக்காவிட்டால் தயம்மும் செய்து கொள்ளுங்கள்' என்ற இந்த இறைவசனத்தை என்ன செய்வீர்கள்?' என்று அபூ மூஸா(ரலி) கேட்டதற்கு, 'இந்த விஷயத்தில் நாம் அவர்களுக்கு அனுமதி வழங்கிவிட்டால் யாருக்காவது தண்ணீர் கொஞ்சம் குளிராகத் தெரிந்தால் அதில் உளூச் செய்வதைவிட்டுவிட்டு தயம்மும் செய்வார்' என்று அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) தாம் சொல்லக்கூடிய இந்த வார்த்தையின் விபரீதத்தைப் புரியாமலே சொல்லிவிட்டார்.
இதற்காகத்தான் தயம்மும் செய்வதை அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) வெறுத்திருக்கக் கூடுமோ? என ஷகீம்டம் நான் கேட்டதற்கு அவர் 'ஆம்! என்றார்" என அஃமஷ் அறிவித்தார்.



;;