நபிமணி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள்: "நாம் பாவத்தில் ஆழ்ந்து விடுவோமோ என்னும் அச்சத்தால் ஒரு பாவமில்லாத விஷயத்தைக் கூட விட்டுவிட முன்வராதவரை இறைவனை அஞ்சும் நல்லடியார்களின் பட்டியலில் எந்த மனிதனும் இடம் பெற முடியாது." (அறிவிப்பாளர் : அத்திய்யதுஸ் ஸஃதி ரளியல்லாஹு அன்ஹு திர்மிதி)
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள்: "ஹலாலும் (அனுமதிக்கப்பட்டதும்) தெளிவாக உள்ளது. ஹராமும் (தடுக்கப்பட்டதும்) தெளிவாக உள்ளது. ஆனால் இவ்விரண்டுக்குமிடையே சந்தேகத்திற்குரிய சில விஷயங்கள் உள்ளன. சந்தேகத்துக்குரிய பாவங்களிலிருந்து விலகி இருப்பவன் பகிரங்கமான பாவங்களிலிருந்தும் கண்டிப்பாக விலகியே இருப்பான். சந்தேகத்திற்குரிய பாவங்களில் துணிவுடன் ஈடுபடுபவன் வெளிப்படையான பாவங்களில் வீழ்ந்துவிட பெரிதும் வாய்ப்புண்டு. பாவங்கள் அல்லாஹ்வினால் தடை செய்யப்பட்ட பகுதிகளாகும் (அவற்றினுள் நுழைந்திட அனுமதியில்லை, அதனுள் அத்துமீறி நுழைந்துவிடுவது குற்றமாகும்.) தடை செய்யப்பட்ட பகுதியின் அருகே மேய்கின்ற பிராணி அதனுள் புகுந்துவிட பெரிதும் வாய்ப்புண்டு."(அறிவிப்பாளர் : நுஃமான் பின் பஷீர் ரளியல்லாஹு அன்ஹு புகாரி, முஸ்லிம்)
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், வட்டி வாங்குபவர்கள் மீதும், வட்டி கொடுப்பவர்கள் மீதும், அவ்விருவருக்கும் சாட்சியாக இருப்பவர்கள் மீதும், வட்டி கணக்கு எழுதுபவர்கள் மீதும் சாபமிட்டார்கள். (அறிவிப்பாளர் : இப்னு மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு புகாரி, முஸ்லிம்
அநீதியிழைக்கப்பட்டவரின் சாபத்திற்கு (உங்களால் அநீதிக்கு ஆளானவர் இறைவனிடம் உங்கள் அநீதியைக் குறித்து முறையிட்டு உங்களுக்குக் கேடாகப் பிரார்த்தனை புரிபவதைப் பற்றி) அஞ்சுங்கள். ஏனெனில், அதற்கும் அல்லாஹ்வுக்கும் இடையே எந்தத் திரையும் இல்லை" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முஆத் ரளியல்லாஹு அண்ஹு அவர்களை யமன் நாட்டுக்கு (ஆளுநராக) அனுப்பி வைத்தபோது கூறினார்கள் என்பதாக இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அண்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: புகாரி)
அல்லாஹ்வின் திருத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் (ஆண்களாகிய) நாங்களும் பெண்களும் ஒரே பாத்திரத்தில் எங்களது கைகளை உள்ளே விட்டு உலூச் செய்வோம்" என இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள். நூல்: அபூ தாவூத்
"அல்லாஹ்வின் திருத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் ஆண்களும், பெண்களும் சேர்ந்து உலூச் செய்வார்கள்" என இப்னு உமர் ரளியல்லாஹுஅன்ஹு அறிவிக்கிறார்கள். முஸத்தத் அவர்களது அறிவிப்பில் 'ஆண்களும் பெண்களும் சேர்ந்து ஒரே பாத்திரத்தில் உலூச் செய்வார்கள்" எனக் கூறியுள்ளார். நூல்: அபூ தாவூத் (குறிப்பு: நஸயீ, இப்னுமாஜா, முஅத்தா, புகாரி, அஹ்மத் ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)
"ஒரே பாத்திரத்தில் இருந்து நானும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் உலூச் செய்யும் போது எனது கையும் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களின் கையும் போட்டி போட்டுக் கொள்ளும்" என்று உம்மு சுமைய்யா ரளியல்லாஹுஅன்ஹா அறிவிக்கிறார்கள். நூல்: அபூ தாவூத்
"நானும் அல்லாஹ்வின் திருத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் குளிப்புக் கடமையானவர்களாக இருக்கும் போது ஒரே பாத்திரத்தில் சேர்ந்து குளிப்போம் என அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கிறார்கள். நூல்: அபூ தாவூத் (குறிப்பு: முஸ்லிம், நஸயீ, அஹ்மது ஆகிய நூல்களிலும் இது இடம் பெற்றுள்ளது.)
அனைத்து மக்கள் முன்பும் என் சமுதாயத்தில் இருந்து ஒரு மனிதரை அல்லாஹ் தேர்ந்தெடுத்து, அவன் முன்னே 99 ஏடுகளை பரப்புவான். ஒவ்வொரு ஏடும் பார்வை படும் தூர அளவுக்கு இருக்கும். (இவை அனைத்தும் பாவ ஏடுகளாகும்) நம்பகமான எனது எழுத்தாளர்கள் வானவர்கள் உனக்கு அநீதம் செய்துள்ளார்களா? இதில் எதையேனும் நீ மறுக்கிறாயா? என்று அல்லாஹ் கேட்பான். ''இறைவா! இல்லை'' என்பார் அம்மனிதர். உன் (நல்லறத்தின்) எடையைப்பார் என்று அல்லாஹ் கூறுவான். அவரோ ''இறைவா! இந்த (பெரிய) ஏடுகளுடன் இந்த சிறிய சீட்டினால் (நிறுப்பதால்) பயன் என்ன?'' என்று கூறுவார். ''நீ அநீதம் செய்யப்படமாட்டாய் (எடையைப்பார்!)'' என்று அல்லாஹ் கூறுவான்.
அல்லாஹ்விடம் சில வானவர்கள் உண்டு அவர்களின் நடைபாதைகளில் அல்லாஹ்வை நினைவு கூரும் மக்களை தேடியவர்களாக சுற்றி வருவார்கள். அல்லாஹ்வை நினைவு கூரும் மக்களைக் கண்டால் ''நீங்கள் தேடியவை பக்கம் வாருங்கள் என ஒருவருக்கொருவர் தங்களிடையே கூறிக் கொண்டு, தங்களின் இறக்கைகளால் வானத்தின் பால் அம்மக்களை சூழ்வார்கள். என்னை பார்த்து இருக்கிறார்களா? என்று அல்லாஹ் கேட்பான். ''இல்லை, அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உன்னை அவர்கள் பார்த்ததில்லை என்று வானவர்கள் கூறுவர். என்னை அவர்கள் பார்த்திருந்தால் அவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள்? என்று அல்லாஹ் கேட்பான்.''உன்னை அவர்கள் பார்த்திருந்தால் உன்னை வணங்குவதில் கடுமையாக நடந்து கொள்வார்கள். உன்னை புகழ்வதில் பெருமைப் படுத்துவதில் உன்னை தூய்மைப் படுத்துவதில் அதிகமாக நடந்து கொள்வார்கள் என்று வானவர்கள் கூறுவர். என்னிடம் அவர்கள் என்ன கேட்கிறார்கள்? என்று அல்லாஹ் கேட்பான். உன்னிடம் சொர்க்கத்தை கேட்கிறார்கள் என்று வானவர் கூறுவர். அதை அவர்கள் பார்த்திருக்கிறார்களா? என்று அல்லாஹ் கேட்பான். இல்லை, அல்லாஹ்வின் மீது ஆணையாக! இறைவா! அதை அவர்கள் பார்த்திருந்தால் அதன் மீது அதிகப் பேராசை கொள்வார்கள். இன்னும் அதிகமாக அதைத் தேடுவார்கள் என்று வானவர்கள் கூறுவார்கள். எதிலிருந்து அவர்கள் பாதுகாப்புத் தேடுகிறார்கள் என்று அல்லாஹ் கேட்க ''நரகத்திலிருந்தும் என்று வானவர்கள் கூறுவர். அதை அவர்கள் பார்த்திருக்கிறார்களா?" என்று அல்லாஹ் கேட்பான்.''இல்லை, அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இறைவா! அதை அவர்கள் பார்த்ததில்லை" என்று வானவர்கள் கூறுவர். அதை அவர்கள் பார்த்திருந்தால் அதிலிருந்து விலகவும், அதை அஞ்சவும் என கடுமையாக நடந்து கொள்வார்கள் என்று மலக்குகள் கூறுவர். ''நான் அவர்களை மன்னித்து விட்டேன் என்பதற்கு உங்களை சாட்சியாக்குகிறேன் என்று அல்லாஹ் கூறுவான். அப்போது வானவர்களில் ஒருவர் ''மக்களில் ஒருவர் உம்மை நினைவு கூர்ந்தவர்களில் இல்லை. தன் தேவைக்காகவே (அவ்விடத்திற்கு)வந்தார். (அவருக்குமா மன்னிப்பு உண்டு)" என்று கூறுவார்.

