நபிமொழி 57

நபிமணி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள்: "நாம் பாவத்தில் ஆழ்ந்து விடுவோமோ என்னும் அச்சத்தால் ஒரு பாவமில்லாத விஷயத்தைக் கூட விட்டுவிட முன்வராதவரை இறைவனை அஞ்சும் நல்லடியார்களின் பட்டியலில் எந்த மனிதனும் இடம் பெற முடியாது."  (அறிவிப்பாளர் : அத்திய்யதுஸ் ஸஃதி ரளியல்லாஹு அன்ஹு திர்மிதி)

நபிமொழி 56

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள்: "ஹலாலும் (அனுமதிக்கப்பட்டதும்) தெளிவாக உள்ளது. ஹராமும் (தடுக்கப்பட்டதும்) தெளிவாக உள்ளது. ஆனால் இவ்விரண்டுக்குமிடையே சந்தேகத்திற்குரிய சில விஷயங்கள் உள்ளன. சந்தேகத்துக்குரிய பாவங்களிலிருந்து விலகி இருப்பவன் பகிரங்கமான பாவங்களிலிருந்தும் கண்டிப்பாக விலகியே இருப்பான். சந்தேகத்திற்குரிய பாவங்களில் துணிவுடன் ஈடுபடுபவன் வெளிப்படையான பாவங்களில் வீழ்ந்துவிட பெரிதும் வாய்ப்புண்டு. பாவங்கள் அல்லாஹ்வினால் தடை செய்யப்பட்ட பகுதிகளாகும் (அவற்றினுள் நுழைந்திட அனுமதியில்லை, அதனுள் அத்துமீறி நுழைந்துவிடுவது குற்றமாகும்.) தடை செய்யப்பட்ட பகுதியின் அருகே மேய்கின்ற பிராணி அதனுள் புகுந்துவிட பெரிதும் வாய்ப்புண்டு."(அறிவிப்பாளர் : நுஃமான் பின் பஷீர் ரளியல்லாஹு அன்ஹு புகாரி, முஸ்லிம்)

நபிமொழி 55

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்வட்டி வாங்குபவர்கள் மீதும், வட்டி கொடுப்பவர்கள் மீதும், அவ்விருவருக்கும் சாட்சியாக இருப்பவர்கள் மீதும், வட்டி கணக்கு எழுதுபவர்கள் மீதும் சாபமிட்டார்கள். (அறிவிப்பாளர் : இப்னு மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு புகாரி, முஸ்லிம்



நபிமொழி 54

அநீதியிழைக்கப்பட்டவரின் சாபத்திற்கு (உங்களால் அநீதிக்கு ஆளானவர் இறைவனிடம் உங்கள் அநீதியைக் குறித்து முறையிட்டு உங்களுக்குக் கேடாகப் பிரார்த்தனை புரிபவதைப் பற்றி) அஞ்சுங்கள். ஏனெனில், அதற்கும் அல்லாஹ்வுக்கும் இடையே எந்தத் திரையும் இல்லை" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முஆத் ரளியல்லாஹு அண்ஹு அவர்களை யமன் நாட்டுக்கு (ஆளுநராக) அனுப்பி வைத்தபோது கூறினார்கள் என்பதாக இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அண்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: புகாரி)


நபிமொழி 53

அல்லாஹ்வின் திருத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் (ஆண்களாகிய) நாங்களும் பெண்களும் ஒரே பாத்திரத்தில் எங்களது கைகளை உள்ளே விட்டு உலூச் செய்வோம்" என இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்.

நூல்: அபூ தாவூத்

நபிமொழி 52

"அல்லாஹ்வின் திருத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் ஆண்களும், பெண்களும் சேர்ந்து உலூச் செய்வார்கள்" என இப்னு உமர் ரளியல்லாஹுஅன்ஹு அறிவிக்கிறார்கள். முஸத்தத் அவர்களது அறிவிப்பில் 'ஆண்களும் பெண்களும் சேர்ந்து ஒரே பாத்திரத்தில் உலூச் செய்வார்கள்" எனக் கூறியுள்ளார்.

நூல்: அபூ தாவூத்

(குறிப்பு: நஸயீ, இப்னுமாஜா, முஅத்தா, புகாரி, அஹ்மத் ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)


நபிமொழி 51

"ஒரே பாத்திரத்தில் இருந்து நானும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் உலூச் செய்யும் போது எனது கையும் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களின் கையும் போட்டி போட்டுக் கொள்ளும்" என்று உம்மு சுமைய்யா ரளியல்லாஹுஅன்ஹா அறிவிக்கிறார்கள்.

நூல்: அபூ தாவூத்

(குறிப்பு: இது இப்னுமாஜாவிலும் இடம் பெற்றுள்ளது.)

நபிமொழி 50

"நானும் அல்லாஹ்வின் திருத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் குளிப்புக் கடமையானவர்களாக இருக்கும் போது ஒரே பாத்திரத்தில் சேர்ந்து குளிப்போம் என அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கிறார்கள்.

நூல்: அபூ தாவூத்

(குறிப்பு: முஸ்லிம், நஸயீ, அஹ்மது ஆகிய நூல்களிலும் இது இடம் பெற்றுள்ளது.)


நபிமொழி 49

அனைத்து மக்கள் முன்பும் என் சமுதாயத்தில் இருந்து ஒரு மனிதரை அல்லாஹ் தேர்ந்தெடுத்து, அவன் முன்னே 99 ஏடுகளை பரப்புவான். ஒவ்வொரு ஏடும் பார்வை படும் தூர அளவுக்கு இருக்கும். (இவை அனைத்தும் பாவ ஏடுகளாகும்)

நம்பகமான எனது எழுத்தாளர்கள் வானவர்கள் உனக்கு அநீதம் செய்துள்ளார்களா? இதில் எதையேனும் நீ மறுக்கிறாயா? என்று அல்லாஹ் கேட்பான். ''இறைவா! இல்லை'' என்பார் அம்மனிதர்.

உனக்கு ஏதேனும் குறை உண்டா? என்று அல்லாஹ் கேட்பான். இறைவா! இல்லை என்பார் அவர். ''இல்லை, உனக்கு ஒரு நன்மை உண்டு. இன்று உனக்கு அநீதம் செய்யப்பட மாட்டாது'' என்று அல்லாஹ் கூறுவான். பின்பு ஒரு சிறிய சீட்டு ஒன்று வெளியே எடுக்கப்படும். அதில் ''அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹுவரஸூலுஹு'' என்று இருந்தது.

உன் (நல்லறத்தின்) எடையைப்பார் என்று அல்லாஹ் கூறுவான். அவரோ ''இறைவா! இந்த (பெரிய) ஏடுகளுடன் இந்த சிறிய சீட்டினால் (நிறுப்பதால்) பயன் என்ன?'' என்று கூறுவார். ''நீ அநீதம் செய்யப்படமாட்டாய் (எடையைப்பார்!)'' என்று அல்லாஹ் கூறுவான்.

பின்பு ழூழூ(தராசின்) ஒரு தட்டில் ஏடுகள் வைக்கப்படும் மறுதட்டிலோ சிறிய சீட்டு வைக்கப்படும். ஏடுகள் (இருந்த தட்டு) லேசாம், சீட்டு (உள்ள தட்டு) கனத்துவிடும். அல்லாஹ்வின் பெயருடன் எதுவும் கனத்து விடாது என்று நபி ஸல்லல்லாஹு
 அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னுல் ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்.   (நூல்: திர்மிதி)

 

நபிமொழி 48

அல்லாஹ்விடம் சில வானவர்கள் உண்டு அவர்களின் நடைபாதைகளில் அல்லாஹ்வை நினைவு கூரும் மக்களை தேடியவர்களாக சுற்றி வருவார்கள். அல்லாஹ்வை நினைவு கூரும் மக்களைக் கண்டால் ''நீங்கள் தேடியவை பக்கம் வாருங்கள் என ஒருவருக்கொருவர் தங்களிடையே கூறிக் கொண்டு, தங்களின் இறக்கைகளால் வானத்தின் பால் அம்மக்களை சூழ்வார்கள்.

அவர்களை நன்கு அறிந்தவனாக அல்லாஹ் அவர்களிடம் என் அடியார்கள் என்ன கூறுகிறார்கள்? என்று கேட்பான். ''உன்னை அவர்கள் 'சுப்ஹானல்லாஹ்' என்று கூறி தூய்மைப் படுத்துகிறார்கள். 'அல்லாஹு அக்பர்' என்று கூறி உன்னை பெருமைப் படுத்துகிறார்கள். அல்ஹம்து லில்லாஹ் என்று கூறி உன்னை புகழ்கிறார்கள். உன்னை புகழுக்குரிய வார்த்தைகளால் உயர்வு படுத்துகிறார்கள் என்று வானவர்கள் கூறுவர்.

என்னை பார்த்து இருக்கிறார்களா? என்று அல்லாஹ் கேட்பான். ''இல்லை, அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உன்னை அவர்கள் பார்த்ததில்லை என்று வானவர்கள் கூறுவர். என்னை அவர்கள் பார்த்திருந்தால் அவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள்? என்று அல்லாஹ் கேட்பான்.''உன்னை அவர்கள் பார்த்திருந்தால் உன்னை வணங்குவதில் கடுமையாக நடந்து கொள்வார்கள். உன்னை புகழ்வதில் பெருமைப் படுத்துவதில் உன்னை தூய்மைப் படுத்துவதில் அதிகமாக நடந்து கொள்வார்கள் என்று வானவர்கள் கூறுவர்.

என்னிடம் அவர்கள் என்ன கேட்கிறார்கள்? என்று அல்லாஹ் கேட்பான். உன்னிடம் சொர்க்கத்தை கேட்கிறார்கள் என்று வானவர் கூறுவர். அதை அவர்கள் பார்த்திருக்கிறார்களா? என்று அல்லாஹ் கேட்பான். இல்லை, அல்லாஹ்வின் மீது ஆணையாக! இறைவா! அதை அவர்கள் பார்த்திருந்தால் அதன் மீது அதிகப் பேராசை கொள்வார்கள். இன்னும் அதிகமாக அதைத் தேடுவார்கள் என்று வானவர்கள் கூறுவார்கள்.

எதிலிருந்து அவர்கள் பாதுகாப்புத் தேடுகிறார்கள் என்று அல்லாஹ் கேட்க ''நரகத்திலிருந்தும் என்று வானவர்கள் கூறுவர். அதை அவர்கள் பார்த்திருக்கிறார்களா?" என்று அல்லாஹ் கேட்பான்.''இல்லை, அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இறைவா! அதை அவர்கள் பார்த்ததில்லை" என்று வானவர்கள் கூறுவர். அதை அவர்கள் பார்த்திருந்தால் அதிலிருந்து விலகவும், அதை அஞ்சவும் என கடுமையாக நடந்து கொள்வார்கள் என்று மலக்குகள் கூறுவர். ''நான் அவர்களை மன்னித்து விட்டேன் என்பதற்கு உங்களை சாட்சியாக்குகிறேன் என்று அல்லாஹ் கூறுவான். அப்போது வானவர்களில் ஒருவர் ''மக்களில் ஒருவர் உம்மை நினைவு கூர்ந்தவர்களில் இல்லை. தன் தேவைக்காகவே (அவ்விடத்திற்கு)வந்தார். (அவருக்குமா மன்னிப்பு உண்டு)" என்று கூறுவார்.

''அவர்களும் அந்த இடத்தில் அமர்ந்திருந்தவர்கள் தான்! அவர்களுடன் உட்கார்ந்தவர் அவர்களுக்கு (பயனில்) குறை ஏற்படுத்தி விட மாட்டார். இதை நபி ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹுஅறிவிக்கிறார்கள்.    (நூல்: புகாரி)

நபிமொழி 47

"கண் பார்த்திராத, காது கேட்டிராத, மனித உள்ளத்தில் உதித்திராத ஒன்றை என் நல்லடியார்களுக்கு தயார் செய்து வைத்துள்ளேன்" என்று அல்லாஹ் கூறுகிறான்.

நீங்கள் விரும்பினால் 32:17 வசனத்தைப் படித்துக் கொள்ளுங்கள்.

சொர்க்கத்தில் ஒரு மரம் உண்டு. 100 வருடம் ஆனாலும் விலகாத அதன் நிழலில் ஒருவர் இளைப்பாறுவார். நீங்கள் விரும்பினால் 56:30 வசனத்தைப் படியுங்கள்.

சொர்க்கத்தில் உள்ள ஒரு இன்பமான இடம்: பூமி மற்றும் அதில் உள்ளவை அனைத்தையும் விட சிறந்ததாகும் நீங்கள் விரும்பினால், ''3:185'' வசனத்தைப் படியுங்கள். என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்.    (நூல்: திர்மிதி)

 


நபிமொழி 46

ஒரு அடியானை அல்லாஹ் கோபம் கொண்டால் ஜிப்ரிலை அழைத்து 'நான் அவரை கோபிக்கிறேன்'' என்று கூறுவான். வானத்தில் உள்ளோரிடம் அதை அவர் அறிவிப்பார். பின்பு பூமியில் உள்ளோரிடையேயும் அவர் மீது கோபத்தை இறக்கப்படும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவிக்கின்றார்கள்.    (நூல்: திர்மிதி)

நபிமொழி 45

அல்லாஹ் ஒரு அடியானை பிரியம் வைத்துவிட்டால் ஜிப்ரீலை அழைத்து, ''அவரை நான் பிரியம் கொள்கிறோம். அவரை நீ விரும்புவீராக!'' என்று கூறுவான். அவரும் அவனை பிரியம் கொள்வார். ஜிப்ரீல் வானத்தில் உள்ளவர்களை அழைத்து ''அல்லாஹ் இன்னமனிதனை பிரியம் கொள்கிறான். அவரை நீங்களும் விரும்புங்கள் என்பார். வானத்தில் உள்ளோர் அவரை பிரியம் கொள்வர். பின்பு பூமியில் (உள்ளவர்களிலும்) அவர் பால் இணக்கத்தை ஏற்படுத்தப்படும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்.    (நூல்: புகாரி)

 

நபிமொழி 44

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கழிப்பிடத்திலிருந்து வெளிவரும் போது 'குஃப்ரானக்" (இறைவா! என்னை மன்னிப்பாயாக!) என்று கூறுவார்கள் என ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கிறார்கள். (நூல்அபூ தாவூது)


நபிமொழி 43

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். சாபத்திற்குரிய மூன்று காரியங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள். அவை: நீர்துறைகள், நடுப்பாதை, நிழல் தரும் இடங்கள் ஆகியவற்றில் மல, ஜலம் கழிப்பதாகும் என்று முஆத் பின் ஜபல் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள். (நூல்: அபூ தாவூது)

(குறிப்பு: இந்த ஹதீஸை இமாம் இப்னுமாஜா அவர்களும் தனது நூலிலும் பதிவு செய்துள்ளார்கள். முஆத் பின் ஜபல் (ரளி) வழியாக அறிவிக்கும் அபூஸயீத் அல்ஹிம்யரீ என்பார் முஅத் அவர்களிடம் எதையும் செவியுற்றதில்லை என்று இப்னுல் கத்தான் கூறுவதாக ஹாபிள் இப்னு ஹஜர் குறிப்பிடுகிறார்கள். எனவே இது முர்ஸல் எனும் வகையைச் சேர்ந்ததாகும்.)



நபிமொழி 42

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 'சாபத்திற்குரிய இரண்டை - தவிர்த்துக் கொள்ளுங்கள்" என்று கூறினார்கள். அப்போது தோழர்கள் அல்லாஹ்வின் திருத்தூதர் அவர்களே! சாபத்திற்குரிய அவ்விரண்டும் யாவை? என்து வினவியதும், 'மக்கள் (நடக்கும்) பாதையில் அல்லது அவர்கள் நிழல் பெறும் இடங்களில் ஒருவர் மலம், ஜலம் கழிப்பதாகும் என்று அவர்கள் பதிலளித்தார்கள். (நூல்: அபூ தாவூது, முஸ்லிம், அஹ்மத்)



நபிமொழி 41

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கட்டிலுக்கு அடியில் மரப்பாத்திரம் (வைக்கப்பட்டு) இருக்கும். அதில் இரவில் அவர்கள் சிறுநீர் கழிப்பார்கள் என்று உமைமா பின்து ருகையா ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கிறார்கள். (நூல்: அபூ தாவூது, நஸயீ, ஹாகிம்)



நபிமொழி 40

 பொந்துக்குள் சிறுநீர் கழிப்பதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடுத்தார்கள் என்று அப்துல்லாஹ் பின் சார்ஜில் அறிவிக்கிறார்கள்.

பொந்துக்குள் சிறுநீர் கழிக்க தடை செய்யப்பட்டதன் காரணம் என்ன என்று (அறிவிப்பாளர்) கதாதா அவர்களிடம் கேட்கப்பட்டது. பொந்துகள் ஜின்கள் வசிக்கும் இடம் என்று சொல்லப்பட்டதாக அவர் பதில் சொன்னார். (நூல்: அபூ தாவூது)





நபிமொழி 39

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். உங்களில் ஒருவர் தான் குளிக்கும் இடத்தில் சிறுநீர் கழிக்கவும் பிறகு அதில் குளிக்கவும் வேண்டாம். பிறகு அதில் உலூ செய்யவும் வேண்டாம். ஏனெனில் அதில் தான் பெருமளவு வஸ்வாஸ் (மனக்குழப்பம்) உள்ளது என்று அப்துல்லாஹ் பின் முகப்பல் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள். (நூல்: திர்மிதீ, அபூ தாவூது, நஸயீ, இப்னுமாஜா, அஹ்மத்)



நபிமொழி 38

உருவப்படம், நாய், குளிப்புக் கடமையானவர் இருக்கும் வீட்டில் மலக்குகள் நுழைய மாட்டார்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அலி ரளியல்லாஹு அன்ஹு அவர்கள். (நூல்: அபூதாவூது)



நபிமொழி 37

குதைப் பின் அல்ஹரித் ரளியல்லாஹு அன்ஹு வர்கள் அறிவிக்கிறார்கள்: 'நான் அன்னை ஆயிஷா (ரளியல்லாஹு அன்ஹா) அவர்களிடம் கேட்டேன். (குளிப்புக் கடமையான) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குளிப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? அவர்கள் எப்போது குளிப்பார்கள்? இரவின் ஆரம்பத்திலா அல்லது இறுதியிலா?

அதற்கு அவர்கள் பதிலளித்தார்கள், சிலவேளை அவர்கள் இரவின் ஆரம்பத்திலும் சிலவேளை இரவின் இறுதியிலும் குளிப்பார்கள். அதற்கு நான், அல்லாஹ் மிகப்பெரியவன், இந்த விஷயத்தில் சலுகையளித்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் என்று வியந்து கூறினேன். மீண்டும் நான் அன்னை ஆயிஷா (ரளியல்லாஹு அன்ஹா) அவர்களிடம் கேட்டேன்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வித்ருத் தொழுகையை இரவின் ஆரம்பத்தில் தொழுதார்களா? அல்லது இறுதியில் தொழுதார்களா?

அதற்கு அவர்கள் பதிலளித்தார்கள், சிலவேளை அவர்கள் இரவின் ஆரம்பத்திலும் சிலவேளை இரவின் இறுதியிலும் தொழுவார்கள். அதற்கு நான் அல்லாஹ் மிகப்பெரியவன், இந்த விஷயத்தில் சலுகையளித்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் என்று வியந்து கூறினேன்.

மீண்டும் நான் அன்னை ஆயிஷா (ரளியல்லாஹு அன்ஹா) அவர்களிடம் கேட்டேன். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குர்ஆனை சப்தமிட்டு ஓதுவார்களா? அல்லது சப்தமின்றி ஓதுவார்களா? அதற்கு அவர்கள் பதிலளித்தார்கள். சிலவேளை அவர்கள் சப்தத்துடனும் சிலவேளை சப்தமின்றியும் ஓதுவார்கள். அதற்கு நான், அல்லாஹ் மிகப்பெரியவன், இந்த விஷயத்தில் சலுகையளித்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் என்று வியந்து கூறினேன். (நூல்: அபூதாவூது)


நபிமொழி 36

குளிப்புக் கடமையான நிலையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உறங்க எண்ணும் போது தொழுகைக்காக செய்வது போல் உலூச் செய்து கொள்வார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள்) (இந்த ஹதீஸ் சுஹ்ரீ வழியாக வேறொரு அறிவிப்பாளர் தொடரைக் கொண்டு அறிவிக்கப்படுகிறது. இதில், 'குளிப்புக் கடமையானவர் உண்ண விரும்பினால் கைகள் இரண்டையும் கழுவிக் கொள்ள வேண்டும்" என்பது கூடுதலாக உள்ளது. - நூல்அபூதாவூது)



நபிமொழி 35

உமர் பின் கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தனக்கு இரவில் குளிப்பு கடமை ஏற்பட்டு விடுகிறதே! என்று அல்லாஹ்வின் திருத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் குறிப்பிட்ட போது உன் ஆண்குறியை கழுவி உலூச் செய்து பிறகு உறங்குக என்று அல்லாஹ்வின் திருத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.  (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் ரளியல்லாஹு அன்ஹுநூல்: அபூதாவூது)



நபிமொழி 34

ஹுதைபா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி ஸல்லல்லாஹுலைஹி வஸல்லம் அவர்கள் அவரை (ஹுதைபாவை) சந்தித்து கைகொடுப்பதற்காக அவரை நோக்கி வந்த போது, அவர் சொன்னார், 'நான் குளிப்புக் கடமையானவனாக இருக்கிறேன்". அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள், 'ஒரு முஸ்லிம் அசுத்தமாக மாட்டார்"  (நூல்: நூல்அபூதாவூது)



நபிமொழி 33

'நயவஞ்சகனின் அடையாளம் மூன்றாகும். அவன் பேசினால் பொய் பேசுவான். அவன் வாக்களித்தால் அதற்கு மாற்றம் செய்வான். அமானிதம் கொடுக்கப்பட்டால் மோசடி செய்துவிடுவான்." என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருக்கிறார்கள். (அறிவிப்பவர்: அபுஹுரைரா ரளியல்லாஹு அன்ஹுநூல்: முஸ்லிம்)



நபிமொழி 32

'நான்கு விஷயங்கள் யாரிடம் இருந்ததோ அவர் கலப்படமற்ற நயவஞ்சகராகிவிட்டார். அவற்றில் ஏதாவது ஒன்று யாரிடம் இருக்கிறதோ, அவர் அதை விட்டு விடும்வரையிலும் நயவஞ்சகத்தில் ஒரு பகுதி அவரிடம் இருக்கும்.

'அவர் பேசினால் பொய்யுரைப்பார். ஒப்பந்தம் செய்தால் மோசடி செய்வார். வாக்கு கொடுத்தால் மாறி விடுவார். தர்க்கம் செய்தால் உண்மையை மறைக்க முற்பட்டுவிடுவார்." என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். ஆயினும் நிச்சயமாக ஸ{ப்யானுடைய ஹதீஸில் அவைகளில் ஒரு குணம் அவரி(டத்தி)ல் இருப்பின் நயவஞ்சகத்தின் ஒரு குணமும் அவரிடத்தல் இருக்கும் என வந்துள்ளது.(அறிவிப்பவர்: அப்துல்லாஹ்பின் உமர் ரளியல்லாஹு அன்ஹுநூல்: முஸ்லிம்)


நபிமொழி 31

'யார் அல்லாஹ்வை இரட்சகனாகவும், இஸ்லாத்தை மார்க்கமாகவும், முஹம்மது(ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம்அவர்களைத் தூதராகவும் பொருந்திக் கொண்டாரோ அவர், ஈமானின் சுவையை சுகித்தவராவார் " என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூற செவியுற்றதாக, அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹுஅவர்கள் அறிவிக்கிறார்கள்.  ( நூல்: முஸ்லிம்)



நபிமொழி 30

மூன்று காரியங்கள் யாரிடம் இருக்கிறதோ அவர் அவைகளின் மூலமாக ஈமானின் இன்பத்தைப் பெற்றுவிடுகின்றார்.

1. அவ்விருவரல்லாத மற்றனைத்தையும்விட அல்லாஹ்வையும் அவனது தூதரும் அவருக்கு மிகப்பிரியமானவர்களாக இருக்க வேண்டும்2.

அவர் மனிதரை நேசிப்பார் அந் நேசம் அல்லாஹ்வுக்காக அன்றி (மற்றெவருக்காகவும்)இருக்காது3. (குப்ர் எனும்இறை நிராகரிப்பிலிருந்து அல்லாஹ் அவரைக் காப்பாற்றிக் கரைசேர்த்தபின் நரகத்துக்குள் போடப்படுவதை வெறுப்பதுபோன்றுமீண்டும் குப்ர் (இறை நிராகரிப்பு)க்குள் திரும்பச் செல்வதை அவர் வெறுக்கவேண்டும் என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.  (அறிவிப்பவர்அனஸ் ரளியல்லாஹு அன்ஹுநூல்: முஸ்லிம்)


நபிமொழி 29

'தன் பிள்ளை(களை)விட, பெற்றோர்களைவிட, மற்றுமுள்ள ஏனைய ஜனங்களைவிடவும் அவருக்கு நான் மிக விருப்பமுள்ளவராக ஆகும்வரை, உங்களில் எவரும் ஈமான் கொண்டவராக ஆகமாட்டார் " என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறி இருக்கிறார்கள்.  (அறிவிப்பவர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹுநூல்: முஸ்லிம்)



;;