தொழுகை

'நபி(ஸல்) அவர்கள் ஒரு முறை தொழுதார்கள் - கூட்டினார்களா குறைத்தார்களா என்பது எனக்குத் தெரியாது' என இப்ராஹீம் கூறுகிறார் - தொழுகையை முடித்து ஸலாம் கூறியதும் 'இறைத்தூதர் அவர்களே! தொழுகையில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டுள்ளதா?' என்று கேட்கப்பட்டது. 'அது என்ன (அப்படியென்றால் என்ன)?' என்று நபி(ஸல்) கேட்டதும், 'நீங்கள் இப்படியல்லவா தொழுதீர்கள்' என அங்கிருந்தவர்கள் கூறினார்கள். (நீட்டியிருந்த) தங்களின் கால்களை நபி(ஸல்) மடக்கி, கிப்லாவை முன்னோக்கி இரண்டு ஸஜ்தாக்கள் செய்துவிட்டுப் பின்னர் ஸலாம் கூறினார்கள். அதன் பின்னர் அவர்கள் எங்களை முன்னோக்கித் திரும்பியமர்ந்து, 'தொழுகையில் ஏதாவது மாற்றங்கள் செய்யப்படுமானால் அதை உங்களுக்குத் தெரிவித்து விடுவேன். என்றாலும் நானும் உங்களைப் போன்ற மனிதன்தான். நீங்கள் மறந்து விடுவதைப் போன்று நானும் மறந்து விடுவேன். நான் (எதையாவது) மறந்துவிட்டால் எனக்கு ஞாபகப்படுத்துங்கள். உங்களில் ஒருவர் தங்களின் தொழுகையில் சந்தேகித்தால் உறுதியானதை அவர் தீர்மானிக்கட்டும். அத்தீர்மானத்தின் அடிப்படையில் தொழுகையைப் பூர்த்தி செய்து ஸலாம் சொல்லிய பின்னர் இரண்டு ஸஜ்தாக்கள் செய்யட்டும்' என்று கூறினார்கள்" என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.