தொழுகை

ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
ஓர் அரபுக் கோத்திரத்திற்கு அடிமையாக இருந்து, பின்னர் அவர்களால் விடுதலை செய்யப்பட்டு, அவர்களுடன் வசித்து வந்த கறுப்பு அடிமைப் பெண் தன் கடந்த கால நிகழ்ச்சியைப் பின் வருமாறு என்னிடம் தெரிவித்தார்.
'நான் அவர்களுடனிருக்கும்போது அவர்களைச் சேர்ந்த சிறுமி ஒருத்தி சிவப்புத் தோலில் முத்துப் பதிக்கப் பட்ட ஓர் ஆபரணத்துடன் வந்தாள். அதை அவள் கழற்றி வைத்தான். அல்லது அது தானாகக் கீழே விழுந்தவிட்டது. அப்போது அவளருகே வந்த சிறு பருந்து ஒன்று, கீழே போடப்பட்ட அந்த ஆபரணத்தை மாமிசம் என எண்ணித் தூக்கிச் சென்றது. அவர்கள் தேடிப் பார்த்தபோது கிடைக்கவில்லை. அவர்கள் என்னைச் சந்தேம்க்கலானார்கள். என்னுடைய மர்மஸ்தானம் உட்படப் பல இடங்களிலும் அவர்கள் தேடிப் பார்த்தார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் அவர்களுடன் நின்றிருந்தபோது அந்தச் சிறிய பருந்து (திரும்பவும்) வந்த அதைக் கீழே போட்டதும் அவர்களுக்கருகில் அது விழுந்தது. எதைப் பற்றி என்னைச் சந்தேகித்தீர்களோ அதுதான் இது. நான் அதைத் திருடுவதைவிட்டுப் பரிசுத்தமானவள் என்று கூறினேன். இதன்பிறகு நபி(ஸல்) அவர்களிடம் வந்து இஸ்லாத்தை தழுவினேன்'
அந்தப் பெண்ணுக்குப் பள்ளி வாசலில் கூடாரம் ஒன்று இருந்தது. அதிலிருந்து என்னிடம் வந்து அப்பெண் பேசிக் கொண்டிருப்பாள். என்னைச் சந்திக்கும் போதெல்லாம் பின்வரும் பாடலை அவள் பாடாமலிருந்ததில்லை.
'அந்த ஆபரணம் சம்பந்தப்பட்ட அந்த நாள் நம்முடைய இறைவனின் அற்புதங்களில் ஒன்றாகும்.
தெரிந்து கொள்ளுங்கள்! அவன்தான், இறைமறுப்பாளர்களின் ஊரிலிருந்து நிச்சயமாக என்னைக் காப்பாற்றினான்'. (இது கவிதையின் பொருள்). இந்தக் கவிதையை அடிக்கடி என்னிடம் கூறுகிறாயே என்ன விஷயம் என்று நான் அப்பெண்ணிடம் கேட்டபோது மேற்கண்ட நிகழ்ச்சியை அவள் என்னிடம் கூறினாள்.