தொழுகை

இத்பான் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
நான் நபி(ஸல்) அவர்களிடம், இறைத்தூதர் அவர்களே! நான் என் சமூகத்தினருக்குத் தொழுகை நடத்துபவனாக இருக்கிறேன். என் பார்வை குறைந்துவிட்டது. மழைக் காலங்களில் எனக்கும் என் சமூகத்தினருக்குமிடையே தண்ணீர் ஓடுவதால் அவர்களின் பள்ளிக்கு சென்று என்னால் தொழுகை நடத்த முடிவதில்லை. எனவே இறைத்தூதர் அவர்களே! தாங்கள் என் இல்லத்திற்கு வந்து ஓர் இடத்தில் தொழ வேண்டும். அவ்விடத்தை (என்னுடைய) தொழுமிடமாக நான் ஆக்கிக் கொள்ள விரும்புகிறேன் என்றேன்.
"இன்ஷா அல்லாஹ் செய்கிறேன்" என்று நபி(ஸல்) கூறிவிட்டு மறு நாள் சூரியன் உயரும்போது அபூ பக்ர்(ரலி) உடன் வந்து (வீட்டின் உள்ளே வர) அனுமதி கோரினர். அனுமதித்தேன். வீட்டில் நுழைந்ததும் உட்காராமலேயே 'உம்முடைய வீட்டில் எந்த இடத்தில் நான் தொழவேண்டுமென விரும்புகிறீர்?' என்று கேட்டார்கள். வீட்டின் ஒரு பகுதியை நான் அவர்களுக்குக் காட்டினேன். நபி(ஸல்) அவர்களுக்குக் காட்டினேன். நபி(ஸல்) அவர்கள் (அவ்விடம் நின்று) தக்பீர் கூறினார்கள். நாங்கள் அவர்களுக்குப் பின்னால் வரிசையாக நின்றோம். இரண்டு ரக்அத்களாக அவர்கள் தொழுகை நடத்திய பின்னர் ஸலாம் கொடுத்தார்கள்.
மாமிசமும் மாவும் கலந்து நபி(ஸல்) அவர்களுக்காக நாங்கள் தயாரித்திருந்த உணவை உண்டு செல்லுமாறு அவர்களை நாங்கள் வற்புறுத்தினோம். (நபி(ஸல்) வந்ததைக் கேள்வியுற்ற) அப்பகுதியைச் சேர்ந்த பல ஆடவர்கள் என்னுடைய வீட்டில் வந்து குழுமினார்கள். அவர்களில் சிலர் 'மாலிக் இப்னு துகைஷின் எங்கே?' என்று கேட்க, அவர்களில் ஒருவர் 'அவர் ஒரு முனாபிக்; அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்காதவர் (எனவேதான் நபியைக் காணவரவில்லையா)' என்று கூறினார்.
அதைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள், 'அவ்வாறு கூறாதீர்! அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடி அவர் 'லாயிலாஹ இல்லல்லாஹ்' எனக் கூறியிருப்பதை நீர் அறியமாட்டீரா?' என்று கேட்டனர். 'அல்லாஹ்வூவும் அவனுடைய தூதருமே இதை நன்கறிந்தவர்கள்; அவர் நயவஞ்சகர்களுக்கு நல்லது செய்வதாக நாங்கள் அறிகிறோம்' என்று அவர் கூறினார்.
"அல்லாஹ்வின் பொருத்தம் நாடி, லாயிலாஹ இல்லல்லாஹ் என்று கூறியவரின் மீது நரகத்தை இறைவன் விலக்கிவிட்டான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.