தொழுகை

அனஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது மதீனாவின் மேற்புறத்தில் வசித்து வந்த 'பனூ அம்ர் இப்னு அவ்ஃபு' எனும் கோத்திரத்தினருடன் பதினான்கு நாள்கள் தங்கினார்கள். பின்னர் 'பனூ நஜ்ஜார்' கூட்டத்தினரை அழைத்து வருமாறு கூறினார்கள். (தங்கள்) வாள்களைத் தொங்கவிட்டவர்களாக அவர்கள் வந்தனர். நபி(ஸல்) அவர்கள் தம் வாகனத்தின் மீது அமர்ந்திருந்ததும் வாகனத்தில் அவர்களுக்குப் பின்னால் அபூ பக்ரு(ரலி) அமர்ந்திருந்ததும் அவர்களைச் சுற்றி 'பனூ நஜ்ஜார்' கூட்டத்தினர் நின்றதும் இன்னும் என் கண் முன்னே நிழலாடுகிறது.
நபி(ஸல்) அவர்களின் ஒட்டகம் அபூ அய்யூப்(ரலி) வீட்டுக்கு முன்னாலுள்ள பகுதியில் அவர்களை இறக்கியது. தொழுகையின் நேரத்தை (எப்போது) எங்கே அடைகிறார்களோ அங்கே தொழுவது நபி(ஸல்) அவர்களின் வழக்கமாக இருந்தது. ஆடுகள் கட்டுமிடங்களில் கூட தொழக் கூடியவர்களாக நபி(ஸல்) அவர்கள் இருந்தனர். அவர்கள் பள்ளிவாசல் கட்டும் படி ஏவினார்கள்.
பனூ நஜ்ஜார் கூட்டத்தினரை அழைத்து வரச் சொல்லி அவர்களிடம் 'உங்களின் இந்தத் தோட்டத்தை எனக்கு விலைக்குத் தாருங்கள்!" என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டனர். அதற்கு அவர்கள் இதற்காக விலையை அல்லாஹ்விடமே நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என்றனர். (அவ்விடத்தில்) பள்ளிவாசல் கட்டுமாறு நபி(ஸல்) கட்டளையிட்டார்கள்.
அவ்விடத்தில் இணை வைப்பவர்களின் சமாதிகள் இருந்தன. அங்கு சில உபயோகமற்ற பொருட்களும் சில பேரீச்ச மரங்களும் இருந்தன. அங்குள்ள கப்ருகளைத் தோண்டி அப்புறப்படுத்துமாறு நபி(ஸல்) கட்டளையிட்டனர். அவ்வாறே அவை தோண்டப்பட்டன.
அப்பூமியைச் சமப்படுத்துமாறு கட்டளையிட அதுவும் சமப்படுத்தப்பட்டது. பேரீச்ச மரங்களை வெட்டுமாறு கட்டளையிட அவையும் வெட்டப்பட்டன. பள்ளிவாசலின் கிப்லாத் திசையில் பேரீச்ச மரங்களை வரிசையாக நட்டனர். அதன் இரண்டு ஒரங்களிலும் கற்களை வைத்தனர் பாடிக் கொண்டே (அங்கிருந்த) பாறைகளை அப்புறப்படுத்தினர்.
"இறைவா! மறுமையின் நன்மை தவிர வேறு நன்மை இல்லை! அன்ஸார்களுக்கு, முஹாஜிர்களுக்கும் நீ மன்னிப்பளிப்பாயாக!" என்று கூறியவர்களாக நபி(ஸல்) அவர்களும் (சேர்ந்து பாறைகளை அப்புறப்படுத்துபவர்களாக) அவர்களுடன் இருந்தனர்.