தொழுகை

அனஸ்(ரலி) அறிவித்தார்.
பஹ்ரைன் நாட்டிலிருந்து சில பொருள்கள் நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டன. 'அவற்றைப் பள்ளிவாசலிலேயே கொட்டுங்கள்!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்ட பொருட்களிலேயே அதுதான் மிக அதிக அளவாக இருந்தது. அதற்கு எந்த மதிப்புமளிக்காமல் நபி(ஸல்) அவர்கள் தொழச் சென்றார்கள். தொழுது முடிந்ததும் அப்பொருட்களின் அருகில் அமர்ந்து கொண்டு காண்பவர்களுக்கெல்லாம் வழங்கி கொண்டிருந்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களின் பெரிய தந்தை அப்பாஸ்(ரலி) வந்து 'இறைத்தூதர் அவர்களே! (பத்ருப் போரில் முஸ்லிம்களால் கைதிகளாகப் பிடிக்கப்பட்ட) நானும் (என் சகோதரர் அபூ தாலியுடை மகன்) அகீலும் வடுதலை பெறுவதற்காக (நான் பெறும் தொகையை)ப் பணயமாக வழங்கியுள்ளேன். எனவே எனக்கு (தாராளமாக) வழங்குங்கள்!' என்று கேட்டார்கள்.
"(உமக்குத் தேவையான அளவுக்கு) அள்ளிக் கொள்வீராக!" என்று நபி(ஸல்) கூறியதும் அப்பாஸ்(ரலி) தங்களின் துணியில் அது கொள்ளுமளவுக்கு அள்ளினார்கள். பின்னர் அதைத் தூக்க அவர் முயன்றபோது அவரால் இயலவில்லை.
'இறைத்தூதர் அவர்களே! யாரையாவது என் மீது இதைத் தூக்கி விடச் சொல்லுங்களேன்' என்று அவர் கேட்டதற்கு 'முடியாது" என்று நபி(ஸல்) கூறினார்கள். 'அப்படியானால் நீங்களாவது என் மீது இதைத் தூக்கி வையுங்கள்!' என்று அவர் கேட்க, நபி(ஸல்) அவர்கள் 'முடியாது" என்றனர்.
அதில் சிறிதளவை அள்ளி வெளியே போட்டுவிட்டு அவர் தூக்க முயன்றார். அப்போதும் அவரால் இயலவில்லை. 'இறைத்தூதர் அவர்களே! யாரையாவது என் மீது தூக்கி வைக்கச் செய்யுங்கள்!' என்று அவர் கேட்க, நபி(ஸல்) அவர்கள் 'முடியாது" என்றனர். 'நீங்களாவது தூக்கி விடுங்களேன்' என்று அவர் கேட்க, அதற்கு 'முடியாது" என்றனர்.
மேலும் சிறிதளவை அள்ளி வெளியில் போட்டுவிட்டு அதைத் தம் தோளில் தூக்கி வைத்துக் கொண்டு அப்பாஸ்(ரலி) நடக்கலானார். அவர் மறையும் வரை நபி(ஸல்) அவர்கள், 'அவரின் பேராசையை எண்ணி வியந்தவர்களாக அவரையே பார்த்துக் கொண்டிருந்தனர். நபி(ஸல்) அவர்கள் அவ்விடத்திலிருந்து எழும்போது ஒரு வெள்ளிக் காசு கூட மீதமாக இருக்கவில்லை.