நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் நாங்கள் பள்ளிவாசலில் அமர்ந்திருந்தபோது ஒட்டகத்தின் மீது அமர்ந்தவராக ஒருவர் பள்ளிக்குள் நுழைந்தார். பள்ளியிலுள்ளே ஒட்டகத்தைப் படுக்க வைத்துப் பின்னர் அதனைக் கட்டினார். பின்பு அங்கு அமர்ந்திருந்தர்களிடம் 'உங்களில் முஹம்மத் அவர்கள் யார்?' என்று கேட்டார். நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோ மக்களிடையே சாய்ந்து அமர்ந்திருந்தார்கள். 'இதோ சாய்ந்து அமர்ந்திருக்கும் இந்த வெண்மை மனிதர்தாம் (முஹம்மத்(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள்)' என்று நாங்கள் கூறினோம். உடனே அம்மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை 'அப்துல் முத்தலிபின் பேரரே!' என்றழைத்தார். அதற்கு நபியவர்கள் 'என்ன விஷயம்?' என்று கேட்டார்கள். அப்போது அம்மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் 'நான் உங்களிடம் சில கேள்விகள் கேட்கப் போகிறேன். சில கடினமான கேள்விகளையும் கேட்கப் போகிறேன். அதற்காக நீங்கள் என் பேரில் வருத்தப்படக் கூடாது' என்றார். அதற்கவர்கள் 'நீர் விரும்பியதைக் கேளும்' என்றார்கள். உடனே அம்மனிதர் 'உம்முடையம் உமக்கு முன்னிருந்தோரதும இரட்சகன் மீது ஆணையாகக் கேட்கிறேன்; அல்லாஹ்தான் உம்மை மனித இனம் முழுமைக்கும் தூதராக அனுப்பினானா?' என்றார். அதற்கு அவர்கள் 'அல்லாஹ் சாட்சியாக ஆம்!' என்றார்கள். அடுத்து அவர் 'அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு உம்மிடம் கேட்கிறேன்; அல்லாஹ்தான் இரவிலும், பகலிலுமாக நாங்கள் ஐந்து நேரத் தொழுகையைத் தொழுது வரவேண்டுமென்று உமக்குக் கட்டளையிட்டிருக்கிறானா?' என்றார். அதற்கவர்கள் 'ஆம்! அல்லாஹ் சாட்சியாக' என்றார்கள். அடுத்து அவர் 'இறைவன் மீது ஆணையாக உம்மிடம் கேட்கிறேன்; அல்லாஹ்தான் ஒவ்வோர் ஆண்டிலும் குறிப்பிட்ட இந்த மாதத்தில் நாங்கள் நோன்பு நோற்க வேண்டும் என்று உமக்குக் கட்டளையிட்டிருக்கிறானா?' என்றார். அதற்கவர்கள் 'ஆம்! அல்லாஹ் சாட்சியாக' என்றார்கள். அடுத்து அவர், 'இறைவன் மீது ஆணையாக உம்மிடம் கேட்கிறேன்; அல்லாஹ்தான் எங்களில் வசதி படைத்தவர்களிடமிருந்து இந்த (ஸகாத் என்னும்) தர்மத்தைப் பெற்று எங்களில் வறியவர்களுக்கு நீர் அதனை வினியோகிக்க வேண்டுமென்று உமக்குக் கட்டளையிட்டிருக்கிறானா?' என்றார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 'ஆம் (இறைவன் மீது சாட்சியாக' என்றார்கள். உடனே அம்மனிதர் 'நீங்கள் (இறைவனிடமிருந்து) கொண்டு வந்தவற்றை நான் நம்பி ஏற்கிறேன்' என்று கூறிவிட்டு 'நான், என்னுடைய கூட்டத்தார்களில் இங்கு வராமல் இருப்பவர்களின் தூதுவனாவேன். நான்தான் ளிமாம் இப்னு ஸஃலபா, அதாவது பனீ ஸஃது இப்னு பக்ர் சகோதாரன்' என்றும் கூறினார்'' என அனஸ் இப்னு மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார். (நூல்: ஸஹீஹ் புகாரி)