ஈமான் எனும் இறைநம்பிக்கை
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்த ஆரம்பத்தில் அவர்களின் பாட்டனார்களி(ன் வம்சா வழியினரி)டம் அல்லது அன்சாரிகளைச் சேர்ந்த அவர்களின் மாமன்மார்களி(ன் வம்சா வழியினரி)டம் தங்கியிருந்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பதினாறு அல்லது பதினேழு மாதங்கள் பைத்துல் முகத்தஸை நோக்கியே தொழுது வந்தார்கள். (இருப்பினும்) தொழுகையில் தாம் முன்னோக்கித் தொழும் திசை (மக்காவிலுள்ள) கஅபா ஆலயமாக இருக்க வேண்டும் என்பதே அவர்களின் விருப்பமாக இருந்தது. (கஅபாவை நோக்கி) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தொழுத முதல் தொழுகை அஸர் தொழுகையாகும். அவர்களுடன் மற்றவர்களும் தொழுதார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் சேர்ந்து தொழுதவர்களில் ஒருவர் அங்கிருந்து புறப்பட்டு வேறு ஒரு பள்ளிவாசலுக்கருகே சென்றார். அங்கே பைத்துல் முகத்தஸை நோக்கித் தொழுது கொண்டிருந்தவர்களிடம், 'நான் இறைவன் மீது ஆணையாக மக்காவை (கஅபாவை) முன்னோக்கி இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் சேர்ந்து தொழுதுவிட்டு வருகிறேன்' என்று கூறினார். உடனே மக்கள் (தொழுகையில்) அப்போதிருந்த நிலையிலிருந்த படியே கஅபாவை நோக்கித் திரும்பினார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பைத்துல் முகத்தஸை நோக்கித் தொழுது வந்தது யூதர்களுக்கும் ஏனைய வேதக்காரர்களுக்கும் மகிழ்ச்சியாகவே இருந்து வந்தது. (தொழுகையில்) தம் முகத்தை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கஅபா நோக்கித் திரும்பினார்கள். நபி(ஸல்) அவர்கள் பைத்துல் முகத்தஸை நோக்கித் தொழுது வந்தது யூதர்களுக்கும், மற்ற வேதக்காரர்களுக்கும் மகிழ்ச்சியாகவே இருந்து வந்தது. (தொழுகையில்) தம் முகத்தை நபி(ஸல்) அவர்கள் கஅபா நோக்கித் திருப்பிக் கொள்ள ஆரம்பித்ததும் அவர்கள் அதை வெறுக்க ஆரம்பித்தார்கள்.
மற்றோர் அறிவிப்பில், தொழுகையில் முன்னோக்கித் தொழும் திசையான கிப்லா மாற்றப்படுவதற்கு முன்னர் பைத்துல் முகத்தஸை நோக்கித் தொழுத காலத்திலேயே சிலர் இறந்துவிட்டனர்; சிலர் கொல்லப்பட்டுவிட்டனர். நாங்கள் அவர்களைப் பற்றி என்ன கூறுவது? என்று அறியாதவர்களாயிருந்தோம். அப்போது, 'உங்கள் நம்பிக்கையை அல்லாஹ் வீணாக்க மாட்டான்' என்ற வசனத்தை அல்லாஹ் அருளினான்! என்று காணப்படுகிறது" என பராவு அறிவித்தார்.
இங்கே ஈமான் எனும் நம்பிக்கை என்பது தொழுகையைக் குறிக்கிறது.