கல்வியின் சிறப்பு
(மூஸா(அலை) அவர்கள் ஓர் அடியாரைத் தேடிச் சென்றதாக அல்லாஹ் கூறும்) அடியார் யார்? என்பதில் இப்னு அப்பாஸும் ஹுர்ரு இப்னு கைஸு அல் பஸரிய்யு என்பாரும் தர்க்கித்தனர். அப்போது அந்த வழியாக உபை இப்னு கஅப்(ரலி) சென்றார்கள். அவரை இப்னு அப்பாஸ்(ரலி) அழைத்து, 'நானும் என்னுடைய இந்தத் தோழரும் மூஸா(அலை) யாரைச் சந்திக்கச் செல்வதற்கு இறைவனிடம் வழி காட்டும் படி கேட்டார்களோ அந்தத் தோழர் விஷயத்தில் (அவர் யார்? என்று) தர்க்கித்துக் கொண்டோம். நபி(ஸல்) அவர்கள் அது விஷயமாக எதுவும் கூறக் கேட்டிருக்கிறீர்களா?' என்று கேட்டதற்கு உபை இப்னு கஃபு(ரலி) 'ஆம்!' என்று கூறிவிட்டுத் தொடர்ந்து, 'மூஸா(அலை) அவர்கள் இஸ்ரவேலர்களின் பிரமுகர்களுக்கிடையில் இருந்த ஒரு சமயத்தில் ஒருவர் வந்தார். '(மூஸா அவர்களே!) உம்மைவிடச் சிறந்த அறிஞர் ஒருவரை நீர் அறிவீரா?' எனக் கேட்டார்! அதற்கு மூஸா(அலை) அவர்கள், 'இல்லை' என்றார்கள். அப்போது இறைவன் 'ஏன் இல்லை? என்னுடைய அடியார் கிழ்று இருக்கிறாரே!" என்று மூஸா(அலை) அவர்களுக்கு அறிவித்தான். உடனே மூஸா(அலை) அவர்கள் அவரைச் சந்திக்கும் வழி என்னவென்றும் இறைவனிடம் கேட்டார்கள். அதற்கு இறைவன் மீனை அவர்களுக்கொரு அடையாளமாக்கினான். மேலும் அவர்களிடம் கூறப்பட்டது. 'இந்த மீனை எங்கே நீர் தொலைத்து விடுகிறீரோ அங்கிருந்து வந்த வழியே திரும்பி விட வேண்டும்! அப்போது அவரை அங்கு நீர் சந்திப்பீர்" அது போன்று (தம்முடன் கொண்டு வந்த) மீன் கடலில் தொலைந்து போவதை எதிர் பார்த்தவர்களாகத் தம் பயணத்தைத் தொடர்ந்தார்கள்.
அப்போது மூஸா(அலை) அவர்களுடன் வந்த இளைஞர் 'நாம் ஒரு பாறை ஓரமாக ஓதுங்கியபோது அந்த இடத்தில் மீனை மறந்து விட்டேன். (உண்மையில்) நினைவுபடுத்துவதைவிட்டும் என்னை மறக்கடித்தவன் ஷைத்தானைத் தவிர வேறு யாருமில்லை' என்று மூஸா(அலை) அவர்களிடம் கூறியபோது 'அட! அது தானே நாம் தேடி வந்த அடையாளம்!' என்று மூஸா(அலை) அவர்கள் கூறிவிட்டு இருவருமாகத் தாம் வந்த வழியை நோக்கிப் பேசிக் கொண்டே திரும்பினார்கள். அங்கே கிள்று(அலை) அவர்களைக் கண்டார்கள். மூஸா, கிள்று இருவர் விஷயத்தைத்தான் அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்' என்று கூறினார்" என உபைதுல்லாஹ் இப்னு அப்தில்லாஹ் அறிவித்தார்.