ஈமான் எனும் இறைநம்பிக்கை

'நான் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களுடனிருந்தபோது அவர்கள் என்னைக் கட்டிலில் அமரச் செய்து, 'என்னிடம் நீர் (மொழி பெயர்ப்பாளராக) தங்கிவிடும். அதற்காக நான் என்னுடைய செல்வத்திலிருந்து உமக்கு ஒரு பங்கு தருகிறேன்' என்றார்கள். நான் அவர்களோடு இரண்டு மாதங்கள் தங்கினேன். பின்னர் அவர் என்னிடம், 'அப்துல் கைஸின் தூதுக் குழுவினர் நபி(ஸல்) அவர்களிடம் வந்தபோது, 'வந்திருக்கும் இம்மக்கள் யார்?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டதற்கு 'அவர்கள் ரபீஆ' வசம்சத்தினர் என்றார்கள். நபி(ஸல்) அவர்கள் 'வருக! வருக! உங்கள் வருகை நல் வருகையாகுக' என்று வரவேற்றார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நாங்கள் யுத்தம் தடை செய்யப்பட்ட மாதங்களிலே தவிர (வேறு மாதங்களில்) தங்களைச் சந்திக்க முடியாது. காரணம் எங்களுக்கும் தங்களுக்குடையில் இஸ்லாத்தை இதுவரை ஏற்றுக் கொள்ளாத 'முளர்' வம்சத்தினர். வாழ்கிறார்கள். எனவே திட்டவட்டமான சில கட்டளை எங்களுக்குக் கூறுங்கள். அவற்றை நாங்கள் (இங்கே வராமலே) எங்கள் பின்னால் தங்கிவிட்டவர்களுக்கு அறிவிப்போம். அதன் மூலம் நாங்களும் சுவர்க்கம் செல்வோம்' என்றார்கள். மேலும் நபி(ஸல்) அவர்களிடம் சில வகை பானங்களைப் பற்றியும் கேட்டபோது, நபி(ஸல்) அவர்கள் நான்கு காரியங்களை அவர்களிடம் ஏவினார்கள்; நான்கு காரியங்களை அவர்களுக்குத் தடை செய்தார்கள். அல்லாஹ் ஒருவனையே நம்புமாறு அவர்களுக்குக் கட்டளையிட்டு 'அல்லாஹ் ஒருவனை நம்புவது என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?' என்றும் கேட்டார்கள். அதற்கவர்கள், 'அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் தாம் நன்கு அறிந்தவர்கள்' என்றார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'வணங்கி வழிபடுவதற்குரிய இறைவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை என்றும் முஹம்மத் இறைத்தூதர் என்றும் உறுதியாக நம்புவது; தொழுகையை நிலை நிறுத்துவது; மேலும் ஸகாத் வழங்குவது; ரமலான் மாதம் நோன்பு நோற்பது; போரில் கிடைக்கும் பொருட்களிலிருந்து ஐந்தில் ஒரு பங்கை நீங்கள் வழங்குவது. மேலும் தடை செய்த நான்கு விஷயங்கள் (மது வைத்திருந்த) மண் சாடிகள், சுரைக் குடுக்கைகள், பேரீச்சை மரத்தின் அடிமரத்தைக் குடைந்து தயாரித்த மரப்பீப்பாய்கள், தார் பூசப்பட்ட பாத்திரங்கள். (பின்னர் இத்தடை அகற்றப்பட்டது) இவற்றை நன்கு மனதில் பதிய வைத்துக்கொண்டு (இங்கே வராதவர்களுக்கு) அறிவித்து விடுங்கள்' என்று கூறினார்கள்' என கூறினார்" என அபூ ஜம்ரா அறிவித்தார்