கல்வியின் சிறப்பு

பேரீச்ச மட்டை ஒன்றைக் கையில் ஊன்றியவர்களாக, நபி(ஸல்) அவர்கள் மதீனாவில் மக்கள் சஞ்சாரம் இல்லாத ஒரு பாழ் வெளியில் சென்றபோது அவர்களுடன் நானும் சென்று கொண்டிருந்தேன். அப்போது யூதர்களின் குழு ஒன்றை அவர்கள் கடந்து சென்றார்கள். அப்போது அவர்களில் ஒருவர் மற்றவரிடம் 'ரூஹை (உயிர்) பற்றி அவரிடம் கேளுங்கள்' என்றார். அவர்களின் இன்னொருவர் 'அவரிடம் அதைப் பற்றிக் கேட்காதீர்கள்; உங்களுக்குப் பிடிக்காத எதையும் அவர் சொல்லப் போவதில்லை' என்றார். அவர்களில் மற்றொருவரோ, '(இல்லை!) இறைவன் மீது ஆணையாக நாம் (அதைப் பற்றி) அவரிடம் கேட்டே விடுவோம்' என்றார். (முடிவில்) அவர்களில் ஒருவர் எழுந்து, 'அபுல் காஸிம் அவர்களே! ரூஹு என்றால் என்ன? என்று கேட்டார். உடனே நபி(ஸல்) அவர்கள் மெளனமானார்கள். 'அவர்களுக்கு இறைவனிடமிருந்து இப்போது செய்தி அறிவிக்கப்படுகிறது' என்று என்னுடைய மனதிற்குள் நினைத்தபடி நான் நின்று கொண்டிருந்தேன். (இறைச் செய்தி வரும்போது ஏற்படும் சிரமம் விலம்) அவர்கள் தெளிவடைந்தபோது '(நபியே!) உம்மிடம் அவர்கள் ரூஹைப் பற்றிக் கேட்டார்கள். ரூஹு என்பது என் இறைவனுடைய கட்டளையைச் சார்ந்ததாகும். ஞானத்தில் (மிகக்) குறைந்த அளவே தவிர அவர்கள் கொடுக்கப்படவில்லை என்று நீர் (பதில்) கூறும்!' (திருக்குர்ஆன் 17:85) என்று (திருக்குர்ஆன் வசனத்தை) கூறினார்கள்" என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
("ஞானத்தில் குறைந்த அளவே தவிர நீங்கள் கொடுக்கப்படவில்லை" என்று பரவலாக ஓதப்படுவதற்கு மாற்றமாக) 'அவர்கள் கொடுக்கப்படவில்லை" என்றே எங்கள் ஓதுதலில் காணப்படுகிறது என அஃமஷ் கூறினார்.