இறைச்செய்தியின் ஆரம்பம்
அவரசப்பட்டு உங்கள் நாவை அசைக்காதீர்கள்" (திருக்குர்ஆன் 75:16) என்ற திருக்குர்ஆன் வசனத்தை இப்னு அப்பாஸ்(ரலி) விளக்கும்போது, 'நபி(ஸல்) அவர்களுக்கு இறைச்செய்தி அருளப்படும்போது மிகுந்த சிரமம் ஏற்பட்டது. இது அவர்களின் உதடுகளை அவர்கள் அசைப்பதன் மூலம் புலனாயிற்று. 'வஹீ (இறைச்செய்தி)யை (மனனம் செய்ய) அவசரப்பட்டு உங்களுடைய நாவை அசைக்காதீர்கள். ஏனெனில் அதனை (உங்கள் நெஞ்சில்) ஒன்று சேர்ப்பதும் (உங்கள் நெஞ்சில்) ஒன்று சேர்ப்பதும் (உங்கள் நாவின் மூலம்) ஓத வைப்பதும் நம்முடைய பொறுப்பாகும். எனவே நாம் அதனைச் செவி தாழ்த்திக் கேட்பீராக - பின்னர் நீர் அதனை ஓதும்படிச் செய்வதும் நம்முடைய பொறுப்பாகும்" (திருக்குர்ஆன் 75:16-19) என்ற வசனங்களை அப்போது அல்லாஹ் அருளினான்' என்று கூறிவிட்டு, 'நபி(ஸல்) அவர்கள் தங்களின் இரண்டு உதடுகளை அசைத்தது போன்று அசைக்கிறேன்' என்று சொல்லித் தங்கள் இரண்டு உதடுகளையும் இப்னு அப்பாஸ்(ரலி) அசைத்துக் காட்டினார்கள்.
இந்த ஹதீஸை இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடமிருந்து ஸயீது இப்னு ஜுபைர் அறிவித்தபோது, 'இப்னு அப்பாஸ்(ரலி) தங்களின் இரண்டு உதடுகளையும் அசைத்தது போன்று அசைக்கிறேன்' என்று கூறி அசைத்துக் காட்டினார்கள்.
மேலும், இப்னு அப்பாஸ் தொடர்ந்து,
'அதன் பின்னர் நபி(ஸல்) அவர்களிடம் ஜிப்ரயீல்(அலை) வரும்போது (அவர்கள் ஓதுவதை) செவி தாழ்த்திக் கேட்பதை வழக்கமாக்கினார்கள். ஜிப்ரீல் சென்றதும் அவர்கள் ஓதியது போன்றே நபி(ஸல்) அவர்களும் ஓதினார்கள்" என ஸயீது இப்னு ஜுபைர் கூறினார்.